மூகாம்பிகை தான் எல்லாம்.. இளையராஜாவின் ஆன்மிக அனுபவம்!
இசைஞானி இளையராஜா 1974ல் மைசூரில் இசைக்கச்சேரிக்குச் சென்றபோது ஏற்பட்ட கடுமையான காய்ச்சலில் இருந்து மூகாம்பிகை அம்மனின் அருளால் மீண்டதையும், கோயிலில் நடந்த அதிசயமான நிகழ்வுகளையும் நேர்காணலில் ஒன்றில் தெரிவித்துள்ளார். மூகாம்பிகை அம்மன் தனது சன்னதியில் என்னைப் பாட வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இளையராஜா
தமிழ் சினிமா ரசிகர்களால் இசைஞானி என அழைக்கப்படுபவர் இளையராஜா (Ilayaraaja). இவர் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆன்மிகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட இளையராஜா இன்றளவும் பல்வேறு ஊர்களின் கோயில்களுக்கும் சென்று வழிபாடு செய்து வருகிறார். இவை எல்லாவற்றையும் விட இளையராஜா எந்த இசைக்கச்சேரி சென்றாலும் அங்கு தாய் மூகாம்பிகைக்குரிய பாடலான “ஜனனி.. ஜனனி” பாடலை பாடாமல் இருந்தது இல்லை. அந்த அளவுக்கு அவரின் வாழ்க்கையில் மூகாம்பிகை அம்மன் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. அப்படியாக நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணலில் இளையராஜா மூகாம்பிகை (Kolluru Shri Mookambika Temple) உடனான பந்தம் குறித்து பேசியிருப்பார். அதனைப் பற்றி நாம் காணலாம்.
அந்த நேர்காணலில் பேசிய இளையராஜா, “1974 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் சினிமா இசை கச்சேரிக்காக ஒவ்வொரு ஊருக்காக செல்கிறோம். அப்போது எல்லா பின்னணி பாடகர் பாடகிகளும் வருகிறார்கள். நாங்கள் இசைக் குழுவில் 75 பேர் இருப்போம். நானும், எல்.வைத்தியநாதனும் ஜி.கே.வெங்கடேஷுக்கு உதவியாளராக பணியாற்றி வந்தோம். இந்த இசைக் குழுவை சேர்ந்தவர்களுக்கு நாங்கள் பயிற்சி கொடுப்பதாக இருந்தது. ஆனால் எல் வைத்தியநாதன் என்னிடம், ‘ராஜா நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்’ என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
மூகாம்பிகை கோயிலுக்கு செல்ல முடிவு
நானும் தனியாளாக கச்சேரிக்கான நோட்ஸ் எழுதி எல்லாம் முடிந்த பிறகு எனக்கு பயங்கரமாக காய்ச்சல் வந்துவிட்டது. அந்தக் கச்சேரி நடைபெறுவதற்கு முன் நானும், வைத்தியநாதனும் ஒரு விஷயம் குறித்து பேசிக்கொண்டோம். நான், ‘மைசூர் வரை வந்திருக்கிறோம் மந்திராலயம் போயிட்டு வருவோமா?’ என கேட்டேன். அதற்கு வைத்தியநாதன், ‘நான் மூகாம்பிகை கோயிலுக்கு செல்வதாக இருக்கிறேன். அடுத்த முறை நாம் மந்திராலயா செல்வோம்’ என தெரிவித்தார். நீங்களும் மூகாம்பிகை கோயிலுக்கு வருவதாக இருந்தால் வரலாம் என சொல்லவும் நானும் சரி போகலாம் என்று கூறிவிட்டேன்.
சோதனை செய்த அம்மன்
மைசூரில் உள்ள உட்லண்ட்ஸ் ஹோட்டலில் தான் ரூம் புக் செய்திருந்தனர். அங்கு மாடியில் எங்களுக்கான அறை இருந்தது. அரையினுள் ஜன்னல், தொலைபேசி வசதி என எதுவும் கிடையாது. கச்சேரி முடிந்த இரவு நாங்கள் அறைக்கு வந்து விட்டோம். மறுநாள் மாலையில் மைசூரில் இருந்து பெங்களூருக்கு ரயிலில் சென்று பின்பு சென்னை வரவேண்டும் என்ற திட்டமிருந்தது.
