Hanuman Temple: அமர்ந்த நிலையில் அனுமன்.. அர்ஜூன் கட்டிய கோயிலின் சிறப்புகள்!
நடிகர் அர்ஜுன் சென்னையில் கட்டிய பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் கோவிலின் சிறப்புகள் பற்றிக் காணலாம். 28 அடி உயரமுள்ள ஒற்றைக் கல் அனுமன் சிலையைக் காண அப்பகுதி மக்கள் அதிகளவில் வருகை தருகின்றனர். இந்த கோயிலானது நடிகர் அர்ஜூனின் நீண்ட நாள் கனவு என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

அர்ஜூனின் அனுமன் கோயில்
தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்கள் ஒவ்வொருவருக்கும் கடவுள் நம்பிக்கை குறித்து வெவ்வேறான கருத்துகள் இருக்கும். இன்னும் ஒருபடி மேலே போய் தனக்கும் கடவுளுக்குமான தொடர்பு குறித்து சில பிரபலங்கள் வெளிப்படையாகவே பேசுவார்கள். சிலர் தங்களது சொந்த செலவில் கோயில் கட்டியும் வழிபடுவார்கள். அப்படியாக சென்னையில் நடிகர் அர்ஜுன் (Arjun Sarja) கட்டிய அனுமன் கோயில் (Hanuman Temple) பற்றி நாம் காணலாம். இந்த கோயில் கட்டப்பட்டு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கொரோனா இரண்டாவது அலை கட்டுப்பாடுகள் காரணமாக மிக எளிமையான முறையிலேயே இந்த நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்த கோயிலானது பக்தர்கள் தரிசனத்துக்காக தினமும் காலை 7.30 மணி முதல் 11 மணி வரையும், மாலையில் 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் திறந்திருக்கும்.
2025 ஆம் ஆண்டுக்கான அனுமன் ஜெயந்தி (Hanuman Jayanthi) வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பக்தர்கள் பலரும் அனுமன் கோயிலுக்கு செல்ல முடிவெடுத்திருப்பார்கள். இப்படியான நிலையில் அர்ஜூன் கட்டிய அனுமன் கோயில் பற்றிக் காணலாம்.
அமர்ந்த நிலையில் இருக்கும் அனுமன்
சென்னை போரூரை அடுத்துள்ள கெருகம்பாக்கத்தில் உள்ள பாரதி நகர் பகுதியில் தான் இந்த கோயிலானது உள்ளது. நடிகர் அர்ஜூன் தீவிர அனுமன் பக்தராவார். அவரது படங்களில் கூட அனுமன் மீதான பக்தியை வெளிப்படுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அப்படியாக அவர் கட்டிய இந்த கோயிலில் அமர்ந்த நிலையில் காட்சி கொடுக்கும் அனுமன் சிலை ஒரே கல்லில் செய்யப்பட்டதாகும். அனுமனின் திருமேனியானது 28 அடி உயரமும், 17 அடி அகலமும் கொண்டது.
கர்நாடகா மாநிலம் கோயிரா என்ற கிராமத்தில் செய்யப்பட்ட இந்த அனுமன் சிலை சுமார் 200 டன் எடை கொண்டது. அங்கிருந்து ட்ரக்கில் எடுத்து வரப்பட்டது. நீண்டகாலமாக அனுமனுக்கு ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என நடிகர் அர்ஜுன் விருப்பம் கொண்டிருந்தார். அதன் வெளிப்பாடாகவே சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள தனது தோட்டத்தில் இந்த கோயிலை கட்டியுள்ளார்.
இந்த கோயிலுக்கு அஞ்சனாசுத ஸ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் என பெயரிடப்பட்டது. கிட்டத்தட்ட இந்தக் கோயில் கட்டுவதற்கு சுமார் 17 ஆண்டுகளாக திட்டமிட்டு இருந்ததாகவும் தன்னுடைய இந்த முயற்சிக்கு அம்மா, மனைவி மற்றும் மகள்கள் என குடும்பமே உறுதுணையாக இருந்ததை நினைத்து தான் பெருமை கொண்டதாகவும் அர்ஜுன் தெரிவித்திருந்தார். மேலும் கோயில் கட்டப் போகிறேன் என சொன்னவுடன் பலரும் அதற்கு ஆதரவும் பாராட்டும் தெரிவித்தனர். இதுவே எனக்கு மிகப்பெரிய தூண்டுதலாக அமைந்தது என இந்த கோயில் கும்பாபிஷேகம் நடந்த போது நடிகர் அர்ஜுன் தெரிவித்திருந்தார்.
கோயிலின் அயோத்தி மண்
பார்க்கவே மிக பிரம்மாண்டமாக இருக்கும் இந்த அனுமன் கோயிலில் ஸ்ரீ ராமர், நாகராஜர் விநாயகர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளது. எனக்குள் இருக்கும் ஒரு தெய்வீக சக்தி தான் இந்தக் கோயிலை கட்டக்கூடிய செயலை தூண்டில் என அர்ஜுன் தெரிவித்திருந்தார். மேலும் கோயிலில் அனுமன் சிலையை பிரதிஷ்டை செய்த பெஜாவர் ஸ்ரீ விஷ்ணு பிரசன்ன ஸ்வாமிகள் கும்பாபிஷேகத்திற்கு வருகை தருவதற்கும் முன்னர் அயோத்திக்கு சென்றிருந்தார. அங்கிருந்து எடுத்து வந்த மண்ணின் மீது தான் இந்த அனுமன் கோயிலில் உள்ள ஸ்ரீராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது.