Sai Baba: வீட்டிலேயே சாய்பாபா வழிபாடு.. அனிதா குப்புசாமி சொல்லும் டிப்ஸ்!

அனிதா குப்புசாமி அவர்கள் சாய்பாபா பற்றிய தனது ஆன்மீக அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். அரசியலில் ஈடுபட தடுத்த சாய்பாபாவின் தலையீடு, சாய்பாபா வழிபாட்டு முறைகள், சிறந்த நேரம், மஞ்சள் நிறத்தின் முக்கியத்துவம் மற்றும் லட்சுமி குபேர பூஜையின் நன்மைகள் போன்றவற்றைப் பற்றியும் விளக்கியுள்ளார்.

Sai Baba: வீட்டிலேயே சாய்பாபா வழிபாடு.. அனிதா குப்புசாமி சொல்லும் டிப்ஸ்!

அனிதா குப்புசாமி

Published: 

18 Apr 2025 11:51 AM

கடந்த காலங்களை விட இப்போது மக்களுக்கு ஆன்மிகத்தின் மீது அபரிமிதமான நம்பிக்கையானது அதிகரித்து விட்டது என்றே சொல்லலாம். முருகன் (Lord Murugan) தொடங்கி சாய்பாபா (Sai Baba) வரை தனிப்பட்ட முறையில் வழிபட்டு வருகிறார்கள். அந்த வகையில் பிரபல நாட்டுப்புற பாடகி, நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முக திறமைக் கொண்ட அனிதா குப்புசாமி (Anitha Kuppusamy) நேர்காணல் ஒன்றில் சாய்பாபா பற்றிய தனது ஆன்மிக அனுபவங்கள் பற்றி பேசியிருப்பார். அதனைப் பற்றி நாம் காணலாம். அதில், “சாய்பாபாவை பொறுத்தவரை ஒருவருக்கு எது சரியோ அதனை மட்டுமே கொடுப்பார் என சொல்வார்கள். இதனை நான் மனதார உணர்ந்திருக்கிறேன். நான் அதிமுகவில் சேர வேண்டும் என ஜெயலலிதா அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர் ஒவ்வொரு முறையும் அழைப்பு விடுக்கும்போதெல்லாம் ஏதோ ஒரு தடங்கல் ஆகிக்கொண்டே இருந்தது. என்னுடைய கணவர் புஷ்பவனம் குப்புசாமி எனக்கு அரசியல் எல்லாம் சரிபடாது. எனக்கும் அரசியல் பிடிக்காது. அதனால் போக வேண்டாம் என சொன்னார்.எத்தனையோ முறை நான் அரசியலில் இணையப் போகிறேன் என்ற போதெல்லாம் சாய்பாபா தடுத்தார். நான் புரிந்துக் கொள்ளவே இல்லை.

இருந்தாலும் ஜெயலலிதா அழைத்துள்ளார், எனக்கு மிகவும் பிடித்தமானவர் என்ற ரீதியில் நான் சென்றேன். அரசியலில் இணைந்தும் நான் பெரிதாக சாதிக்கவில்லை. நமக்கு ஒன்று வேண்டாம் என்றால் சாய்பாபா தடுத்து விடுவார். நாம் அதை தாமதமாகிக் கொண்டே செல்கிறது என நினைக்கிறோம். அதுதான் இல்லை” என அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார்.

சாய்பாபா வழிபாடு

நான் சாய்பாபா பூஜை எப்படி செய்ய வேண்டும் என வீடியோ ஒன்று போட்டிருந்தேன். அதனை பார்த்துவிட்டு பெண் ஒருவர் அழுது கொண்டே என்னை காண வந்திருந்தார். அதாவது வழக்கமான பூஜையில் இருந்து சற்று வித்தியாசமாக செய்ய வேண்டும் அதில் தெரிவித்திருந்தேன். எப்படி என்றால் சாய்பாபாவுக்கு மிகவும் பிடித்த கலர் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு இடைப்பட்ட நிறம். ஆனால் அது மஞ்சள் நிறத்தில் தான் வரும். நாம் நம்முடைய ஆற்றலை கடவுள் வழிபாட்டின் போது கூட வீணாக்கக்கூடாது. இந்த நாள் எந்த கடவுளை வணங்கினாலும் மனை போட்டு அதில் அந்த கடவுளுக்குரிய நிறத்திலான துணியை விரித்து வழிபட வேண்டும்.