பகல் முழுக்க சும்மா இருக்க வேண்டும் என நினைத்து இசைக் குழுவை சேர்ந்தவர்கள் பிருந்தாவன் பார்க்க செல்லலாம் என்ற புறப்பட, அவர்களுடன் வைத்தியநாதனும் என்னை உள்ளே வைத்து அறையை பூட்டி விட்டு சாவியை எடுத்துச் சென்று விட்டார். அப்போது எனக்கு சரியான காய்ச்சல் அடித்துக் கொண்டிருந்தது. என் வாழ்க்கையில் அப்படி ஒரு காய்ச்சல் வந்து நான் பார்த்ததே இல்லை. இன்றைக்கு நாம் முடிந்து விட்டோம் என எண்ணி எனது அம்மா, மனைவி, குழந்தைகள் ஆகியோரை நினைத்துக் கொண்டிருந்தேன்.
நினைத்ததும் வந்த புத்துணர்ச்சி
மதியம் மூன்று மணி இருக்கும் சாயங்காலம் ரயிலுக்கு செல்ல வேண்டும் என பிருந்தாவன் பார்க்க சென்றிருந்த அனைவரும் திரும்பி வர உள்ளே நான் காய்ச்சலுடன் படுத்திருப்பதை கண்டு வைத்தியநாதன் அதிர்ச்சியஅடைந்தார். என்னிடம் மறந்து போய் பூட்டி விட்டு சென்றதாக கூறினார்.இதனைத் தொடர்ந்து அவர் என்னிடம், ‘ராஜா நீங்கள் மூகாம்பிகை கோயிலுக்கு வருவதாக சொன்னீர்களே?.. இப்போது உடல்நிலை இப்படி இருக்கிறதே?.. வர முடியுமா? என கேட்டார்.
நான் என்ன பதில் சொல்லலாம் என சிந்தித்து கொண்டிருக்கையில் எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. ஒருவேளை மூகாம்பிகை நம்மை சோதிக்கிறாளோ? என சந்தேகம் ஏற்பட்டது. செத்தாலும் மூகாம்பிகை கோயிலுக்கு சென்று சாகலாம் என முடிவு செய்துவிட்டேன்.
அந்த முடிவு எடுத்த ஐந்து நிமிடத்தில் குற்றால அருவியில் குளித்துவிட்டு வந்தது போல ஒரு புத்துணர்ச்சி எனக்குள் வந்தது. இத்தனைக்கும் நான் காய்ச்சல் இருக்கும்போது மாத்திரை, காபி என எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை.
கோயிலில் நடந்த அதிசயம்
பின்னர் மைசூரில் இருந்து கிளம்பி பேருந்து மூலம் பெங்களூரு சென்று மூகாம்பிகை கோயிலுக்கு சென்றோம். அந்தக் கோயிலினுள் காலடி எடுத்து வைக்கும் போது எனக்குள் ஏதோ உள்ளுணர்வு தோன்றியது. மூகாம்பிகை வழிபாடு செய்து விட்டு மூன்று முறை பிரகாரத்தை சுற்றி வருவதற்குள் என் மனம் முழுக்க அவளிடம் சரணடைந்தது. என்னுடன் வந்த வைத்தியநாதன் வயலின் கொண்டு வந்திருந்தார்.
இவர் மண்டபத்தில் அமர்ந்து வயலின் வாசிக்க தொடங்குகையில், அங்கிருந்த அம்பாள் ஊர்வலம் புறப்பட்டது. பின் கோயில் பிரகாரத்தைச் சுற்றி வந்து மண்டபத்தில் அம்பாள் சிலை மீண்டும் வைக்கப்பட்டது.
வைத்தியநாதன் தன்னுடைய வயலின் இசையை டேப்ரிக்கார்டரில் பதிவு செய்து கொண்டிருந்தார். பின்னர் அம்பாளுக்கு வழிபாடு நடைபெற்றது. அது முடிந்ததும் அங்கிருந்த அர்ச்சகர்கள் என்னை கைகாட்டி பாடு என சொன்னார்கள். நான் என்ன பாட என யோசித்து எனக்கு தெரிந்த இரண்டு கீர்த்தனைகள் பாடினேன்.
இதெல்லாம் முடிந்த பிறகு, ‘ராஜா நீங்க பாஸாகிட்டீங்க!’ என வைத்தியநாதன் சொல்கிறார். என்னவாக இருக்கும் என கேட்டேன். பின்னர் நாங்கள் தங்கியிருந்த அறைக்கு வந்தவுடன் அவர் விளக்கம் கொடுத்தார். நான் வயலின் இசைக்கும்போது அம்பாள் மண்டபத்தில் இல்லை. ஆனால் அவள் வந்த பிறகு உங்களை பாட வைத்து கேட்டு விட்டாள் என உற்சாகமாக வைத்தியநாதன் சொன்னார். மேலும் அந்த டேப்ரிக்கார்டரில் சரியாக நான் பாடி முடிந்ததும் பதிவு முடிந்து விட்டது” என இளையராஜா தெரிவித்திருப்பார்.