Akshaya Tritiya: அட்சய திருதியைக்கு தங்கம் தவிர வேறு என்ன வாங்கலாம்?

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்நாள் நகை ஆபரணங்கள் வாங்க சிறந்த நாள் என சொல்லப்படுகிறது. அதேசயம் அவற்றை வாங்க முடியாதவர்கள் செல்வ வளத்தை அள்ளித்தரும் நாளான இந்நாளில் பருப்பு வகைகள், காய்கறிகள், நவதானியங்கள் போன்றவற்றை வாங்குவது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.

Akshaya Tritiya: அட்சய திருதியைக்கு தங்கம் தவிர வேறு என்ன வாங்கலாம்?

அட்சய திருதியை 2025

Published: 

23 Apr 2025 20:23 PM

அட்சய திருதியை (Akshaya Tritiya) இந்துக்களின் மிகப்பெரிய மங்களகரமான நாட்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அட்சய திருதியை என்றால் அள்ள அள்ள குறையாது செல்வம் என்பது பொருளாகும். அந்த வகையில் இந்த பெயரை கேட்டால் பலருக்கும் நகைக்கடையில் அலைமோதும் மக்கள் கூட்டம் தான் நினைவுக்கு வரும். தொட்டதெல்லாம் துலங்கும் நாள் என்ற ரீதியில் அட்சய திருதியை என்று எந்த நேர சகுனமும் பார்க்காமல் எப்போது வேண்டுமானாலும் நாம் பிடித்தவற்றை வாங்கலாம் என சொல்லப்படுகிறது. அப்படி ஒரு சக்தி கொண்ட நாளானது சித்திரை மாதம் அமாவாசை (Chithirai Amavasya) முடிந்த மூன்றாம் நாள் ஒவ்வொரு ஆண்டும் வரும். 2025 ஆம் ஆண்டு அட்சய திருதியை வரும் ஏப்ரல் 30ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

அட்சய திருப்தியை திதியானது 2025 ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 5.29 மணியிலிருந்து ஏப்ரல் 30ஆம் தேதி மதியம் 2.12 மணி வரை மட்டுமே உள்ளது. ஆனால் சூரிய உதயத்தை கணக்கில் கொள்ளப்படும் என்பதால் 2025 ஏப்ரல் 30ஆம் தேதி அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.மேலும் நகை வாங்குவதற்கு சிறந்த நேரமாக ஏப்ரல் 30ஆம் தேதி காலை 5.41 மணியிலிருந்து மதியம் 12.18 மணி வரை குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நாளில் நகை ஆபரணங்கள் வாங்குவது லட்சுமி தேவியை மகிழ்வித்து ஆண்டு முழுவதும் அள்ள அள்ள குறையாத செல்வத்தை அளிக்கும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. ஆனால் பொருளாதார வசதி மற்றும் தற்போதைய தங்கத்தின் விலையை கணக்கில் கொண்டால் அட்சய திருநாளில் நகை ஆபரணங்கள் வாங்குவோர் எண்ணிக்கை கடந்த காலங்களை விட இந்த ஆண்டு குறைவாகவே இருக்கும் என பார்க்கப்படுகிறது.

நகை தவிர்த்து என்னென்ன வாங்கலாம்?

இதனால் என்ன செய்வது என கவலைப்பட வேண்டாம். அட்சய திருதியை அன்று முடிந்தவர்கள் தங்க நகை வாங்கிகொள்ளலாம். முடியாதவர்கள் வெள்ளி நகைகளை வாங்கலாம். அது மட்டுமல்லாமல் வளத்தின் அடையாளமாக கருதப்படும் பருப்பு வகைகளையும் பசுமை மற்றும் ஆரோக்கியத்தின் குறியீடாக இருக்கும் கீரை மற்றும் காய்கறிகளையும் இந்நாளில் வாங்கி வீட்டில் வைத்து வழிபடலாம். மேலும் நவதானியங்கள், மண்பாண்ட பொருட்கள், நெய் ஆகியவையும் வாங்கலாம்.

வாகனங்களை பொருத்தவரை புதிதாக தான் இந்த நாளில் வாங்க வேண்டும் என்பது இல்லை. பொருளாதாரத்தைப் பொறுத்தவரை சிலருக்கு பழைய வாகனங்களும் புதிய வாகனங்களாகவே இருக்கும். அதனால் தாராளமாக இந்நாளில் பழைய வாகனங்களையும் வாங்கலாம். மேலும் செல்போன், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடைகள் போன்றவையும் வாங்கலாம். அதுமட்டுமல்லாமல் இந்த நாளில் நாம் சேமிப்பு கணக்குகளும் வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் தொடங்கலாம். அதேசமயம் பங்குச்சந்தை முதலீடு, நகைச் சீட்டு ஆகியவற்றையும் மேற்கொள்ளலாம்.

(இணையத்தில் பதிவிடப்படும் ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருக்கும் உண்மைகளின் துல்லியத்திற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)