திருத்தணி முருகன் கொடுத்த திருப்பம்.. நடிகை சரண்யாவுக்கு நடந்த அதிசயம்!
நடிகை காதல் சரண்யா திருத்தணி முருகன் கோவிலுக்குச் சென்றதன் மூலம் தன் வாழ்க்கையில் நடந்த திருப்பங்கள் பற்றி தெரிவித்துள்ளார். 2019ல் நடந்த இந்த நிகழ்வுக்கு காரணம் நடிகர் யோகிபாபு தான் எனவும் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை சரண்யா
மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஆன்மிகத்தில் வெவ்வேறான எண்ணங்கள் இருக்கும். சிலருக்கு வாழ்க்கையில் ஆன்மிகத்தை நாடும்போது பல்வேறு அதிசயங்கள் நடந்திருக்கலாம். அப்படிப்பட்ட நிலையில் காதல், பேராண்மை, மனதோடு மழைக்காலம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சரண்யா (Kadhal Saranya) திருத்தணி முருகனால் (Tiruttani Murugan Temple) தன் வாழ்க்கையில் நடந்த அதிசயங்களை நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அதனைப் பற்றிக் காணலாம். ஐபிசி பக்தி சேனலில் அவர் அளித்த பேட்டியில், “நான் வடபழனி கோயில் (Vadapalani Murugan Temple) அருகே தான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம். சிறு வயதில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அம்மாவுடன் கோயிலுக்கு செல்லும் வழக்கம் இருந்தது. இப்போது வடபழனி கோயிலில் நீங்கள் பார்க்கும் கூட்டமெல்லாம் அப்போது இருக்காது. அதனையடுத்து வாழ்க்கையில் திருப்பம் கொடுத்தது திருத்தணி கோயில் தான். நடிகர் யோகிபாபு ஒரு பேட்டியில் திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்று வந்த பிறகு தான் என் வாழ்க்கையே மாறியதாக சொன்னார். சரி சினிமாவுலகில் இருப்பவரே சொல்கிறார் என நினைத்து 2019ல் திருத்தணிக்கு போனேன். அப்போது என்னோட கையில் வெறும் ரூ.750 மட்டும் தான் இருந்தது. பொது போக்குவரத்தை பயன்படுத்தி போயிட்டு வந்தேன்” என தெரிவித்துள்ளார்.
அந்நேரம் எனக்கு தோலில் எனக்கு பிரச்னை இருந்தது. இதைப் பற்றி அங்கிருக்கும் குருக்களிடம் கேட்டேன். அவர்கள் பௌர்ணமி அன்றோ அல்லது தொடர்ந்து 7 செவ்வாய்கிழமை திருத்தணிக்கு வாங்க என சொன்னார். என்னால் எல்லா வாரமும் போகும் அளவுக்கு பொருளாதாரம் இல்லை. நான் மாதம் ஒருமுறை போவோம். அதுவும் பௌர்ணமி அன்று போலாம் என முடிவெடுத்தேன். நான் முதல்முறையாக திருத்தணி போயிட்டு வந்த பிறகு தோல் சம்பந்தப்பட்ட வியாதிக்கு மருந்து, மாத்திரை எதுவும் எடுக்கவில்லை. அது குணமானதை யாரிடம் சொன்னாலும் நம்ப மறுக்கிறார்கள்.
அதன்பின் தோலில் யாருக்காவது ஏதாவது பிரச்னை என்றால் திருத்தணி போயிட்டு வாங்க என சொல்கிறேன். 2019க்கு பிறகு வாழ்க்கையில் ஏற்பட்ட வளர்ச்சிக்கும் அவர் தான் காரணம். திருத்தணி வேல்மாறல் மந்திரம் இருக்கிறது என்பது எனக்கு தெரியாது. எதேச்சையாக வேல் மாறல் புத்தகம் பற்றி சொன்னார்கள். பின்னர் அதுதொடர்பான யூட்யூப் வீடியோக்களைப் பார்த்தேன். அதில் முதல் வார்த்தையே திருத்தணி என்று தான் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.
அதன்பின் வேல் மாறல் படித்த 15 நாட்களிலேயே மாற்றத்தை உணர்ந்தேன். திருத்தணி முருகன் கொடுத்த மாதிரி என்னை எந்த கடவுளும் பார்க்கவில்லை என சொல்வேன். அது ஒரு பெரிய பாக்கியம் என நினைக்கிறேன். வாழ்க்கையில் ரொம்ப நொடிந்துபோன போது நிறைய ஜோதிடர்களை சந்தித்தேன். என்றைக்கு திருத்தணி சென்றேனோ அன்று முதல் அதையெல்லாம் குறைத்து விட்டேன். இது முருகன் கொடுத்த வாழ்க்கை. அவருக்கு உயிரைக் கொடுக்கும் அளவுக்கு நான் விசுவாசமாக இருக்கிறேன்.
எனக்கு சின்ன வயதில் இருந்தே அப்பா கிடையாது. 19 வயதாகும்போது அம்மா அவங்களோட வாழ்க்கையை பார்க்க கிளம்பி விட்டார்கள். எனக்கு சொந்தக்காரர்கள் என சொல்ல யாருமே இல்லை. நடிப்பை கைவிடும்போது நண்பர்களும் கிளம்பி விட்டார்கள். நிற்கதியாக நின்ற போது திருத்தணியில் தான் போய் நின்றேன். அன்றைக்கு எனக்கு மாற்றம் வரவில்லை என்றால் நிச்சயம் நான் தற்கொலை செய்திருப்பேன். எங்கு சென்றாலும் எல்லாமுமாக முருகன் என் வாழ்க்கையில் உள்ளார்.