Money Tips: செல்வ வளம் பெருக தவிர்க்க வேண்டிய விஷயங்கள்!
பணத்தை சரியாகக் கையாளுவதன் முக்கியத்துவம் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும் என சாஸ்திரம் சொல்கிறது. பணத்தை மரியாதையுடன் கையாண்டு, தவறான பழக்கங்களைத் தவிர்ப்பதன் மூலம் செல்வ வளத்தைப் பெறலாம் என நம்பப்படுகிறது. இதன் மூலம் லட்சுமி தேவியின் அருளைப் பெற்று பொருளாதார வளம் பெருகும் என சொல்லப்படுகிறது.

செல்வ வளம் பெருக டிப்ஸ்
பொதுவாக பணம் (Money) பற்றி பலருக்கும் பலவிதமான அபிப்ராயம் இருக்கும். சிலருக்கு பணம் வந்தவுடன் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். சிலருக்கு சேமிப்பு அதிகமாகும். இப்படியாக பணம் வீட்டில் தங்க வேண்டும் என்றால் நாம் சில விஷயங்களை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என சாஸ்திரம் சொல்கிறது. பணம் லட்சுமி தேவியின் (Lakshmi Devi) அடையாளமாக கருதப்படுகிறது. நாம் செய்யும் சில தவறான பழக்கங்கள் லட்சுமி தேவியை கோபப்படுத்துவதாக சொல்லப்படுகிறது. தவறு செய்வதால் செல்வ இழப்பு, வறுமை உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகலாம் என நம்பப்படுகிறது. அப்படியாக நாம் என்னென செய்யக்கூடாது என்பது பற்றிக் காணலாம்.
பணம் வைப்பதற்கு என்று பை, பர்ஸ் உள்ளிட்ட விஷயங்களை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் சிலர் இஷ்டத்துக்கு பணத்தை சாப்பாட்டுக் கூடை, தோளில் மாட்டும் பை, வாட்டர் பாட்டில் வைக்கும் இடம், பேக்கில் அதற்கென தனியிடம் என வசதிக்கு ஏற்றவாறு வைப்பார்கள். அதனை செய்யக்கூடாது.
பணத்தின் மதிப்பு குறையலாம்
அதேபோல் பணத்தை கசக்கியோ, வித்தியாசமாக மடித்தோ பயன்படுத்தக் கூடாது. பணத்திற்குரிய மதிப்பை சரியாக கொடுப்பதால் லட்சுமிதேவி மகிழ்வாள் என நம்பப்படுகிறது. மேலும் சாப்பாடு இருக்கும் கூடையில் பணம் வைப்பதால் மதிப்பு குறைந்து விடுவதாக நம்பப்படுகிறது. இதனால் பண இழப்பு பிரச்சனையும் உண்டாகும் என சொல்லப்படுகிறது.
பணத்தை மரியாதையாக கொடுக்க வேண்டும்
நம்மிடம் பணம் இருக்கும்போது உதவி என்று கேட்டு வருபவர்களுக்கும், வெளியிடங்களுக்கு செல்லும் போது யாசகம் பெறுபவர்களுக்கும் சிலர் பணத்தை தூக்கி எறியும் வழக்கத்தை கொண்டுள்ளனர். சிலர் வேண்டுமென்றே ஏளனப்படுத்தும் வகையில் செய்தாலும், சிலர் தன்னை அறியாமல் அப்படி நடக்கின்றனர். இது அந்த மனிதர்களை மட்டுமல்லாமல் பணத்தை அவமதிக்கும் செயலாக கருதப்படுகிறது. அதனால் யாசகம் பெறுபவர்களாக இருந்தாலும் சரி, உதவி கேட்பவர்களாக இருந்தாலும் சரி, என்றைக்கும் பணத்தை தூக்கி எறிய கூடாது. மரியாதையாக கைக்கு எட்டும் தூரம் வரை சென்று கொடுக்க வேண்டும்.
நிதி இழப்பு அபாயம் உண்டாகலாம்
யாருக்கேனும் பணம் கொடுக்கிறீர்கள் என்றால் இடது கையால் கொடுக்கக் கூடாது. இதனால் நிதி இழப்பு அபாயம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. சிலர் பணத்தை ஸ்டைலாக கொடுக்கிறேன் என்கிற பெயரில் மடித்து இரண்டு விரல்களுக்கு மத்தியில் வைத்து நீட்டுவார்கள். அப்படியும் செய்யக்கூடாது. கொடுக்கும்போது ஐந்து விரல்களும் அந்த ரூபாய் நோட்டை தொட்டிருக்கும்படி இருக்க வேண்டும்.
லட்சுமி தேவியை மகிழ்விக்க வேண்டும்
அதிகப்படியான பணத்தை கையாளும் போது சிலருக்கு எச்சில் தொட்டு எண்ணும் பழக்கம் உள்ளது. இது தவறான ஒன்றாகும். லட்சுமி தேவியை அவமதிக்கும் செயலாக கருதப்படும். இதனை அறவே தவிர்க்க வேண்டும். மேலும் படுக்கை விரிப்பின் அடியில், புடவையின் முந்தானைப் பகுதியில் என எங்கேயும் பணத்தை வைக்கக்கூடாது. எந்த அளவுக்கு அதனை மதிக்கிறோம் அதே அளவுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
செல்வத்தின் அதிபதியாக லட்சுமி தேவி இருக்கும் நிலையில் பொருளாதார ரீதியாக அவள் மகிழும்படி நாம் நடந்து கொண்டால் வாழ்க்கையில் நிச்சயம் பணம் நம்மிடையே அதிகமாக புழக்கத்தில் இருக்கும். இதனை பின்பற்றுவதால் வீட்டில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
(இணையத்தில் உலாவரும் தகவல்கள் அடிப்படையில் இந்த செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)