சிலிர்க்க வைத்த ராஜ ராஜேஸ்வரி அம்மன்.. தாரிணி பகிரும் ஆன்மிக அனுபவங்கள்!
நடிகை தாரணி அவரது ஆன்மீக அனுபவங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார். அதில் சிறுவயது முதலே தனக்கு விநாயகர் மீது கொண்ட அளவற்ற நம்பிக்கை இருந்ததாகவும், முருகன் பாடல்களை கேட்டு தான் ஒருநாளின் பணிகளை தொடங்குவேன் என்றும் கூறினார். மேலும் மெய்சிலிர்த்த காமாட்சி அம்மன் தரிசனம் மற்றும் ராஜ ராஜேஸ்வரி அம்மன் அனுபவம் உள்ளிட்டவற்றையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நடிகை தாரிணி
பெரியதிரை மற்றும் சின்னத்திரை ஆகிய இரண்டிலும் தனது நடிப்புத்திறமையால் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை தாரணி (Actress Dharini). அவர் நேர்காணல் ஒன்றில் தனக்கிருக்கும் ஆன்மிக அனுபவங்கள் (Spiritual Experience) பற்றி தெரிவித்திருந்தார். அதனைப் பற்றி காணலாம். அவனின்றி இந்த உலகில் ஒரு அணுவும் அசையாது என சொல்வார்கள். அந்த அவன் என்பது சக்தி என்றும், அன்பு என்றும் பொருள் கொள்ளலாம். சிறு வயதில் இருந்தே எனக்கு விநாயகர் (Lord Vinayagar) என்றால் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் எனக்கு 8 வயதாக இருக்கும்போது பிள்ளையார் என்ற ஒரு படம் போட்டார்கள். அதனைப் பார்த்து விட்டு வீட்டில் இருந்த சிறிய விநாயகர் சிலைக்கு வேஷ்டி அணிவித்து அபிஷேகம் எல்லாம் செய்தது இன்று நன்றாக நினைவிருக்கிறது. அதனால் பிள்ளையார் மீது அளவுகடந்த நம்பிக்கை உள்ளது. அதேசமயம் எல்லா சூழலிலும் இறைவன் எனக்கு துணையாக இருந்து காப்பாற்றியிருக்கிறார்.
எங்கும் நிறைந்தோனே எல்லை இலாதானே எங்கேயும் எப்போதும் என் குலம் காப்பவனே என ஒரு முருகன் பாடல் உண்டு. தினமும் காலையில் அதனைக் கேட்டு விட்டு தான் வேலைகளை தொடங்குவேன்.கடவுள் இருக்கா, இல்லையா என்பதற்கு நான் செல்லவில்லை. நமக்கு மேலே ஒரு சக்தி உள்ளது என்பது உண்மை.
தெய்வம் மனித ரூபத்தில் வந்து நமக்கு உதவி செய்யும் என சொல்வார்கள். அது உண்மை. புகைப்படத்தில் பார்ப்பதுபோல கிரீடம், ஆடை அணிகலன்கள் எல்லாம் வைத்துக் கொண்டு தெய்வம் நேரில் வராது. அப்படியே வந்தாலும் நாடக கம்பெனியில் இருந்து யாரும் வந்து விட்டார்களா என்று தான் நமக்கு தோன்றும்.
காமாட்சியை தரிசித்த தருணம்
நான் ரஜினி என்று ஒரு சீரியல் பண்ணேன். அதன் ஷூட்டிங் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. அப்போது கொரோனா நேரம் வேறு. எனக்கோ காமாட்சி அம்மனை பார்க்க வேண்டும் என்ற உள்ளுணர்வு இருந்தது. ஆனால் கட்டுப்பாடுகள் காரணமாக அப்போது 8 மணிக்கு கோயிலில் நடை சாற்றி விடுவார்கள். எனக்கோ 8 மணிக்கு ஷூட்டிங் முடியாது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன்.
இவ்வளவு தூரம் வந்து விட்டு காமாட்சியைப் பார்க்காமல் சென்றால் எப்படி என பரிதவித்தேன். அப்போது அந்த சீரியலில் உள்ளூரை சேர்ந்த துணை நடிகர் ஒருவர் வந்திருந்தார். அவர் என்னிடம் என் தம்பி கோயிலினுள் இருக்கிறான். இப்போது நீங்கள் வந்தால் ஒரு அரைமணி நேரத்தில் சாமி பார்த்து விட்டு வந்து விடலாம் என சொன்னார். எனக்கு அதைக்கேட்டு அதிர்ச்சியாக இருந்தது. சீரியல் இயக்குநரிடம் விஷயம் உள்ளே சரியாக அரை மணி நேரம் கிடைக்க, சூப்பராக தரிசனம் கிடைத்தது.
பொதுவாகவே கோயிலுக்குச் சென்று சாமியைப் பார்த்து நம்முடைய கஷ்டங்கள், சந்தோஷங்களைப் பகிர்ந்து கொள்வோம். நான் ஷூட்டிங் இருக்கும் காரணத்தால் கோயிலுக்கு செல்வது என்பது குறைந்து விட்டது. அதனால் வீட்டில் வழிபடுவேன். தினமும் காலையில் எழுந்து விளக்கேற்றி விட்டு தான் காபி உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் எடுத்துக் கொள்வேன். துர்க்கை, பைரவருக்கு விளக்கேற்றி வழிபடுவேன்.
சிலிர்க்க வைத்த ராஜ ராஜேஸ்வரி
இறைவன் என்பது சக்தி தான். அதை நாம் உருவமாகவும், உருவமில்லாமலும் காணலாம். மனதை ஒருநிலைப்படுத்தவும், முன்னோர்கள் கோயில்களை எதற்காக உருவாக்கிச் சென்றார்கள் என்பதை தெரிந்துக்கொண்டு செயல்படுங்கள். என்னைப் பொறுத்தவரை இறைவழிபாடு மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமான ஒன்றாகும்.
என்னுடைய இஷ்ட தெய்வம் ராஜ ராஜேஸ்வரி, வராஹி அம்மனாகும். சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு 2006 ஆம் ஆண்டு முதல்முறையாக சென்றேன். முதல் பார்வை அம்மனைப் பார்த்தால் அவள் என்னை பார்ப்பது போல இருந்ததைக் கண்டு உடலெல்லாம் சிலிர்த்து விட்டது. அன்று முதல் என் வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. அதன்பிறகு வராஹி அம்மன் என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகளால் உண்டான குழப்பங்களுக்கு தீர்வாக அமைந்தாள். அதேபோல் என் கணவர் வழி குலதெய்வமான மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு வருடா வருடம் தவறாமல் சென்று விடுவோம் என தாரிணி தெரிவித்திருந்தார்.