Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Lakshmi Hyakreevar: பலன்களை அள்ளிக்கொடுக்கும் லட்சுமி ஹயக்ரீவர் கோயில்!

புதுச்சேரி முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோயில், விஷ்ணுவின் ஞான அவதாரமான ஹயக்ரீவரின் சிறப்புகளை விவரிக்கிறது. அசுரர்களிடமிருந்து வேதங்களை மீட்ட ஹயக்ரீவர், மகாலட்சுமியுடன் இங்கு அருள்பாலிக்கிறார். சாளக்கிராமத்தால் ஆன மூலவர் சிலையும், கல்வி, ஞானம், குடும்ப ஒற்றுமை அருளும் இக்கோயில் சிறப்பு வாய்ந்தது.

Lakshmi Hyakreevar: பலன்களை அள்ளிக்கொடுக்கும் லட்சுமி ஹயக்ரீவர் கோயில்!
லட்சுமி ஹயக்ரீவர்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 08 Oct 2025 11:19 AM IST

விஷ்ணு தசாவதாரங்கள் எடுத்து உலகில் எங்கெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அங்கெல்லாம் நீதியை நிலைநாட்ட செய்தார் என புராணங்கள் தெரிவிக்கிறது. அப்படியான விஷ்ணுவின் ஒரு அவதாரமான ஹயக்ரீவரின் ஒரு வடிவம் தான் லட்சுமி ஹயக்ரீவர். அதாவது குதிரை முகமும் மனித உடலும் கொண்ட இந்த அவதாரமானது அசுரர்களுடன் போர் புரிந்த பிறகு விஷ்ணு பகவான் சாந்தமடைய மகாலட்சுமியை அவர் மடியில் அமர வைத்ததன் மூலம் உருவானதாக சொல்லப்படுகிறது. இப்படியான லட்சுமி ஹயக்ரீவர் கோயில் புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த கோயிலின் சிறப்புகள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

கோயிலின் புராண வரலாறு

பிரளய காலத்தில் உலகையும் மக்களையும் காப்பதற்காக விஷ்ணு பகவான் அவர்களை தன் உள்ளே தாங்கி ஆளிலை மேல் பாலகனாய் பிரளய கால சமுத்திரத்தின் மேல் யோக நித்திரை செய்து வந்தார். பின்னர் இந்த உலகை படைப்பதற்காக பிரம்மனை நாபிகமலத்திலிருந்து உருவாக்கி அவருக்கு நான்கு வேதங்களையும் உபதேசம் செய்தார்.

பிரம்மனும் படைப்பு தொழிலை ஆரம்பித்த நிலையில் ஒருமுறை பெருமாளின் நாவி கமலத்தில் உள்ள ஓர் இதழில் இரண்டு தண்ணீர் திவலைகள் தோன்றி அசுரர்களாக மாறினர். மது, கைடபன் என பெயர் பெற்ற அவர்கள் இருவரும் பெருமாளிடம் இருந்து தோன்றிய தைரியத்தில் பிரம்மன் வசம் இருந்த வேதங்களை அபகரித்து தாங்களே படைப்பு தொழில் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டனர்.

இதையும் படிங்க:  வேண்டிய வரம் அருளும் கூடலூர் அழகிய பெருமாள் கோயில்!

குதிரை முகம் கொண்டு பிரம்ம தேவரிடமிருந்து வேதத்தை பறித்து அதனை பாதாளத்தில் ஒளித்து வைத்தனர்.  இதனைத் தொடர்ந்து பிரம்மன் விஷ்ணு பகவானிடம் நடந்ததைச் சொல்லி சரணடைந்தார். வேதங்களை மீட்கும் பொருட்டு விஷ்ணு பகவான் பாதாள உலகம் வர அங்கு அசரர்கள் குதிரை வடிவில் இருப்பதை கண்டார். உடனே தானும் குதிரை முகம் கொண்டு அவர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்தார்.

அப்போது விஷ்ணு பகவான் உக்கிரமாக இருந்ததாகவும் அவரை குளிர்விக்க மகாலட்சுமி அவரது மடியில் ஸ்தாபிதம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. வேதங்களை மீட்டவர் என்பதால் இந்த லட்சுமி ஹயக்ரீவர் கல்வியின் தெய்வமாக பார்க்கப்படுகிறார்.

இதையும் படிங்க: பெருமாள் கோயிலில் நந்தி சிலை.. இந்த கோயிலின் சிறப்பு தெரியுமா?

கோயிலின் சிறப்புகள்

இந்த கோயிலில் பெருமாள் தன்னுடைய வலது கண்ணால் பக்தர்களையும், இடது கண் மூலம் லட்சுமியையும் பார்ப்பதாக உள்ளது. அதை போல் தயாரான மகாலட்சுமி வலது கண்ணால் பெருமாளையும், இடது கண்ணால் பக்தர்களையும் பார்க்கும் காட்சி மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் கோமளவல்லி தாயார் இடம் ஞானப்பால் அருந்திய லட்சுமி குமார தாத்த தேசிகர் இந்த கோயிலில் அருள் பாலிக்கிறார்.

இவர் ராமாயணத்தை இடைவிடாது பாராயணம் செய்து அனுமனை தரிசித்ததாக புராணம் தெரிவிக்கிறது. தினமும் காலை மற்றும் மாலை வேளையில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் இங்கு வந்து ஹயக்ரீவர் கூறிய ஸ்லோகத்தை சொல்லி பிரார்த்தனை செய்கின்றனர்.

இந்த லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் சிலையானது சாளக்கிராமத்தால் ஆனது. ஹயக்ரீவரின் இடதுகை தாயாரையும், தாயாரின் வலது கை ஹயக்ரீவரையும் ஆலிங்கனம் செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக மட்டுமே ஹயக்ரீவரை ஆலிங்கனம் செய்த நிலையில் சிலைகள் வடிக்கப்படுவது வழக்கமாகும். இப்படி இருவரையும் வணங்கும் தம்பதியினர் இல்வாழ்க்கையில் சிறந்து ஒற்றுமையுடன் திகழ்வார் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது .

இந்த கோயில் அனைத்து தினமும் காலை 8  மணி முதல் 11 மணி வரையும், மாலையில் 6  மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இந்த கோயிலில் ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் தேர்தல் நடைபெறும் பத்து நாட்கள் நடைபெறும். இந்த திருவிழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சிறப்புறுவார்கள். நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு பலன்களைப் பெறுங்கள்.

(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரை தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அதிகாரப்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)