சாய்பாபா கொடுத்த ஆசீர்வாதம்.. நடிகை கௌதமி வாழ்க்கையில் நடந்த அதிசயம்!
பிரபல சீரியல் நடிகை கௌதமி, தனது ஆன்மீக அனுபவங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். சிறுவயதில் இருந்தே வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட தனக்கு சாய்பாபா மீதான நம்பிக்கை எப்படி ஏற்பட்டது என்றும், அதனால் நடந்த நம்ப முடியாத நிகழ்வு குறித்தும் தெரிவித்துள்ளார்.

என்னதான் பெரிய பிரபலமாக இருந்தாலும் ஒவ்வொருக்கும் கடவுள் நம்பிக்கை என்பது வெவ்வேறாக இருக்கும். சிலர் தாங்கள் சார்ந்த மதம் சார்ந்தும், சிலர் மற்ற மதங்களின் மீதும் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருப்பார்கள். அந்த வகையில் பெரிய திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் கலக்கி கொண்டுக்கும் நடிகை கௌதமி (Actress Gowthami Vembunathan) தன்னுடைய ஆன்மீக அனுபவத்தை (Spiritual Experience) நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார். அதனைப் பற்றி காணலாம். ஆதன் ஆன்மீக சேனலில் அவர் அளித்த பேட்டியில், “எனக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உள்ளது என்பதெல்லாம் கிடையாது. சிறுவயதாக இருக்கும் போதிலிருந்து சாமியை கும்பிட வேண்டும், வழிபாடு நடத்த வேண்டும் என சொல்லி சொல்லி வளர்த்தார்கள். அது ரத்தத்தில் ஊறியது போல மனப்பாடம் ஆகிவிட்டது. நான் நூறு சதவீதம் கடவுளை நம்புகிறேன். பிரபஞ்ச சக்தி (Universal Power) என்ற ஒன்று இருப்பதாக நினைக்கிறேன். அதனால் வீட்டில் வழிபாடு செய்வதை மட்டும்தான் எடுத்து சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டு வந்தேன்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பொதுவாக கோயில்களில் கடவுளுக்கு பூஜை தொடர்ச்சியாக செய்யப்பட்டு அதனால் கிடைக்கும் சக்தியானது அங்கு முழுவதும் நிறைந்திருக்கும். அதில் எந்த மாற்றமும் எனக்கு கிடையாது. அதே சமயம் எனக்கு பிரத்தியேகமாக இந்த கோயில் இந்த கடவுள் பிடிக்கும் என்பதெல்லாம் கிடையாது. எனக்கு விநாயகர் தான் மிகவும் பிடித்த கடவுள். அதே சமயம் குரு என்ற ரீதியில் பார்க்கும்போது ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.
கைகால சத்யநாராயணா கொடுத்த நம்பிக்கை
தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய நடிகரான கைகால சத்யநாராயணா உடன் நான் 1997 ஆம் ஆண்டு ஒரு படத்தில் நடித்தேன். நான் எப்போதும் ஷூட்டிங் ஸ்பாட்டில் மற்றவர்களுடன் கலகலப்பாக பேசி இருப்பேன். அப்படியாக ஒரு நாள் படப்பிடிப்பில் இருந்தபோது, சத்தியநாராயணா என்னிடம் வந்து நீ ஏன் சோகமாக இருக்கிறாய் என கேட்டார். அந்த வார்த்தையை கேட்டவுடன் நான் உடைந்து விட்டேன். நான் என்னுடைய பிரச்சனையை மறைத்துவிட்டு சிரித்த முகத்துடன் அப்படியெல்லாம் எதுவும் கிடையாது என சொன்னேன்.
தொடர்ந்து பேசிய சத்யநாராயணா, “நீ ரொம்ப கவலையுடன் இருக்கிறாய் என்பது தெரிகிறது. உன் மகனை நினைத்து கவலைப்படாதே. அதேபோல் நீயும் யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்காதே. உன்னை தேடி வாய்ப்பு வரும்” என சொன்னார். அப்போது அவர் என்னிடம் “நீ சாய்பாபாவை வணங்கு” என சொன்னார். நான் யார் அவர் என வெகுளியாக கேட்டேன். உடனே சீரடி சாய்பாபா பற்றி சொன்னார்.
அதற்கு நான் எனக்கு எந்த வழிபாட்டு மந்திரமும் சாய்பாபா பற்றி தெரியாது எனக் கூறினேன். உடனே சத்யநாராயணா என்னிடம் நீ ஒன்று மட்டும் செய். ஓம் என வரைந்து அதில் இரண்டு பூக்களை போட்டு வழிபாடு செய்து நைவேத்தியம் வைத்து வணங்கு என சொன்னார். கைகால நாராயணா சொன்ன ஒரு வியாழக்கிழமை இருந்து நான் ஓம் என வரைந்து சாய்பாபாவை வணங்கினேன். ஒரு பத்து நாட்கள் கழித்து நம்ப முடியாத ஒரு சம்பவம் நடைபெற்றது. ஏவிஎம் ஸ்டுடியோவில் ஒரு சீரியலுக்காக செல்லும்போது காலை நேரத்தில் வீட்டில் மேக்கப் செய்துகொள்ள முடிவெடுத்தேன்.
மேக்கப் பொருளில் தெரிந்த அதிசயம்
அதற்கான பொருட்களை பார்த்தபோது பேன் கேக் என்ற மேக்கப் பொருளில் ஏதோ எழுத்து மாதிரி இருந்தது. நான் சரியாக அதை துடைக்கவில்லை என நினைத்து துணியை வைத்து துடைத்துவிட்டு மேக்கப் பொருட்களை எடுத்துக் கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கிளம்பி விட்டேன். அங்கு சென்று பார்த்தாலும் அதே மாதிரி அதில் மீண்டும் எழுத்து தெரிகிறது. அது என்ன என்பது எனது அறிவுக்கு எட்டவில்லை.
காலையில் இந்த சம்பவம் நடந்த நிலையில் மீண்டும் மதிய நேரத்தில் மேக்கப் படுவதற்காக பொருளைத் திறந்தால் அதிலும் ஏதோ எழுத்து இருந்தது. அப்போதுதான் எனக்கு புரிந்தது. நான் வீட்டில் எந்த மாதிரி ஓம் என வரைந்தேனோ அது இருந்தது. இதனை பார்த்து சந்தோஷம் அடைந்த நான் வீட்டிற்கு வந்து குடும்பத்தாரிடம் தெரிவித்தேன் அப்போது தான் என்னுடைய மகள் நீ ஓம் போட்டு வழிபட்டு வருகிறாய். அதனால் சாய்பாபா உனக்கு ஆசி வழங்கியுள்ளார்” என சொன்னார்.