Tamil New Year: சித்திரை முதல் நாள்.. தமிழ் புத்தாண்டு விரதம் இருப்பது எப்படி?
சித்திரை விஷு நாளான தமிழ் புத்தாண்டு, ஏப்ரல் 14, 2025 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளாகும். இந்நாள் வழிபாடு, புதிய ஆடைகள், தான தர்மங்கள், கனி தரிசனம் போன்றவை செய்வது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது வாழ்க்கையில் நற்பலன்களை தரும் என நம்பப்படுகிறது.

தமிழர்கள் கொண்டாடும் மிக முக்கிய விசேஷ தினங்களில் சித்திரை வருடப்பிறப்பும் (Tamil New Year) உண்டு. தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை (Chithirai Month) முதல் நாள் தமிழ்நாட்டில் தமிழ் புத்தாண்டு என கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரும் என்பதை எளிதாக சொல்லி விடலாம். சில ஆண்டுகள் ஏப்ரல் 13 அல்லது ஏப்ரல் 15 ஆம் தேதியும் வரலாம். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி திங்கட்கிழமை வருகிறது. பொதுவாக திங்கட்கிழமை என்பது சிவனுக்குரிய (Lord Shivan) உகந்த நாளாகும். இத்தகைய சித்திரை முதல் நாள் தமிழ் மக்களால் “சித்திரை விஷூ” என அழகாக அழைக்கப்படுகிறது.
கடந்த கால கசப்பான அனுபவங்கள் எல்லாம் போய் இனிப்பாக நிகழ்வுகளை இனி காண்பதன் தொடக்கமே சித்திரை வருடப்பிறப்பு ஆகும்.ஜோதிடத்தில் சொல்லப்படும் 9 கிரகங்கள் தான் இந்த உலகத்தில் இயக்கத்திற்கு காரணமாக அமைவதாக நம்பப்படுகிறது. இத்தகைய கிரகங்களுக்கு அதிபதியாக இருப்பவர் சூரியன். சூரியன் சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் சஞ்சரித்து ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் சென்று பங்குனி மாதத்தில் மீன ராசியில் பயணம் செய்வார். மீண்டும் அவர் மேஷ ராசியில் நுழையும் நாளே தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.
சித்திரை முதல் நாள் வழிபாடு
இன்றைய நாளில் நாம் இறை வழிபாடு நடத்தினால் நாம் மற்றும் நம் குடும்ப உறுப்பினர்கள் ஆரோக்கியம், செல்வம், கல்வி, தொழில் ஆகியவற்றில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கையாகும். மேலும் நம்மை சுற்றியுள்ள எதிரிகள் அகன்று துன்பங்கள் வினைகள் எல்லாம் ஒழிந்து நம்பிக்கையான வாழ்க்கை பிறக்கும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்நாளில் நாம் முன்னெடுக்கும் எந்த காரியமும் தடையின்றி நிறைவேறி மகிழ்ச்சியை தரும் என சொல்லப்படுகிறது. மேலும் சித்திரை முதல் நாள் வழிபாடு செய்வது பங்குனி கடைசி நாள் வரை இறைவனின் அனுகிரகத்தை நமக்கு தரும் என சாஸ்திரங்கள் தெரிவிக்கிறது.
இத்தகைய சித்திரை விஷூ நாளில் காலையில் எழுந்து பல வகையான மலர்கள் இலைகள் மஞ்சள் பால் ஆகியவை கலக்கப்பட்ட நீரில் புனித நீராட வேண்டும். பின்னர் முடிந்தவர்கள் புத்தாடை அணியலாம் முடியாதவர்கள் நன்கு துவைக்கப்பட்ட ஆடையை அணிந்து இறைவனிடம் சென்று முதலில் மனதார வேண்ட வேண்டும் பின்னர்தான் காலை உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை சித்திரை முதல் நாள் விரதம் இருப்பவர்கள் இறைவழிபாடு தொடங்கியதும் விரதத்தை தொடங்கி விடலாம். அன்றைய நாளில் தங்களால் இயன்ற தான, தர்மங்களை செய்ய வேண்டும். அது பணம், உணவு, உடை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மேலும் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவது மங்களகரமான நிகழ்வாக அமையும்.
தொடர்ந்து வீட்டில் சிறிது சர்க்கரை பொங்கல் வைத்து நல்ல நேரம் பார்த்து இறைவழிபாடு செய்தால் பிரகாசம் நிறைந்த வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும்.
இனிப்பான வாழ்க்கை அமையும்
சித்திரை முதல் நாள் விரதம் இருப்பவர்கள் அதற்கு முந்தைய நாள் பங்குனி கடைசி நாளில் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். தொடர்ந்து பூஜை அறையில் இருக்கும் தெய்வங்களின் படங்கள் அல்லது சிலைகள், விளக்குகள் ஆகியவற்றை நன்றாக சுத்தம் செய்து பூஜைக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கி பூஜையறையில் வைத்து விட்டு தூங்க செல்ல வேண்டும்.
இத்தகைய பூஜை பொருட்களில் கண்டிப்பாக பழங்கள் இருக்க வேண்டும். காலையிலிருந்து இத்தகைய பழங்களின் முன்னால் நாம் கண்விழிக்கும் போது அவற்றின் சுவை போன்ற நம் வாழ்க்கை இனிப்பாக அமையும் என்பது நம்பிக்கையாகும்.
அது மட்டுமல்லாமல் விஷூ கனி தரிசனம் என்ற நிகழ்வும் அன்றைய நாள் நடைபெறும். அதாவது கண்ணாடி முன் பழங்கள், பூக்கள், பணம், ஆடை ஆகியவற்றை வைத்து அவற்றை பார்க்கும் நிகழ்வானது நடத்தப்படும். விரதம் இருப்பவர்கள் மற்றும் விரதம் இருக்காதவர்கள் ஆகியோர் முடிந்த அளவு அருகில் உள்ள கோயிலுக்கு சென்று இறைவழிபாடு நடத்தலாம்.
இந்த முறை திங்கட்கிழமை வருவதால் விநாயகர் அல்லது சிவன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். அதே சமயம் விரதம் கடைப்பிடிப்பவர்கள் பகலில் பால் அல்லது பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம் மாலையில் சாமி கும்பிட்ட பின் விரதத்தை முடித்து உணவு எடுத்துக் கொள்ளலாம்.
(Disclaimer: இந்தக் கட்டுரையின் தகவல்கள் ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை, இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)