அந்த வகையில் மஞ்சள் துணி விரித்து ஒரு சாய்பாபா சிலை அல்லது உருவப் படத்தை வைத்து அதற்கு முன்னால் மஞ்சள் நிறத்திலான பலகாரங்களை வைக்க வேண்டும். குறிப்பாக சாய்பாபாவுக்கு பால் பேடா என்றால் மிகவும் பிடிக்கும். சாய்பாபா பசியோடு யாரும் இருக்கக்கூடாது என தெரிவித்திருக்கிறார். அவர் 13 வகையான கோரிக்கைகளை தெரிவித்திருக்கிறார். அதில் எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தால் அன்னதானம் செய்யுங்கள் எனக் கூறியுள்ளார். அதனால் தான் சாய்பாபா கோயிலில் அன்னதானம் அதிகளவில் நடைபெறுகிறது.

பசியோடு கடவுள் வழிபாடு செய்யாதீர்கள்

சிலர் விரதம் இருந்து மூன்று வேலை சாப்பிடாமல் இருப்பார்கள். அன்றைய காலகட்டத்தில் விரதம் இருப்பவர்கள் பூஜை அறையில் அமர்ந்து பாராயணம் படிப்பார்கள். ஆனால் இன்றைக்கு வேலைக்கு செல்கிறார்கள், வெவ்வேறு சூழலில் இருப்பதால் பசி என்பது தானாக தோன்றிவிடும். பக்தியை விட பசி தான் அப்போது முன்னாடி வந்து நிற்கும். அதனால் நான் என் வீடியோவில் நீங்கள் விரதம் இருந்தாலும் நிறைவாக சாப்பிட்டுவிட்டு சாய்பாபாவுக்கு பூஜை செய்தால் போதும் என தெரிவித்திருந்தேன்.

அறிவியலில் ரீதியாக விரதம் இருப்பது மிகவும் நல்லது என சொல்லப்படுகிறது. அதே சமயம் தன்னை வருத்தி பக்தர் கேட்கும் வரத்தை கடவுள் மனமிறங்கி செய்வார் என்பது நம்பிக்கையாகும்.

லட்சுமி குபேர பூஜை

வீட்டில் சாய்பாபா சிலைகளை தாராளமாக வைத்து வழிபடலாம் என்பது என்னுடைய கருத்தாகும். வியாழக்கிழமை என்பது சாய்பாபாவுக்குரிய விசேஷ தினமாகும். ஒரே நாளில் நான் பூஜை அறையில் இருக்கோம் அத்தனை கடவுளையும் சுத்தப்படுத்த முடியாது. ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வார நாள் குறிப்பிடப்பட்டுள்ளது. நாளில் நாம் சரியாக சுத்தம் செய்து வழிபட்டால் வேலையும் எளிதாகும் மனமும் நிறைவடையும்.

சாய்பாபா வழிபாட்டில் மஞ்சள் நிறம் கலந்த பூவை வைப்பது சிறந்தது. உங்களுக்கு கல்கண்டு அல்லது உலர் பழங்கள் கலந்து நைவேத்தியம் வைப்பது வழக்கம். அதேபோல் மிகப் பெரிய வேண்டுதல் இருந்தால் ஏழு வார விரதம் என்பது உள்ளது. கல்வி, தொழில், திருமணம், வியாபாரம் என பலவிதமான வேண்டுதலுடன் பக்தர்கள் இந்த விரதத்தை பின்பற்றி வருகிறார்கள். அதேபோல் வியாழக்கிழமையில் லட்சுமி குபேர பூஜை செய்தால் பொருளாதார ரீதியாக நாம் முன்னேற முடியும். இதனால் பலபேர் பயனடைந்து என்னிடம் தெரிவித்துள்ளார்கள்.