மதுரை சித்திரை திருவிழா.. கொடியேற்றம் முதல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் வரை!

2025 ஏப்ரல் 29 முதல் மே 17 வரை மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. கொடியேற்றம், பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் வைபவம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளின் தேதி, நேரம் ஆகியவை பற்றி பார்க்கலாம். இந்த திருவிழா தென்மாவட்டங்களின் மிக முக்கிய ஆன்மிக நிகழ்வாகும்.

மதுரை சித்திரை திருவிழா.. கொடியேற்றம் முதல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் வரை!

மதுரை சித்திரை திருவிழா

Published: 

28 Apr 2025 10:57 AM

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் (Madurai Meenakshi Amman Temple) சித்திரை திருவிழா 2025 (Chithirai Festival), ஏப்ரல் 29 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கும் நிலையில் 2025, மே 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம். மதுரை என்றாலே ஆன்மிக ரீதியாக திகழும் பல்வேறு தலங்கள் தான் நினைவுக்கு வரும். அதில் முதன்மையானது மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில். உலக அளவில் புகழ்பெற்ற இந்த கோயிலுக்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மீனாட்சியம்மன் கோயிலில் ஏராளமான திருவிழாக்கள் ஆண்டுதோறும் நடைபெற்றாலும் சித்திரை மாதத்தில் நடைபெறும் 20 நாட்கள் நடக்கும் திருவிழா மிகவும் பிரபலமானது.

மீனாட்சியம்மன் கோயிலில் சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் ஈசன் அருள்பாலிக்கிறார். சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் இக்கோயிலானது அமைந்துள்ளது. இந்த கோயிலில் 2025, ஏப்ரல் 29 ஆம் தேதி  சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த திருவிழா நாட்கள் முழுவதும் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

கொடியேற்ற நேரம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்சியானது சித்திரை மாதம் 16ஆம் தேதி அதாவது 2025 ஏப்ரல் 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணி முதல் 11:30 மணிக்குள் தங்கக்கொடி மரத்தில் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து தினமும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

பட்டாபிஷேகம் நிகழ்ச்சி

சித்திரை திருவிழாவில் 8ம் நாள் நிகழ்ச்சியாக மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். 2025, மே 6ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 7:35 மணிக்கு மேல் 7:59 மணிக்குள் அம்மனுக்கு சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் வைத்து விருச்சக லக்னத்தில் இந்த பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது மீனாட்சியம்மனுக்கு ராயர் கிரீடம் சாற்றப்பட்டு ரத்தினங்களால் இழைக்கப்பட்ட செங்கோல் கொடுக்கப்படும். இதன் மூலம் மதுரை மக்கள் புடைசூழ மீனாட்சியம்மன் பட்டத்து அரசியாக முடி சூட்டிக்கொண்டு பாரம்பரிய வேப்பம்பூ அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் நடந்த சித்திரை மாதம் தொடங்கி ஆவணி மாதம் வரை மதுரையில் மீனாட்சியம்மனின் ஆட்சி இருக்கும்.. அரசியாக நான்கு மாசி வீதிகளிலும் மீனாட்சியம்மன் வலம் வருவதை பார்க்க காண கண் கோடி வேண்டும் என சொல்வார்கள்.

திக் விஜயம்.. திருக்கல்யாணம்

இதைத்தொடர்ந்து 2025, மே 7ம் தேதி அதாவது ஒன்பதாம் நாள் திருவிழாவில் திக் விஜயம் நடைபெறும். அன்று மர வர்ண சப்பரத்தில் மீனாட்சியம்மன் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளிலும் வலம் வருவார்.  அதனை தொடர்ந்து கோயிலுக்கு திரும்பும் அம்மன் மீண்டும் மாலை 6 மணி அளவில் இந்திர விமான வாகனத்தில் வலம் வந்து அருள்பாலிப்பார்.

சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் உள்ளது. இந்தத் திருக்கல்யாண வைபவம் மேற்கு ஆடி வீதியில் உள்ள பிரம்மாண்ட திருக்கல்யாணம் மண்டபத்தில் 2025, மே 10ம் தேதி நடைபெற உள்ளது.  வியாழக்கிழமை காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் ரிஷப லக்னத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெறும். பக்தர்களுக்கு திருமண கோலத்தில் தம்பதியினர் காட்சி கொடுப்பார்கள்.

சித்திரை திருவிழாவின் 11 ஆம் நாள் அதாவது 2025, மே 9ம் தேதி வெள்ளிக்கிழமை மீனாட்சியம்மன் கோயிலில் திருத்தேரோட்டம் நடைபெறும். அன்று காலை 5 மணி முதல் 5.29 மணிக்குள் மேஷ லக்னத்தில் திருத்தேரில் எழுந்தருளும் மீனாட்சிக்கு வழிபாடு நடத்தப்பட்டு 6.30 மணிக்கு பக்தர்களால் வடம் பிடித்து தேர் இழுக்கப்படும்.

கள்ளழகர் வைபவம்

2025, மே 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி மே 12ஆம் தேதி காலை வரை இரவு முழுவதும் கள்ளழகருக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் எதிர்சேவை நிகழ்வு நடைபெறும். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று சேர்ந்து கள்ளழகரை வரவேற்பார்கள். 2025, மே 12ஆம் தேதி சித்திரைத் திருவிழாவின் உச்சநிகழ்ச்சியாக கருதப்படும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு காலை 5.51 மணிக்கு தொடங்கி 6.10 மணிக்குள் நடைபெற உள்ளது.

பின்னர் 2025, மே 13ஆம் தேதி மண்டூக முனிவருக்கு அழகர் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், 2025, மே 15ஆம் தேதி மதுரையிலிருந்து அழகர் மலை நோக்கி கள்ளழகர் புறப்படும் நிகழ்வும் நடைபெறும். 2025, மே 17ஆம் தேதியோடு மதுரை சித்திரை திருவிழா நிறைவடைகிறது.