Chitra Pournami 2025: சித்ரா பௌர்ணமி.. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல சரியான நேரம் இதுதான்!
2025 மே 11ம் தேதி சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல உள்ளார்கள். கோயில் நிர்வாகம் கிரிவலத்திற்கு உகந்த நேரம் பற்றி அறிவித்துள்ளது. கிரிவல மலைப்பாதையில் பக்தர்களுக்கு பேருந்து நிலையங்கள், கழிவறைகள், குடிநீர் வசதிகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சித்ரா பௌர்ணமியை (Chitra Pournami) முன்னிட்டு திருவண்ணாமலை (Tiruvannamalai) அண்ணாமலையார் கோயிலில் கிரிவலம் செல்வதற்கான சிறந்த நேரம் எது என்பதை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி திதியானது வருகிறது. இந்த நாளில் அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. அதேசமயம் மலை அல்லது குன்றின் மேல் அமைந்திருக்கும் கோயில்களுக்கு பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு சாமி தரிசனம் செய்வதும் வழக்கமாக உள்ளது. பௌர்ணமி முழு நிலவு வெளிச்சத்தில் கிரிவலம் செல்வதால் ஆன்மிக ரீதியாக ஏராளமான பலன்கள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. பொதுவாகவே கிரிவலம் என்றால் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது திருவண்ணாமலையில் கோயில் கொண்டிருக்கும் அருணாச்சலேஸ்வரர் தான்.
கோயிலுக்குப் பின்புறம் உள்ள தீபமலையில் சுமார் 14 கிலோமீட்டர் கிரிவலம் சென்று விட்டு வந்து அண்ணாமலையாரை வணங்குவதே தனிச்சிறப்பாக பார்க்கப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் இந்த கோயிலில் கிரிவலம் செல்லலாம் என்னும்போது பலரும் பௌர்ணமி நாளை கணக்கிட்டு வருகை தருகின்றனர்.
கிரிவலம் செல்ல உகந்த நேரம்
இப்படியான நிலையில் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி சித்ரா பௌர்ணமி வருகிறது. பொதுவாக மாதந்தோறும் வரும் பௌர்ணமிகளில் சித்திரை மாதம் வரும் முழு நிலவு நாள் மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுகிறது. அந்த நாளில் இரவு 8.47 மணி முதல் மே 12ஆம் தேதி இரவு 10.43 மணி வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம் என திருவண்ணாமலை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்காக 9 பாதைகளை இணைக்கும் வகையில் 20 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியரும் தெரிவித்துள்ளார். கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் போதுமான கழிவறைகளும், குடிநீர் வசதிகளும் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும் எனவும், அங்கு வழங்கப்படும் உணவுகள் தரமானதாக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்
கிரிவலப் பாதையின் சிறப்புகள்
இந்த கிரிவல பாதையில் அக்னி லிங்கம், குபேர லிங்கம், இந்திர லிங்கம், வாயு லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், ஈசானிய லிங்கம், வருண லிங்கம் ஆகிய எட்டு லிங்கங்கள் அமைந்துள்ளன. அதேபோல் சேஷாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார், ரமண மகரிஷி போன்ற சமாதிகளும் இந்த கிரிவலப் பாதையில் அமைந்துள்ளது. பக்தர்கள் கிரிவலம் வரும் இந்த மலை சிவபெருமானின் உருவமாக பார்க்கப்படுகிறது.
இது கிருதா யுகத்தில் அக்னி மலையாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த திருவண்ணாமலையில் இன்றளவும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. கிரிவலம் செல்லும் போது அவசரமாக செல்லக்கூடாது. அதேபோல் வேகமாக மற்றவர்களை இடித்துக் கொண்டு செல்லக்கூடாது. நிதானமாக நடந்து செல்ல வேண்டும். நமச்சிவாய, சிவாய நம போன்ற நாமத்தையோ அல்லது தேவாரம், திருவாசகம் போன்ற திருமுறைகளையோ உச்சரித்த படி செல்ல வேண்டும். வேறு எந்த கதையும் பேசிக்கொண்டு செல்லக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.