Akshaya Tritiya 2025: அட்சய திருதியை.. இந்த விஷயங்களை செய்தால் லட்சுமி அருள் கிட்டுமாம்!
அட்சய திருதியை இந்துக்களின் மிகவும் புனிதமான நாளாக பார்க்கப்படுகிறது 2025ல் ஏப்ரல் 30 அன்று இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் செய்யப்படும் எந்த நல்ல காரியமும் வெற்றி பெறும் என நம்பப்படுகிறது. லட்சுமி, குபேரன், சூரிய பகவான் ஆகியோரை வழிபடுவதும், தான தர்மங்கள் செய்வதும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.

அட்சய திருதியை (Akshaya Tritiya 2025) பண்டிகை இந்து மதத்தில் (Hindu Religion) மிகவும் புனிதமான நாளாக பார்க்கப்படுகிறது. இந்த பண்டிகை ஒவ்வொரு ஆண்டும்சித்திரை மாதத்தின் சுக்ல பக்ஷ காலமான அமாவாசை முடிந்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு அட்சய திருதியை பண்டிகை வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த புனிதமான நாளில் எந்தவொரு நல்ல காரியத்தையும் செய்ய நல்ல நேரத்திற்காக பார்க்க வேண்டிய அவசியமில்லை என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதனால் அன்றைய தினம் அனைத்து விதமான விஷயங்களையும் செய்யும் நாளாகக் கருதப்படுகிறது. அதாவது இந்த நாளில் செய்யப்படும் அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக இருக்கும் என நம்பிக்கை உள்ளது. மேலும் அட்சய திருதியை நாளில் செய்யும் காரியம் நல்ல பலன்களைத் தரும் என்பது ஐதீகமாக உள்ளது. இந்த நாளில் சூரிய பகவான், லட்சுமி தேவி மற்றும் விஷ்ணு ஆகியோர் வழிபட்டால் வாழ்க்கையில் நேர்மறை மற்றும் செழிப்பை காணலாம் என சொல்லப்படுகிறது.
இப்படியான அட்சய திருதியை நாளில் சர்வார்த்த சித்தி யோகம், ஷோபன யோகம், ரவி யோகம் உருவாகும் என ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளது.. சர்வார்த்த சித்தி யோகம் எந்த ஒரு காரியத்தையும் முடிப்பதற்கு உதவுகிறது. ஷோபன யோகம் மங்களகரமானதைக் குறிக்கிறது. ரவி யோகம் வேலையில் வெற்றியையும் செழிப்பையும் தரும். இந்த மூன்று யோகங்களின் கலவையானது அக்ஷய திருதியை நாளில் மிகவும் பலனளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அட்சய திருதியை நாளில் சில சிறப்பு பரிகாரங்களைச் செய்வதன் மூலம், ஒருவர் லட்சுமி தேவியின் ஆசீர்வாதங்களைப் பெறுவார் என்று நம்பப்படுகிறது.
என்ன செய்ய வேண்டும்?
அட்சய திருதியை நாளில் லட்சுமி தேவியை வழிபடுவது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதேசமயம் லட்சுமி தேவியுடன் சேர்ந்து, செல்வத்தின் அதிபதியான குபேரனை சிறப்பு வழிபாடு மற்றும் பக்தியுடன் வழிபட்டால் மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. இதைச் செய்வதால் நிதி நிலைமை வலுவாகும் என்று நம்பப்படுகிறது.
அட்சய திருதியை அன்று சூரிய உதயத்தின் போது ஒரு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பவும். பின்னர் சூரிய பகவானை நினைத்து பிரார்த்தனை செய்யவும். இதைச் செய்வதன் மூலம், வாழ்க்கையில் நேர்மறை ஆற்றல் நிலைத்திருக்கும் என்றும், வாழ்க்கையில் எழும் பிரச்சினைகளிலிருந்து சூரிய பகவான் நிவாரணம் அளிப்பார் என்றும் நம்பப்படுகிறது.
இந்த நாளில், வீட்டின் பிரதான நுழைவாயில், பணப்பெட்டி, பூஜையறை, சமையலறை மற்றும் துளசி மாடம் அருகில் ஒரு விளக்கை ஏற்றி வழிபடவும். இதைச் செய்வதன் மூலம் லட்சுமி தேவியின் ஆசிர்வாதம் உங்களுக்குக் கிடைக்கும் என்றும், வீட்டில் உள்ள நிதி சிக்கல்கள் தீரும் என்றும் நம்பப்படுகிறது. அட்சய திருதியை நாளில் தான தர்மங்கள் செய்வது மிகவும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது. இந்த நாளில் வெல்லம், அரிசி, தங்கம், நெய், தண்ணீர் மற்றும் துணிகளை தானம் செய்யலாம். இது வீட்டில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பைப் பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது.
(இணையத்தில் உலாவும் ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்த அறிவியல்பூர்வமான விளக்கம் இல்லை. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)