Lord Murugan: கந்த சஷ்டி கவசம்.. 5 நிமிடத்தில் 36 முறை படிப்படி எப்படி.. இதோ டிப்ஸ்!

முருகனுக்குரிய புகழ்பெற்ற பக்திப் பாடலான கந்த சஷ்டி கவசத்தை ஒரு நாளில் நாம் 36 முறை பாராயணம் செய்வதால் அபரிமிதமான பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஆனால், இது கடினமானது என்ற நிலையில் அந்த பாடலிலேயே அதற்கான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

Lord Murugan: கந்த சஷ்டி கவசம்.. 5 நிமிடத்தில் 36 முறை படிப்படி எப்படி.. இதோ டிப்ஸ்!

கடவுள் முருகன்

Published: 

21 Mar 2025 09:26 AM

தமிழ் கடவுள் என கொண்டாடப்படுபவர் முருகன் (Lord Murugan). முருகனுக்கு தமிழ்நாட்டில் அறுபடை வீடுகள் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. முருகனுக்கு ஏராளமான பக்தி பாடல்கள், மந்திரங்கள் என இருந்தாலும் முருகனை போற்றி பாடுவதற்கும் அவர் அருளை பெறுவதற்கும் உரிய புகழ்பெற்ற மந்திரமாக கந்த சஷ்டி கவசம் (Kanda Shasti Kavasam) திகழ்கிறது. இத்தகைய கந்த சஷ்டி கவசத்தை தினமும் ஒரு வேலையாவது கேட்கும் போது நம் மனதில் பாசிட்டிவ் எண்ணங்கள் தோன்றுவது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட இந்த பாடலை பால தேவராயன் சுவாமிகள் இயற்றினார். சென்னி மலையில் உள்ள முருகன் கோயிலில் தான் இந்தப் பாடல் ஆனது அரங்கேற்றம் செய்யப்பட்டது. சஷ்டியை நோக்க சரவண பவனார் எனத் தொடங்கும் அந்த பாடல் திருச்செந்தூர் (Tiruchendur) தளத்திற்கு உரியதாகும். முருகனின் முக்கிய விசேஷ தினங்களில் ஒன்றான கந்த சஷ்டி திருச்செந்தூரில் தான் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அறுபடை வீடுகளுக்கும் தனித்தனியே கந்த சஷ்டி கவசம் தேவராயன் சுவாமிகளால் இயற்றப்பட்டுள்ளது.

பொதுவாக கந்த சஷ்டி கவசம் பாடினால் தீராத வினைகள் தீரும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து 16 முறை கந்த சஷ்டி கவசத்தை படித்தால் முருகன் ஏதாவது ஒரு ரூபத்தில் நம்மை தேடி வருவார் என்பது முன்னோர்களின் வாக்காக இருந்துள்ளது. இப்படிப்பட்ட பாடலில் ஓரிடத்தில்

“ஒருநாள் முப்பத்தாறுரு கொண்டு
ஓதிய ஜெபித்து உகந்து நீரணிய
அதிர்ஷ்டத்திற்குள்ளோர் அடங்கலும் வசமாய்”

என்ற வரிகள் வரும். இதன் மூலம் தேவராயன் சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை 36 முறை தொடர்ந்து சொல்லிவிட்டு திருநீறு பூசி முருகனை நினைத்து வழிபட்டால் மிகப்பெரிய பலன் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

5 நிமிடத்தில் படிப்பது எப்படி?

ஆனால் கந்த சஷ்டி கவசத்தை 36 முறை சொல்வது என்பதை மிகவும் கடினமான ஒரு செயலாகும். காரணம் 238 வரிகள் கொண்ட இந்த பாடல் ஒரு முறை பாராயணம் செய்வதற்கு குறைந்தபட்சம் 10 முதல் 20 நிமிடங்கள் ஆகும். அப்படி 36 முறை எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட எட்டு மணி முதல் 10 மணி நேரம் வரை ஆகலாம். ஆக இதனை எளிதாக்கும் பொருட்டு தான் அந்த கந்த சஷ்டி கவசம் பாடலில் ஒரு ரகசியம் சொல்லப்பட்டுள்ளது.

அதாவது,
“ரஹண பவச ர ர ர ர ர ர ர
ரிஹண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விநபவ சரஹண வீரா நமோநம
நிபவ சரஹண நிறநிற நிறென
வசர வணப வருக வருக” என்ற வரிகள் வருவதைப் பார்த்திருப்போம்.

ஓம் சரவண பவ என்பது முருகனின் மந்திரம். இதில் ச என்ற பின்னால் வைத்து ரவண பவச என்றும், ர என்ற எழுத்தை பின்னால் வைத்தால் வணபவசர என்றும், வ என்ற எழுத்தை பின்னால் சேர்த்தால ணபவசரவ, ண வை பின்னால் கொண்டு வந்தால் பவ சரவண, ப எழுத்தை பின்னால் இணைத்தால் வசரவணப, வ என்ற எழுத்தை இணைத்தால் மீண்டும் சரவண பவ என வரும். இந்த 6 வார்த்தையும் 6 முறை சொன்னால் 36 முறை கந்த சஷ்டி கவசம் படித்ததாக அர்த்தமாகும். இதனை நாம் 5 நிமிடங்களில் சொல்லி விடலாம்.

முருகன் 6 முகம் கொண்டவர் என்பதால் இப்படி சொல்லப்படுகிறது. இதனால் எல்லா முயற்சிகளிலும் நமக்கு வெற்றியே கிட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.