Sankatahara Chaturthi: விநாயகருக்கு உகந்த சங்கஹடசதுர்த்தி.. என்ன தானம் செய்யலாம்?

சங்கடஹர சதுர்த்தி ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தியன்று கொண்டாடப்படும் விநாயகருக்கு உகந்த பண்டிகையாகும். இந்த நாளில் விநாயகர் வழிபாடு, தான தர்மங்கள் செய்வதன் மூலம் தடைகளை நீக்கி, செழிப்பையும் மகிழ்ச்சியையும் பெறலாம் என்பது நம்பிக்கையாகும்.

Sankatahara Chaturthi: விநாயகருக்கு உகந்த சங்கஹடசதுர்த்தி.. என்ன தானம் செய்யலாம்?

விநாயகர்

Updated On: 

02 Apr 2025 16:15 PM

இந்து மதத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு கடவுளுக்கும் விசேஷமான நாட்கள் என ஒரு மாதத்தில் சில நாட்கள் குறிப்பிடப்படுவது உண்டு. அப்படிப்பட்ட வகையில் முதல் முதற்கடவுளாக வணங்கப்படுபவர் விநாயகர் (Lord Vinayagar). எந்தவொரு காரியம் என்றாலும் விநாயகரை வணங்கி விட்டு செய்தால் வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கையாகும். பலரும் பிள்ளையார் சுழி இல்லாமல் எதையும் செய்ய முன்வருவதில்லை. அப்படிப்பட்ட விநாயகருக்கு ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி (Vinayagar Chaturthi) பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். அப்போது ஒவ்வொரு கோயில்களிலும் வெவ்வேறு விதமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டும். அப்படிப்பட்ட விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாக சங்கடஹர சதுர்த்தி (Sankatahara Chaturthi) என்பது  உள்ளது. இது ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பக்‌ஷ (தேய்பிறை) சதுர்த்தி திதியில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடானது நடத்தப்படுகிறது.

ஒவ்வொருவரும் விநாயகப் பெருமானின் ஆசிகளைப் பெற வேண்டும் என நினைக்கிறார்கள். அப்படியானால் அவரை முறையான சடங்குகளுடன் வழிபட வேண்டும் என சாஸ்திரம் சொல்கிறது. விநாயகர் விக்னேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இதன் பொருள் தடைகளை நீக்குபவர் என்பது அர்த்தமாகும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடுவது வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்குகிறது. இந்த நாளில் விநாயகப் பெருமானை வழிபடுவது வீட்டிற்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருவதாகவும், குடும்ப உறுப்பினர்களிடையே மகிழ்ச்சியைத் தருவதாகவும் நம்பப்படுகிறது. பக்தர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற சங்கடஹர சதுர்த்தியன்று விரதத்தையும் கடைப்பிடிக்கின்றனர்.

ஒவ்வொரு மாதமும் வரும் இந்த நாளில், சந்திர உதயமாகும் மாலை நேரத்தில் விநாயகருக்கு பூஜை செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் நாம் என்ன பொருட்களை தானம் செய்யலாம் என்பது பற்றிக் காணலாம். இந்நாளில்  ஏழைகளுக்கும் தேவைப்படுபவர்களுக்கும் புதிய அல்லது சுத்தமான ஆடைகளை தானம் செய்யலாம். அதேபோல் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் பிற தானியங்களை தானம் செய்யலாம். மேலும் சங்கடஹர சதுர்த்தி பூஜையின் போது பழங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கி ஏழைகளுக்கு தானம் செய்வது நன்மை பயக்கும். பணம் இருப்பவர்கள் தேவைப்படுபவர்களுக்கும்  நன்கொடையாக வழங்கலாம்.

அதுமட்டுமல்லாமல் மாணவ, மாணவியர்களுக்கு புத்தகங்கள் மற்றும் பென்சில்கள், பேனாக்கள் போன்ற எழுதுபொருட்களை குழந்தைகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். பசுக்கள், நாய்கள் மற்றும் பிற விலங்குகளுக்கு சங்கடஹர சதுர்த்தி அன்று உணவை தானம் செய்யலாம். அதேசமயம் தாகமாக இருப்பவர்களுக்கு தண்ணீர் வழங்குவது மட்டுமின்றி கோடையில் தாகத்தைத் தணிக்க நல்ல தண்ணீர் பந்தல் அமைப்பதற்கும் உதவலாம். 
தேவைப்படுபவர்களுக்கு நீங்கள் குடைகள் அல்லது செருப்புகளை தானம் செய்யலாம்.

நம்மால் முடிந்த நெய் தானம் செய்வது வீட்டிற்கு நேர்மறை ஆற்றலைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. அதேசமயம் வெல்லம் தானம் செய்வது பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளித்து நல்ல அதிர்ஷ்டம் கொடுக்கும் என நம்பப்படுகிறது.

கவனத்தில் இருக்க வேண்டிய விஷயங்கள்

தானம் செய்யும்போது மனதில் சுயநலம் இருக்கக்கூடாது. எப்போதும் ஏழைகளுக்கு தானம் செய்வதில் கர்வம் வரக்கூடாது.  தானம் செய்யும்போது யாரையும் அவமதிக்கக்கூடாது. ஒருவர் தனது திறனுக்கு ஏற்ப தானம் செய்ய வேண்டும். கடன் வாங்கி செய்யக்கூடாது.  தர்மங்கள் ரகசியமாகச் செய்யப்பட வேண்டும்.சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகர் தான தர்மங்கள் செய்வதன் மூலம் மகிழ்ச்சியடைந்து பக்தர்களை ஆசீர்வதிப்பார் என்று நம்பப்படுகிறது. தானம் செய்வது மற்றவர்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், தானம் செய்பவருக்கு மன அமைதியையும் திருப்தியையும் தரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

(Disclaimer : இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. எந்த அறிவியல் ஆதாரம் மற்றும் விளக்கமும் இதற்கு இல்லை)