ராகு- கேது பெயர்ச்சி.. வழிபட வேண்டிய கோயில், பொதுப்பலன்கள் இதோ!
2025 ஏப்ரல் 26 அன்று ராகு கேது பெயர்ச்சி நிகழ்கிறது. கேது கன்னியிலிருந்து சிம்மத்திற்கும், ராகு மீனத்திலிருந்து கும்பத்திற்கும் பெயர்கிறது. இதனால் அரசியல் பிரச்சனைகள், அதிக வெப்பம், பணப்புழக்கத்தில் சீரான நிலை, கல்வியில் சில ராசிகளுக்குத் தொய்வு, கணவன்-மனைவி உறவில் அன்பு அதிகரிப்பு, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்ற மாற்றங்கள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகு கேது பெயர்ச்சி
ஜோதிடத்தின்படி (Astrology) கிரகங்களின் பெயர்ச்சி என்பது மனித வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து முன்னோக்கியும் பின்னோக்கியும் பெயர்ச்சி அடைகிறது. அந்த வகையில் ஜோதிடத்தில் சர்ப்ப கிரகங்கள் மற்றும் நிழல் கிரகங்கள் என அழைக்கப்படும் ராகு மற்றும் கேது ஆகிய இரு கிரகங்கள் 2025 ஏப்ரல் 26 ஆம் தேதி பெயர்ச்சி அடைகிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி அன்றைய தினம் மாலை 4:20 மணிக்கு கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும், ராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும் இடம் பெயர்கிறார்கள். இதில் கும்ப ராசி சனியை அதிபதியாகக் கொண்டது. சிம்ம ராசி சூரியனை அதிபதியாகக் கொண்டது. அதே சமயம் ராகு மற்றும் கேது கிரகங்களுக்கு ஒரு நிலையான காரகத்துவம் கிடையாது. அதனால் அவர்கள் எந்த ராசியில் இடம்பெயர்கலோ அந்த ராசியின் அதிபதிக்குரிய சக்திகளை பெறுவதாக உள்ளார்கள். இத்தகைய ராகு கேது பெயர்ச்சியால் (Rahu Ketu Peyarchi) என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது பற்றி நாம் காணலாம்.
சமூகத்தைப் பொறுத்தவரை மிகப் பெரிய அரசியல் பிரச்சனை ஒன்று வெடிக்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல் இந்த வருடம் வெப்பம் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பணப்புழக்கம் 12 ராசிக்காரர்களிடமும் சீரான வகையில் இருக்கும் எனவும், கல்வி சார்ந்த விஷயங்களில் சில ராசிக்காரர்களுக்கு தொய்வு ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கணவன் – மனைவி உறவில் அன்பு அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி பெறும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். உலக அளவில் ஆன்மீகம் அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி பயணிக்கும்.
ராகுவும் கேதுவும் நாகம் சம்பந்தப்பட்ட கிரகங்கள் என்பதால் அடிக்கடி நாக தேவதை கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வது சிறந்தது என சொல்லப்பட்டுள்ளது. அதே சமயம் ராகுவிற்கு துர்க்கை அம்சம் உள்ள அம்மனையும் கேதுவிற்கு விநாயகர் மற்றும் ஆஞ்சநேயரையும் வழிபட்டு வருவது நன்மை பயக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியினால் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் துலாம் விருச்சிகம் மகரம் கும்பம் மீனம் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் எனவும் கூறப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை ராகு-கேது பெயர்ச்சிக்கான பரிகாரத்தலமாக கும்பகோணம் அருகே அமைந்துள்ள திருநாகேஸ்வரத்தில் கோயில் கொண்டிருக்கும் நாகநாத சுவாமி ஆலயம் திகழ்கிறது. இங்கு ராகு பகவான் தனி சன்னதியில் மங்கள ராகுவாக அருள்பாலித்து வருகிறார். நவகிரக தலங்களில் ராகு பகவானுக்குரிய பரிகார தளமாக இந்த கோயில் திகழ்கிறது. ராகுபகவான் 18 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
(இந்த செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் ஆன்மிக நம்பிக்கையின்படி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்தவித அறிவியல் விளக்கமும் இல்லை)