Saindhavi: சென்னையில் சைந்தவிக்கு மிகவும் பிடித்த கோயில்.. ஏன் தெரியுமா?

பிரபல பின்னணி பாடகியான சைந்தவி, தனது ஆன்மீக அனுபவங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். சிறு வயதிலிருந்தே தான் மிகப்பெரிய கடவுள் நம்பிக்கை கொண்டவர் எனவும், பாரம்பரிய வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுவதாகவும் கூறியுள்ளார். சாய்பாபா பக்தையான அவர், அடிக்கடி கோயிலுக்குச் செல்வதையும், அது தனது வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களைப் பற்றியும் விவரித்துள்ளார்.

Saindhavi: சென்னையில் சைந்தவிக்கு மிகவும் பிடித்த கோயில்.. ஏன் தெரியுமா?

சைந்தவி

Published: 

23 Apr 2025 17:27 PM

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி தனக்கென தனியிடம் பிடித்தவர் சைந்தவி (Saindhavi). இவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரை (G.v.Prakash Kumar) காதலித்து திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை உள்ளது. தற்போது இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டாலும் நட்புறவை பேணி வருகின்றனர். இப்படியான நிலையில் சைந்தவி சில ஆண்டுகளுக்கு முன் நேர்காணல் ஒன்றில் தன்னுடைய ஆன்மிக அனுபவங்கள் பற்றி பேசியிருப்பார். அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். அதாவது, “எனக்கு சிறுவயதிலிருந்தே கடவுள் நம்பிக்கை அதிகமாக உள்ளது. ஒரு பாரம்பரிய பின்னணியில்தான் நான் வளர்ந்தேன் என்பதால் வீட்டில் நடைபெறும் வழிபாட்டு முறைகள் பற்றி தெரியும். கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, வரலட்சுமி நோன்பு  என எந்த ஒரு பண்டிகை என்றாலும் வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள்.

எனக்கு சிறுவயதிலேயே ஸ்லோகம் சொல்லிக் கொடுத்து அதை உச்சரித்தால் நல்லது என தெரிவித்தார்கள். இதனால் அன்று ஏற்பட்ட நம்பிக்கை இன்று வரை தொடர்கிறது. நான் எதையெல்லாம் கற்றுக் கொண்டேனோ அதை எல்லாம் என்னுடைய மகளுக்கும் கற்றுக் கொடுக்கிறேன்” என கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், “எந்த விஷயம் தொடங்க வேண்டும் என்றாலும் துணியில் ஒரு ரூபாய் முடித்து வைப்பார்கள். அப்படி இல்லை என்றால் விநாயகரின் கீர்த்தனைகள் சொல்லிவிட்டு தான் தொடங்குவார்கள். அதேபோல் ஜிவி பிரகாஷ் வீட்டிலும் உள்ளவர்கள் கடவுள் வழிபாட்டில் அதிக நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். அவரது அப்பா தினமும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்” என சைந்தவி தெரிவித்துள்ளார்.

சாய்பாபாவின் பக்தையான தருணம்

மெலும், “நான் சீரடி சாய்பாபாவின் பக்தை. சில ஆண்டுகளாகவே மிக தீவிரமாக பின்பற்றி வருகிறேன். நிறைய பேர் பாபாவின் அற்புதங்கள் பற்றி பேசி கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த பக்தி முதலில் வியாழக்கிழமை தோறும் சாய்பாபா கோவிலுக்கு செல்லலாம் என்று தான் ஆரம்பித்தது. அதன்படி நானும் எனது அம்மாவும்  தி.நகரில் இருந்து மயிலாப்பூரில் இருக்கும் சாய்பாபா கோயில் வரை நடந்து செல்வோம். ஒரு நாள் ஜிவி பிரகாஷ் என்னிடம் எனக்கு வாக்கிங் போக வேண்டும் போல் இருக்கிறது. அதனால் நானும் வருகிறேன். ஆனால் நான் கோயிலுக்குள் வரமாட்டேன் எனக்கூறி வந்தார்.

அங்கு சென்றவுடன் ஜிவி பிரகாஷிடம் இவ்வளவு தூரம் வந்து விட்டீர்கள் உள்ளே வந்து சாய்பாபாவை வழிபாடு செய்து விட்டு செல்லுங்கள் என சொன்னேன். சரி என வந்து  உள்ளே தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்து நிற்கும்போது அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று வந்தது. அதன் பிறகு எப்போது கோயிலுக்கு சென்றாலும் அவருக்கு நல்ல செய்தி வருவது வழக்கமாக இருந்தது. அதைத் தொடர்ந்து அவரும் சாய்பாபா பக்தனாக மாறினார்.

அதேசமயம் தி.நகரில் இருக்கும் அகத்தியர் கோயில் எனக்கு மிகவும் பிடிக்கும். எப்போது அங்கு சென்றாலும் ஒரு மன அமைதி இருக்கும். அந்த கோயிலை சிறப்பாக நிர்வகித்திருப்பார்கள். அது ஒரு சின்ன கோயில் என்றாலும் எல்லா சன்னதிகளும் இருக்கும். எனக்கு தனிப்பட்ட முறையில் கடவுள் வழிபாடு, சடங்கு சம்பிராதாயங்களை பின்பற்றுவது மிகவும் பிடிக்கும்” என சைந்தவி தெரிவித்திருக்கிறார்.