Sani Peyarchi 2025: சனிப்பெயர்ச்சியால் ரிஷப ராசியினருக்கு லாபமா? – ஜோதிட கணிப்பு என்ன?
சனி பெயர்ச்சி 2025 மார்ச் 29 அன்று நடைபெறுகிறது. சனி பகவான் கும்பத்திலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால் ரிஷப ராசிகாரர்களுக்கு லாப ஸ்தானத்தில் சனி அமைகிறார். இதனால் குடும்பத்தில் நிம்மதி, அதிர்ஷ்ட வாய்ப்புகள், பண வரவு அதிகரிப்பு உள்ளிட்டவை உருவாக வாய்ப்புள்ளது.

ரிஷப ராசிக்கான சனிப்பெயர்ச்சி கணிப்புகள்
ஜோதிடத்தைப் (Astrology) பொறுத்தவரை 9 கிரகங்கள் இருந்தாலும் அதில் சனி கிரகம் மட்டும் தான் ஒரு ராசியில் நீண்ட காலம் அதாவது இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார். இந்த காலம் முழுவதும் சம்பந்தப்பட்ட ராசியினர் மட்டுமின்றி பிற ராசியினருக்கும் நல்லது மற்றும் எதிர்மறை விஷயங்களும் நடைபெறலாம். அப்படியான சனிப்பெயர்ச்சி 2025 (Sani peyarchi 2025) ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முறை சனி பகவான் கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறார். இப்படியான நிலையில் சனிப்பெயர்ச்சியால் ரிஷபம் (Taurus) ராசிக்கு என்னென்ன விஷயங்கள் நடக்கும் என ஜோதிடத்தில் கணிக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பற்றிக் காணலாம்.
சனி பகவான் சனிப்பெயர்ச்சிக்கு பிறகு ரிஷப ராசியில் 11 வது இடத்தில் வந்து அமர்கிறார். அதனால் இந்த காலகட்டம் ரிஷப ராசியினருக்கு நல்லபடியாகவே அமையும். இதுவரை பத்தாவது இடத்தில் இருந்ததால் பல்வேறு விதமான கஷ்டங்களையும் அழுத்தங்களையும் ராசிக்காரர்கள் அனுபவித்திருக்கலாம். தற்போது அவர் லாப ஸ்தானத்தில் வந்து அமர உள்ளார். இதன் காரணமாக குடும்பத்தில் பிரச்சனைகள் நீங்கி நிம்மதி கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பண வரவு குறைவில்லாமல் இருக்கும்.
மதிப்பு உயரும்
நீண்ட காலத்திற்குப் பிறகு சேமிக்கும் எண்ணம் ஏற்படும். சமூகத்தில் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்களுடன் நட்பு உண்டாகும். குழந்தை பேறு கிடைக்க தெய்வத்தை வேண்டிய தம்பதியினருக்கு சிறப்பான செய்தி வந்து சேரும். திருமண வயதில் உள்ள பெண்களுக்கு மிகச் சிறப்பான முறையில் வரன் அமையும். நீண்ட காலமாக பிரச்சனையில் இருக்கும் கடன்கள் தீரும். பொது இடங்களில் உங்களுக்கான மதிப்புகள் அதிகரிக்கும்.
சனிபகவான் பெயர்ச்சி அடைவதால் டென்ஷன், கோபம் போன்றவை நீங்கும். சிலருக்கு உடல் நல பிரச்சனையில் ஏற்பட்ட பாதிப்புகள் சரியாகும். பிள்ளைகளின் வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய காலம் இதுவாகும். பூர்வீக சொத்துக்களில் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கலாம். சில நேரங்களில் வெளிநாட்டு பயணம் அமையும். வாகனங்களில் செல்லும்போதும் சாலையை கடக்கும் போதும் மிக கவனமாக இருக்க வேண்டும் இந்த வருடத்தில் ராகு மற்றும் கேது பெயர்ச்சி நடைபெறுகிறது. அதனால் கவலைப்பட வேண்டாம்.
புதிய வேலைவாய்ப்பு, வெளிநாடு செல்வது, திருமண முயற்சி, புதிய நட்பு ஆகியவை சிறப்பாக அமையும். எந்த ஒரு விஷயத்தையும் பக்குவத்தால் அணுக வேண்டும். நட்புக்காக எல்லாவற்றையும் செய்ய நினைக்க வேண்டாம். ரோகிணி, கார்த்திகை மற்றும் மிருகசீரிஷம் நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். குறிப்பாகஅரசியலில் இருப்பவர்களுக்கு நன்மைகள் கூடும். கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் வாழ்க்கையில் முன்னேற்றம் வந்து கொண்டே இருக்கும்.
பெண்களுக்கு சொத்துக்கள் வந்து சேரும்
தேர்வு காலம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ரிஷப ராசியை சேர்ந்த மாணவ மாணவியர்கள் அதிக மதிப்பெண் பெறக்கூடிய சூழல் உண்டாகும். வீட்டில் இருக்கும் திருமணமான பெண்களுக்கு அவர்கள் பிறந்த வீட்டிலிருந்து சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் பணியில் இருக்கும் பெண்களுக்கு ஊதிய உயர்வு நிச்சயம் இருக்கும். சிறு தொழில் செய்பவர்கள் அதனை விரிவாக மாற்றுவதற்கான முயற்சிகளை இந்த காலகட்டத்தில் எடுத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைக்கு அங்கீகாரம் கிடைப்பதோடு பங்குச் சந்தைகளில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சனிப்பெயர்ச்சி தொடர்ந்து கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அருகில் இருக்கும் கருமாரியம்மன் கோயில் அல்லது நாகாத்தம்மன் கோயிலில் வழிபாடு செய்ய வேண்டும். கோயில்களில் ராகு காலத்தில் இலுப்பை எண்ணெயில் தீபமிட்டு வழிபட்டால் துன்பங்கள் குறையும். அதேபோல் மிருகசீரிடம் ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வியாழக்கிழமை தோறும் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடலாம்.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக தகவல்கள் அடிப்படையிலான நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்தவொரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)