உலகிலேயே பெரிய முருகன் சிலை.. மாற்றம் பெறும் மருதமலை.. பக்தர்கள் மகிழ்ச்சி!

தமிழ்நாட்டில் மூன்று முருகன் கோயில்களில் பிரமாண்டமான சிலைகள் அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மருதமலை கோயில், ஈரோடு திண்டலில், ராணிப்பேட்டை குமரகிரியில் இந்த சிலைகளானது அமைக்கப்படும். மொத்த செலவு ரூ.146.83 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் மருதமலை சிலைக்கான செலவு மட்டும் ரூ.110 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே பெரிய முருகன் சிலை.. மாற்றம் பெறும் மருதமலை.. பக்தர்கள் மகிழ்ச்சி!

மருதமலை முருகன் கோயில்

Updated On: 

18 Apr 2025 13:04 PM

தமிழ்நாடு, ஏப்ரல் 18: தமிழ்நாட்டில் புகழ்பெற்ற முருகன் கோயில்களில் ஒன்றான மருதமலையில் பல்வேறு விதமான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்க் கடவுள் என கொண்டாடப்படுவர் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருகனுக்கு தமிழ்நாட்டில் அறுபடை கோயில்கள் உள்ளது. அதேசமயம் வெளிநாடுகளிலும் முருகனுக்கு தனி கோயில்கள் உள்ள நிலையில் மலேசியாவில் உள்ள பத்துகுகை முருகன் கோயிலில் நிறுவப்பட்ட சிலை தான் உலகிலேயே பெரிய முருகன் சிலை என்ற பெயரைப் பெற்றிருந்தது. அதன் உயரம் 140 அடியாகும்.

ஆனால் சேலத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு உயரமான முருகன் சிலை தனியாரால் நிர்வகிக்கப்படும் கோயிலில் நிறுவப்பட்டது. இதன் உயரம் 146 அடியாகும். இப்படியான நிலையில் தான் சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மீதான மானிய கோரிக்கை நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் சேகர் பாபு, தமிழ்நாட்டில் முருகனுக்கு மூன்று இடங்களில் சிலை நிறுவும் திட்டம் பற்றி அறிவித்தார்.

3 இடங்களில் நிறுவப்படும் சிலைகள்

அதன்படி கோயம்புத்தூரில் உள்ள மருதமலையில் 184 அடி உயரத்தில் உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலை நிறுவப்படும் என தெரிவித்தார். மருதமலையில் நிறுவப்பட இருக்கும் முருகன் சிலை ஒரு அறுகோண வடிவ வளாகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு அருங்காட்சியகம், வாகன நிறுத்துமிட வசதிகள் மற்றும் பிற அத்தியாவசிய வசதிகள் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஈரோடு மாவட்டம் திண்டலில் உள்ள வேலாயுதசுவாமி கோயிலில் ரூ.30 கோடி செலவில் 180 அடி உயரத்தில் இரண்டாவது சிலை அமைக்கப்படும் எனவும், ராணிப்பேட்டை மாவட்டம் குமரகிரியில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் 114 அடி உயரத்தில் உள்ள மூன்றாவது சிலை ரூ.6.83 கோடி செலவில் கட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருதமலை முருகன் கோயில்

இந்த மருதமலை உள்ளிட்ட மூன்று இடங்களில் நிறுவப்பட உள்ள முருகன் சிலைகளுக்கான மொத்த திட்ட செலவாக ரூ.146.83 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மருதமலை சிலைக்கு மட்டும் ரூ.110 கோடி செலவழிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையர் தெற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது மருதமலை. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற இந்த தளத்தில் வீற்றிருக்கும் முருகன் சுப்ரமணிய சுவாமி என்றும் மருதாச்சலம் மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். முருகப்பெருமானின் ஏழாவது படை வீடாக கருதப்படும் மருதமலையில் கடந்த 2025 ஏப்ரல் நான்காம் தேதி வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்கு முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன் சுயம்புலிங்க வடிவில் காட்சி தருகிறார்.

தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்டெடுத்தல், கோயில் கும்பாபிஷேகங்கள் அதிகரிப்பு, கோயில்களில் பிராமணரல்லாத அர்ச்சகர்களை நியமித்தல் உள்ளிட்ட சாதனைகள் துறை ரீதியாக நடைபெற்று வருவதாக அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இப்படியான நிலையில் முருகன் சிலை குறித்த அறிவிப்பு பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.