Tamil New Year 2025: சமயோகித பேச்சால் வெற்றி.. சிம்ம ராசிக்கான புத்தாண்டு பலன்கள்!
சிம்ம ராசிக்காரர்களுக்கு 2024 தமிழ் புத்தாண்டு புதிய வாய்ப்புகளையும், சவால்களையும் கொண்டுவரும் காலமாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. பொருளாதார முன்னேற்றம், குடும்ப வாழ்வில் இனிமை, தொழில் வளர்ச்சி போன்ற நல்ல விஷயங்களும், சில எதிர்ப்புகளும் இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதுதொடர்பான தகவல்களை காணலாம்.

சிம்ம ராசிக்கான பலன்கள்
மாற்றம் ஒன்றுதான் மாறாதது. ஆனால் புதுமை என்பது அனைத்து விஷயங்களிலும் இருக்கும் என நினைக்கும் சிம்ம ராசிக்காரர்கள் (Leo Zodiac Sign) இந்த தமிழ் புத்தாண்டு (Tamil New Year) மூலம் என்னென்ன பலன்களை காணப் போகிறார்கள் என்பது பற்றி பார்க்கலாம். இந்த புது ஆண்டு புதுவிதமான முடிவுகளை எடுப்பதற்கான காலமாக அமையும். இதன் மூலம் சுற்றி இருக்கும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் நீங்கள் மனதில் உற்சாகம் பொங்க செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்குள் இல்லற வாழ்க்கை இனிமை பெறும். பொன்,பொருள் சேர்க்கும் நேரம் அமையும். வீட்டில் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை வாங்கி குடும்பத்தினரை மகிழ்விப்பீர்கள். வீட்டு விசேஷங்களில் சமூகத்தின் முக்கிய நபர்கள் கலந்து கொள்ளும் அளவுக்கு நட்பு வட்டம் விரியும். சாதுரியமாக பேசி சாதிக்கும் வாய்ப்பு அமையும். அடமானத்தில் இருந்த நகைகளை மீட்பீர்கள். கடன் போதுமான அளவுக்கு குறையும்.
பூர்வீக சொத்து பங்கு உங்களுக்கு கைக்கு வந்து சேரும். தந்தையின் உடல் நலத்தில் அதிக அக்கறை காட்டுங்கள். ஒரு பக்கம் செல்வாக்கு உயர்ந்தாலும் மறுபக்கம் உங்களுக்கான எதிர்ப்புகளும் அதிகமாக தொடங்கும் என்பதால் கவனமாக செயல்படுங்கள். உங்களை இதுவரை அலட்சியமாக பார்த்தவர்கள் இனிமேல் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளும் காலம் தமிழ் புத்தாண்டில் கனியும். உடன் பிறந்தவர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். மூத்த சகோதரர்கள் பொருளாதார ரீதியாக உதவுவார்கள்.
சமயோகித பேச்சால் சாதிப்பீர்கள்
மே 18ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஏற்படும் நிலையில் அவை உங்களுக்கு சாதகமாகவே அமையும். சமயோகித பேச்சால் அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் காணாமல் போகும் புது பொலிவுடன் காணப்படுவீர்கள். மே 14ஆம் தேதி குரு பகவான் லாப ஸ்தானத்திற்கு வருகிறார். இதனால் வராமல் இருந்த அனைத்து பணமும் வரும். அக்கம் பக்கத்தினருடன் நட்பு பேணினாலும் அவர்களின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிட வேண்டாம்.
குடும்ப விஷயங்களை யாரிடமும் ஆறுதலுக்காக பகிர்ந்து கொள்ள வேண்டாம். அது பிரச்சினையே பெரிதாக்க வாய்ப்பு உள்ளது. ஏதேனும் பத்திரங்களில் சாட்சி கையெழுத்து போடும்போது சட்ட ஆலோசகரை ஆலோசித்த பின் முடிவெடுங்கள். முடிந்தவரை இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்ளாதீர்கள். வாகனத்தில் செல்லும்போது மெதுவாகவும் பொறுமையாகவும் செல்லுங்கள். ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
மன குழப்பங்கள் நீங்கும்
சிம்ம ராசியை சேர்ந்த பெண்கள் இந்த காலகட்டத்தில் மன குழப்பங்கள் நீங்கி தெளிவு பெறுவார்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று செயல்படுவார்கள். பிள்ளைகளின் உயர்கல்வி அல்லது திருமணம் பற்றிய நல்ல செய்தி வந்து சேரும். போட்டி தேர்வுகள் எழுதினால் நிச்சயம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும் எதிர்பார்த்தபடி வாழ்க்கை துணை அமையும். மாணவ மாணவிகள் கொஞ்சம் சோம்பலை தவிர்த்து விட்டு படிப்பில் அக்கறை காட்டினால் சாதிக்கலாம்.
வியாபாரத்தை பொருத்தவரை போட்டிகள் இருந்தாலும் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.சந்தை நிலவரங்களை அறிந்து செயல்பட்டால் லாபம் பெறலாம் தொழில் முறை பார்ட்னர்களிடம் அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக பேசி தீர்வு காண்பது நல்லது. பணியிடங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நேரம் காலம் பார்க்காமல் உழைத்ததற்கு உண்டான பலன் கிடைக்கும்.
இந்த தமிழ் புத்தாண்டு பல தடைகளை கொடுத்தாலும் அவற்றைக் கடந்து முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வடலூர் வள்ளலாரை வணங்கி உணவு தானம் செய்து புண்ணியம் பெறுங்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
(இந்த கட்டுரையின் தகவல்கள் ஆன்மிக, ஜோதிட நம்பிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் துல்லியத்திற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)