Hanuman Jayanthi: அனுமன் ஜெயந்தி விரதம் எப்படி இருக்கணும் தெரியுமா?
Hanuman Jayanthi Fasting: அனுமன் ஜெயந்தி அன்று உங்கள் ஊரில் அனைத்து கோயில்களிலும் வீற்றிருக்கும் அனுமன் சன்னதியில் ஏதேனும் ஒன்றுக்கு சென்று வழிபடுங்கள். நிச்சயம் அவரின் பலம், அர்ப்பணிப்பு, பொறுமை, தன்னம்பிக்கை உள்ளிட்டவை நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். இந்நாளில் நாம் விரதம் மேற்கொண்டாலும் எண்ணற்ற பலன்கள் கிடைக்கிறது என நம்பப்படுகிறது.

இராமாயணத்தில் (Ramayanam) பகவான் ராமரின் பக்தராகவும், வானரப்படையின் தலைவனாகவும் இருந்தவர் அனுமன் (Lord Hanuman). தெய்வத்தின் பக்தி இருந்தால் நம்மால் எல்லாம் செய்ய முடியும் என நிகழ்ச்சி காட்டியவர். இன்றுவரை பலரும் தெய்வத்தின் அருளானது ஒரு செயலை செய்ய தேவை என்பதை மெய்பித்து கொண்டிருப்பவர். சீரஞ்சிவி, அனுமன், மாருதி மற்றும் ஆஞ்சநேயர் என பல பெயர்களில் அழைக்கப்படும் அனுமனுக்கு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை “அனுமன் ஜெயந்தி” (Hanuman Jayanthi) பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மட்டும் மார்கழி மாதத்தில் வரும் அமாவாசையில் இப்பண்டிகை கொண்டாடப்படும். மற்ற மாநிலங்களில் பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் இந்த நிகழ்வானது பின்பற்றப்படுகிறது. அனுமனுக்கு என தனி பக்தர் கூட்டம் உள்ளது. இவர்கள் இந்நாளில் விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் பல்வேறு பலன்களைப் பெறுகிறார்கள் என நம்பப்படுகிறது.
இதிகாசங்களில் அனுமன் ஒரு சிறந்த ராம பக்தராக காட்டுகிறது. கடவுள் ராமர் மீதான அவரது அசைக்க முடியாத அன்பினால் சாத்தியமற்ற பல நிகழ்வுகளை செய்துக் காட்டுவதாக சொல்லப்பட்டுள்ளது. அவரது செயல்கள் நம்பிக்கையின் பலம் மற்றும் சவால்களை சமாளிப்பதில் மேற்கொள்ளும் உறுதியான அர்ப்பணிப்பை குறிப்பதால் அவர் காலத்தால் அழியாதவராக பார்க்கப்படுகிறார்.
2025 ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தி
2025 ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தியானது ஏப்ரல் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டில் பங்குனி மாதத்தில் வந்துள்ள இது சில நேரங்களில் சித்திரை மாதங்களிலும் வரும். பௌர்ணமி திதிyஐ பொறுத்தே அனுமன் ஜெயந்தியானது கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி 2025, ஏப்ரல் 12 ஆம் தேதி அதிகாலை 03:21 மணிக்கு அனுமன் ஜெயந்தி திதியானது தொடங்குகிறது. இது ஏப்ரல் 13 அன்று அதிகாலை 05:51 மணிக்கு முடிவடைகிறது.
விரதம் இருப்பது எப்படி?
பொதுவாகவே அனுமனை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் அனுமனுக்குரிய ஜெயந்தி என்று நாம் விரதம் இருந்து வழிபட்டால் சகல மங்களங்களும் நம் வாழ்க்கையில் நடைபெறும் என்றும் நினைத்த காரியம் கைகூடும் என்றும் ஐதீகமாக பார்க்கப்படுகிறது.
அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருக்க நினைப்பவர்கள் அதிகாலையிலேயே புனித நீராடி ராம நாமம் சொல்லி தான் விரதத்தை தொடங்க வேண்டும் என்பது சாஸ்திரமாகும். முடிந்தவரை அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோயிலுக்கு சென்று துளசி மாலை, வடை மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு ஆகியவை சாற்றி வழிபடலாம்.
வாலில் தான் பலம் அதிகம்
அனுமனுக்கு வாலில் தான் பலம் அதிகம் என்பதால் அங்கு நாம் குங்குமம் வைத்து வழிபடுவது மரபு. ராம நாமத்தையும் அனுமன் மந்திரத்தையும் உச்சரித்துக் கொண்டு வால் தோன்றும் இடத்தில் இருந்து தினமும் சந்தனம், குங்குமம் வைத்து வணங்கி வர வேண்டும். வாலின் நுனியை அடைந்ததும் மறுபடியும் அதை சுத்தப்படுத்தி மறுபடியும் முதலில் இருந்து பொட்டு வைக்க வேண்டும்.
ஒவ்வொரு முறையும் வால் நுனிக்கு அந்த பொட்டு வரும்போது அன்றைய நாள் வடை மாலை சாற்றி அனுமனை வழிபட வேண்டும். அதேசமயம் வீட்டில் இறை வழிபாட்டில் ஈடுபடும் அன்பர்கள் அவல், கடலை, பழம், பொறி, வெண்ணெய், சர்க்கரை, தேன், இளநீர், பானகம் போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.
அனுமன் ஜெயந்தி விரதத்தில் காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுக்க வேண்டும். உடல்நல பாதிக்கப்பட்டவர்கள் விரதம் இருக்க வேண்டும் நினைத்தால் மருத்துவர்களின் உரிய அறிவுரையோடு பால்,பழம் எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.
மாலையில் அனுமனின் மந்திரங்கள் சொல்லி இறை வழிபாடு செய்து விரதத்தை முடிக்க வேண்டும். விரத நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் புலம்ப வேண்டாம். முடிந்தவரை அணுமனை பற்றிய வரலாற்று கதைகளை படியுங்கள். இல்லாவிட்டால் அனுமனுக்குரிய ஸ்ரீ ராம ஜெயம் என்ற மந்திரத்தை தாளில் எழுதி மாலையாக கோருங்கள். இப்படி பல வழிகளில் நாம் அனுமனை தரிசித்தால் அவரின் ஆசிகள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
(இந்த தகவல்கள் இணையத்தில் உலா வரும் ஆன்மிக ரீதியிலான தகவல்கள் அடிப்படையில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளவைகளின் உண்மைகளின் துல்லியத்திற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)