பிரம்ம முகூர்த்த வழிபாடு.. எந்த நிற திரியை பயன்படுத்தினால் என்ன பலன்?
பிரம்ம முகூர்த்த வழிபாடு என்பது அதிகாலை 3-4:30 மணிக்குள் செய்யப்படும் சக்திவாய்ந்த பூஜையாகும். இந்த நேரத்தில் செய்யும் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும் என நம்பப்படுகிறது. அந்த சமயத்தில் வீட்டு வாசலை சுத்தம் செய்து, கோலமிட்டு, விளக்கேற்றி பின் பூஜை செய்ய வேண்டும். விளக்கேற்ற பயன்படும் திரி நிறம் வேண்டுதலுக்கு ஏற்ப மாறுபடும்.

பிரம்ம முகூர்த்த வழிபாடு (Brahma Muhurta pooja)என்பது பலராலும் தற்காலத்தில் அதிகமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரம்ம முகூர்த்தம் நேரம் என்பது அதிகாலை 3 மணி முதல் 4:30 மணி வரை மட்டுமே என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இது மிகவும் அற்புதமான நேரமாக சாஸ்திரத்தில் பார்க்கப்படுகிறது. நம்முடைய வேண்டுதல்கள் விரைந்து நிறைவேற முக்கோடி தேவர்களும் இந்நேரத்தில் அருள் புரிவார்கள் என நம்பப்படுகிறது. இது தேவர்களும், அதிதேவதைகளும் பூலோகத்திற்கு உலா வரக் கூடிய நேரமாக பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் பிரதான வாசலை சுத்தம் செய்து கோலமிட்டு நிலை வாசலில் விளக்கேற்ற வேண்டும். அதன் பிறகு தான் பூஜையறையில் (Pooja Room) விளக்கேற்றி வழிபட வேண்டும். இந்த நேரத்தில் நாம் வேண்டிக் கொண்டால் நினைத்தது விரைந்து நடக்கும் என்பதே பிரம்ம முகூர்த்தத்தில் சக்தியாக பார்க்கப்படுகிறது.
பிரம்ம முகூர்த்த நேரத்தில் பெண் மற்றும் ஆண் என யார் வேண்டுமானாலும் பூஜையறையில் தீபம் ஏற்று வழிபடலாம். பூஜை அறையில் எந்த பூ இருந்தாலும் அதனை வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். அந்த நேரத்தில் நைவைத்தியமாக எதுவும் செய்ய முடியாது என்பதால் கற்கண்டை வைத்து வழிபடலாம்.
எந்த நிற திரி பயன்படுத்தினால் சிறப்பு?
விளக்கேற்ற பயன்படும் திரிகளில் தற்போது வெவ்வேறு நிறங்கள் வந்துவிட்டது. அப்படி பார்த்தால் கடன் பிரச்சினைக்காக வழிபடுபவர்கள் 48 நாட்கள் தொடர்ந்து தீபம் ஏற்றி வழிபட்டால் இந்த பிரச்சனை ஓரளவு முடிவுக்கு வரும் என ஐதீகம் உள்ளது. பெண்களாக இருக்கும் பட்சத்தில் சிலருக்கு மாதவிடாய் மீது இருக்கும் கருத்தால் விளக்கேற்ற மாட்டார்கள். அவர்கள் அந்த மூன்று நாட்களை தவிர்த்து மற்ற நாட்களை கணக்கிட்டு விளக்கேற்றி வழிபடலாம்.
உங்களுக்கு கடன் பிரச்சினை இருந்தால் நீங்கள் சிவப்பு நிற திரி போட்டு விளக்கேற்றலாம். திருமண தடை இருப்பவர்கள் தாமரை தண்டு அல்லது மஞ்சள் நிற திரி போட்டு தீபம் ஏற்றலாம். மஞ்சள் குருவின் அம்சம் என்பதால் திருமண தடைகள் என்பது நம்பிக்கையாகும். குழந்தைப்பேறு தொடர்பாக வேண்டுதல் வைப்பவர்கள் பச்சை நிற திரியை பயன்படுத்தலாம். அதேபோல் தொழில், வியாபாரம் ஆகியவை மிகப்பெரிய நிலையை ஏற்ற இந்த திரி பயன்படுத்தி விளக்கேற்றி வழிபடலாம்.
வீட்டில் செல்வம் சேரவில்லை, சம்பாதிக்கும் பணம் உடனே கரைகிறது என வருந்தும் ஆன்மீக அன்பர்கள் தாமரை தண்டு விளக்கை பயன்படுத்தலாம்.உடல் நல பாதிப்பால் அவதிப்படுபவர்கள் பிரம்ம முகூர்த்தத்தில் வேண்டிக் கொள்ளும் போது பஞ்சு திரி அல்லது சிவப்பு நிறத்தில் பயன்படுத்தலாம். படிப்பு சார்ந்த விஷயமாக இருந்தால் பச்சை நிறத்திலேயே பயன்படுத்தலாம்.
கவனிக்க வேண்டியவை
நாம் மண் விளக்கு அல்லது காமாட்சி விளக்கு என எதை பயன்படுத்தினாலும் முதலில் எண்ணெய் ஊற்றி தான் திரி போட வேண்டும். ஒருவேளை எண்ணெய் இல்லை திரி மட்டுமே விளக்கில் இருக்கிறது என சூழல் இருந்தால் திரியை வெளியே எடுத்துவிட்டு எண்ணெய் ஊற்றி விட்டு அதன் பிறகு திரியை வைக்க வேண்டும். இரண்டு திரிகளை நன்றாக திரித்து ஒன்றாக்கி தீபம் ஏற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் ஒற்றை திரி இருக்கிறது என தீபம் ஏற்றக்கூடாது. அதேபோல் பூஜை அறையில் ஒற்றை தீபம் ஏற்றி வழிபடக்கூடாது. கண்டிப்பாக குறைந்தது இரண்டு தீபமாவது ஏற்ற வேண்டும்.
(இணையத்தில் பதிவிடப்படும் ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)