Vastu Tips: சிறந்த கார் பராமரிப்புக்கான வாஸ்து டிப்ஸ் இதோ!
கார் வாஸ்து சாஸ்திரம், வாகனத்தின் பாதுகாப்பு மற்றும் நீண்ட ஆயுளை மேம்படுத்த உதவும் என நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கிழக்கு அல்லது வடக்கு திசையில் உங்களுடைய காரை நிறுத்துவது நல்லது எனவும் சொல்லப்படுகிறது. மேலும் காரின் உட்புறத்தை சுத்தமாகவும், வெப்பநிலையை சரியாகவும் பராமரிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காருக்கான வாஸ்து குறிப்புகள்
வாஸ்து சாஸ்திரம் (Vastu Shastra) என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று என சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றது. பஞ்ச பூதங்கள் என அழைக்கப்படும் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்தையும் நாம் சமமாக பாவித்து வழிநடக்கும்போது நம்முடைய வாழ்க்கையும் சீராகும் என நம்பப்படுகிறது. வாஸ்து சாஸ்திரம் பொதுவாக வீடுகள் மற்றும் அலுவலகங்களின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் வாழ்க்கையின் இன்னபிற விஷயங்களில் கூட இதனை பின்பற்றலாம் என சொல்லப்படுகிறது. அப்படியாக வாகனத்தின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நீண்ட ஆயுளை மேம்படுத்த உதவும் வகையில் கார் பராமரிப்புக்கான வாஸ்து குறிப்புகள் (Vastu Tips for Car) கணிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம்.
வாஸ்து சாஸ்திரங்களின்படி, நீங்கள் உங்கள் வீட்டில் காரை நிறுத்துவதற்கு சரியான மற்றும் சிறந்த திசை கிழக்கு அல்லது வடக்கு என சொல்லப்பட்டுள்ளது. ஏனென்றால் இரு திசைகளும் நேர்மறை ஆற்றல் மற்றும் செழிப்பு போன்ற விஷயங்களுடன் தொடர்புடையவையாகும். அதேசமயம் தெற்கு மற்றும் மேற்கு திசைகள் எதிர்மறை ஆற்றல் மற்றும் தடைகளுடன் தொடர்புடையவையாக கருதப்படுகிறது.
உங்களுடைய காரை நிறுத்தும்போது முடிந்தவரை தெற்கு அல்லது மேற்கு திசையில் நிறுத்த வேண்டாம். ஒருவேளை காரை கிழக்கு அல்லது வடக்கு திசையில் நிறுத்த முடியாத சூழல் உண்டானால், காரின் முன்பக்கமானது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்குமாறு வடகிழக்கு திசையில் நிறுத்தலாம் என சொல்லப்பட்டுள்ளது.
உட்புறத்தை சுத்தமாக வைக்கவும்.
காரின் உட்புறம் வீட்டின் உட்புறத்திற்கு சமமானது. அது அழகியல் ரீதியாக மகிழ்ச்சி அளிப்பது மட்டுமல்லாமல் காருக்குள் ஆற்றல் ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. எனவே வாஸ்து சாஸ்திரத்தின் படி கார் குப்பையாகவும், அழுக்காகவும் இருந்தால் அது எதிர்மறையான சூழ்நிலையை உருவாக்கும் என சொல்லப்படுகிறது.
ஆகவே உங்கள் காரின் உட்புறத்தை சுத்தமாகவும் சரியாகவும் வைத்திருக்க அங்கிருக்கும் பழைய செய்தித்தாள்கள், காலி தண்ணீர் பாட்டில்கள் அல்லது உணவு குப்பைகள் போன்ற தேவையற்ற பொருட்களை அகற்றி விடவும். தூசி மற்றும் அழுக்குகளை அகற்றி எப்போது பளீச்சென வைத்திருங்கள். இது நமக்கு மட்டுமல்லாமல் காரில் பயணிப்பவர்களுக்கும் பாசிட்டிவ் எண்ணங்களை உண்டாக்கும்.
வெப்பநிலையை பராமரிக்கவும்
உங்கள் காருக்குள் இருக்கும் வெப்பநிலை ஆற்றல் ஓட்டத்தையும் உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பாதிக்கக்கூடியதாக அமையும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, காருக்குள் ஒரு சரியான வெப்பநிலை இருப்பதை உறுதி செய்யவும். அது நேர்மறை ஆற்றலை ஊக்குவிப்பதோடு, காரில் இருப்பவர்களுக்கும் நிதானமான சூழ்நிலையை உண்டாக்கும்.
வாசனைத் திரவியங்கள்
வாசனை திரவியங்கள் உங்கள் காருக்குள் பயணிப்பவர்கள் பாசிட்டிவாக உணரவும், அமைதியான சூழ்நிலையை உருவாக்கவும் உதவும். எரிச்சலூட்டக்கூடிய வாசனை திரவியங்களைத் தவிர்ப்பது முக்கியம். ஏனெனில் அவை எதிர்மறையான சூழ்நிலையை உருவாக்கக்கூடும் என சொல்லப்படுகிறது.
சாப்பிட வேண்டாம்
பலருக்கும் காருக்குள் அமர்ந்து சாப்பிடுவது, குடிப்பது, தூங்குவது போன்ற பழக்கங்கள் உள்ளது. இதனை தவிர்க்க வேண்டும். இவை எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கும். அதேபோல் நன்கு பராமரிக்கப்படும் கார் நேர்மறை ஆற்றல் மற்றும் செழிப்புடன் வாழ வழி செய்யும். மோசமாக பராமரிக்கப்படும் கார் எதிர்மறை ஆற்றல் மற்றும் தடைகளுடன் தொடர்புடையதாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
(வாஸ்து சாஸ்திரத்தின் படி மேலே குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களுக்கு டிவி9 தமிழ் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது. இது இணையத்தில் உலா வரும் தகவல்கள் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது)