தமிழ்நாட்டில் 2 இடங்களில் தனி கோயில்களில் எழுந்தருளியுள்ள சரஸ்வதி தேவி!
கல்வி மற்றும் ஞானத்தின் அதிபதியான சரஸ்வதி தேவிக்கு நவராத்திரி விழாவின் கடைசி நாளில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. தமிழகத்தில் அரிதாக இரண்டு இடங்களில் தனிச்சிறப்புமிக்க சரஸ்வதி கோயில்கள் அமைந்துள்ளன. ருவாரூர் மாவட்டம் கூத்தனூர் மற்றும் திருநெல்வேலியில் அமைந்திருக்கும் கோயில்கள் பற்றிக் காணலாம்.
சரஸ்வதி தேவி முப்பெரும் தேவியர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இவர் இந்து மத சாஸ்திரத்தின்படி கல்வி மற்றும் ஞானத்தின் அதிபதியாக திகழ்கிறார். இவர் கலைமகள் எனவும் அழைக்கப்படுகிறார். பேச்சுக்கலையின் தேவதையாக அறியப்படும் சரஸ்வதி தேவிக்கு ஆண்டுதோறும் நவராத்திரி விழாவின் 10ம் நாள் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இந்நாள் அனைவராலும் சரஸ்வதி பூஜை என அழைக்கப்படுகிறது. வெண்பட்டு உடுத்தி அழகிய தாமரை மலரில் அமர்ந்து காட்சியளிக்கும் அன்னையை புகைப்படத்தில் கண்டாலே நாம் மெய்சிலிர்த்து விடுவோம். சிவபெருமானிடம் இருந்து வெளிப்பட்டவர், பிரம்மாவின் நாவில் குடியிருப்பவர் என சரஸ்வதி தேவி சிறப்பிக்கப்படுகிறார். அதனால் தான் அனைத்து கோயில்களிலும் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். அப்படியான சரஸ்வதி தமிழ்நாட்டில் 2 இடங்களில் மட்டும் தனிக்கோயில் கொண்டு காட்சியளிக்கிறார்.அதனைப் பற்றி நாம் காணலாம்.
திருவாரூர் சரஸ்வதி அம்மன் கோயில்
திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் என்ற ஊரில் சரஸ்வதி தேவி தனி கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார் இக்கோயில் தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இரண்டாம் ராஜராஜ சோழனால் இந்த கோயில் அமைந்திருக்கும் ஊர் ஒட்டக்கூத்தர் புலவருக்கு தானமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் தான் இது கூத்தனூர் என அழைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: பித்ரு தோஷத்தை போக்கும் சீனிவாச பெருமாள்.. இந்த கோயில் தெரியுமா?
பிரம்மாவுக்கும் சரஸ்வதி தேவிக்கும் இடையே யாரால் இந்த சத்யலோகம் பெருமையடைகிறது என்ற வாதம் எழுந்தபோது இருவரும் ஒருவரை ஒருவர் சபித்துக் கொண்டனர். இருவரும் பூலோகத்தில் ஓர் அந்தண தம்பதியினருக்கு மகன் மற்றும் மகளாக அவதரித்தனர். இருவருக்கும் திருமண வயது வந்த போதும் இவர்களுக்கு பெற்றோர்கள் வரன் தேடிய நிலையில் அவர்களுக்கு தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது.
சகோதர நிலையில் இருக்கும் தாங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்கும் என இருவரும் அஞ்சினர். உடனடியாக சிவபெருமானை நோக்கி வேண்டினர். அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான் இப்பிறவியில் சகோதர உறவில் தோன்றிய நீங்கள் திருமணம் செய்வது என்பது இயலாத காரியமாகும். அதனால் நீ மட்டும் இங்கேயே கோயில் கொண்டு பக்தர்களுக்கு கல்வி செல்வத்தை வழங்கி அருள் பாலிக்க வேண்டும் என கூறினார்.
இதையும் படிங்க: லட்சுமி தேவி ஆசீர்வாதம் வேண்டுமா? – இரவில் இதெல்லாம் செய்யுங்க!
அதன்படி இக்கோயிலில் கன்னி சரஸ்வதியாக தேவி அருள்பாலிப்பதாக ஐதீகமாக உள்ளது. மயிலாடுதுறை – திருவாரூர் வழித்தடத்தில் இந்த இடம் உள்ளது.
திருநெல்வேலி சரஸ்வதி அம்மன் கோயில்
அதே சமயம் திருநெல்வேலியில் அமைந்திருக்கும் சரஸ்வதி அம்மன் கோயில் தனியாரால் நிர்வகிக்கப்படும் ஒரு ஸ்தலமாக பார்க்கப்படுகிறது. இந்தக் கோயில் சரஸ்வதி பூஜை நாளை தவிர பிற நாட்களில் பெரிய அளவில் பக்தர்களால் வழிபடப்படுவதில்லை. நெல்லையப்பர் கோயில் வாயிலுக்கும், காந்திமதி அம்மன் கோயில் வாயிலுக்கும் நடுவில் எதிர்புறத்தில் சிறிய அளவில் இந்த கோயிலானது அமைந்திருக்கிறது. சரஸ்வதி பூஜை நாளில் உள்ளூர் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இக்கோயிலில் வழிபட்டு சரஸ்வதி தேவியின் அருளை பெற்று மகிழ்கின்றனர்.