Rama Navami: ராமர் அவதரித்த தினம்.. அதன் வரலாறு தெரியுமா?
ஸ்ரீராமரின் பிறப்பு என்பது விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகும். நீதி, தர்மம் ஆகியவற்றின் சின்னமான இந்நாள், இந்தியா முழுவதும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு ராம நவமி எப்போது, அதன் முக்கியத்துவம் மற்றும் வழிபட உகந்த நேரம் ஆகியவைப் பற்றி நாம் காணலாம்.

ராம நவமி தேதி மற்றும் முக்கியத்துவம்
திருமாலான விஷ்ணு புராணங்களின் படி தசாவதாரம் (10 அவதாரம்) எடுத்ததாக நம்பப்படுகிறது. மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமர், ராமன், பலராமர், கிருஷ்ணர் மற்றும் புத்தர் ஆகியவை தான் இவையாகும். இதில் 7வது அவதாரமாக உள்ள ராமர் (Lord Ramar) அவதரித்த தினமே ராம நவமியாக (Rama Navami) கொண்டாடப்படுகிறது. இந்து நாட்காட்டியின்படி பங்குனி மாதம் வரும் அமாவாசை தொடங்கி 9 ஆம் நாளில் வரும் நவமி திதி ராம நவமியாக கொண்டாடப்படுகிறது. நீதி, தர்மம், எப்போதும் நன்மைகளை வலியுறுத்தக்கூடிய ராமரின் குணங்களைப் போற்றும் வகையில் இந்த தினமானது கொண்டாடப்படுகிறது.
இந்தியா முழுவதும் ராம நவமி வெகு விமரிசியாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமர் திரேதா யுகம் என்ற சகாப்தத்தில் தோன்றினார். அவர் அயோத்தி மன்னர் தசரதரின் மூத்த மகன் ஆவார். தசரத மன்னருக்கு கௌசலேயா, சுமித்ரா மற்றும் கைகேயி என்ற மூன்று ராணிகள் இருந்தனர். நீண்ட காலமாக ராணிகள் கருத்தரிக்க முடியாமல் வருத்தத்தில் இருந்தனர்.
ராம அவதாரம்
அப்போது வசிஷ்ட முனிவர் பரிந்துரைத்த புத்திரமேஷ்டி ஹவனத்தை மன்னர் தசரத மன்னர் செய்தார். இதனையடுத்து தசரத மன்னருக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தன. கௌசலையர் ராமரையும், கைகேயி பரதனையும், சுமித்ரா லட்சுமணன், சத்ருகன் ஆகியோரையும் பெற்றெடுத்தார். அதனால் தான் இந்த நாள் ஒரு குறிப்பிடத்தக்க பண்டிகையாக கருதப்படுகிறது.
ராமரின் பிறப்பைக் கொண்டாடும் இந்த வேளையில் ராம நவமியின் உண்மையான முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பண்டைய வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 16 வெவ்வேறு குணங்களை ராமர் கொண்டிருந்தார். நல்லொழுக்கம், நம்பிக்கை, நன்றியுணர்வு, உண்மையுள்ளவர், கோபத்தை வெல்பவர், உறுதி மனப்பான்மை உடையவர் உள்ளிட்டவை அதில் அடங்கும்.
புராணங்களின்படி, அநீதியை அழிக்கவும், ராவணனின் அட்டூழியங்களை முடிவுக்குக் கொண்டுவரவும், தர்மத்தை நிலைநாட்டவும் விஷ்ணு ராம நவமி நாளில் ராமராக அவதாரம் எடுத்தார் என சொல்லப்படுகிறது. இத்தகைய பண்டிகை 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு அது இன்னும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக மாறியுள்ளது.
ராம நவமி எப்போது?
நவமி திதி ஏப்ரல் 5 ஆம் தேதி மதியம் 1.08 மணி முதல் தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 12.27 வரை உள்ளது. ஆனால் சூரிய உதயம் கணக்கில் கொள்ளப்படும் என்பதால் ஏப்ரல் 6 ஆம் தேதி ராம நவமியானது கொண்டாடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இப்பண்டிகை வரும் நிலையில் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரையும், காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையும் இறை வழிபாடு மேற்கொள்ளலாம். ராமர் வழிபாட்டின்போது பக்தி பாடல்கள் பாடலாம். ராம நாமம் சொல்லி வழிபடலாம். இன்றைய நாளில் அவருக்கு பிடித்த உணவுகளைப் படைத்து வணங்கலாம். முக்கியத்துவம் தெரியாமல் எந்த பண்டிகையும் நாம் கொண்டாடக்கூடாது. ராமரின் அனுக்கிரகம் நமக்கு கிடைக்க சிலர் இந்நாளில் விரதமும் மேற்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
(Disclaimer: இந்தக் கட்டுரை இணையத்தில் உலா வரும் ஆன்மிக தகவல்களின் அடிப்படையில் மட்டுமே எழுதப்பட்டது. இதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இல்லை)