5 ஆண்டுகளுக்குப் பின் தொடங்கும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை.. விண்ணப்பிப்பது எப்படி?
ஐந்து ஆண்டுகளுக்குப் பின் 2025 ஜூன்-ஆகஸ்ட் மாதங்களில் கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்குகிறது. இதனால் ஆன்மிக அன்பர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். லிபுலேக் மற்றும் நாதுலா கணவாய்கள் வழியாக இந்த யாத்திரை நடைபெறும். இதற்காக 18-70 வயதுடைய இந்திய குடிமக்கள் மட்டுமே பதிவு செய்யலாம்.

கைலாஷ் மானசரோவர் யாத்திரை
ஐந்து ஆண்டுகளுக்குப் பின் கைலாஷ் மானசரோவர் யாத்திரை (Kailash Mansarovar Yatra) தொடங்கவுள்ளதால் ஆன்மிக அன்பர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் லிபு லேக் மற்றும் சிக்கிமின் நாதுலா கணவாய்கள் வழியாக 2025 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் இந்த யாத்திரையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் (Ministry of External Affairs) தெரிவித்துள்ளது. இந்த யாத்திரை செல்ல விரும்புபவர்கள் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் http://kmy.gov.in என்ற வலைத்தளத்தில் கிடைப்பதாக கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த யாத்திரை செல்ல 18 முதல் 70 வயது வரையிலான இந்திய குடிமகன்கள் தகுதியானவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது.
முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட நியாயமான முறையில் விண்ணப்பதாரர்கள் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு இந்த யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இவர்களில் 50 பக்தர்கள் கொண்ட ஐந்து குழுக்கள் லிபு லேக் கணவாய் வழியாகவும், தலா 50 பக்தர்கள் கொண்ட 10 குழுக்கள் நாது லா கணவாய் வழியாகவும் பயணிப்பார்கள் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளுக்குப் பின்..
2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா – சீனா வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் மோதல் மற்றும் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற சூழல் காரணமாக கைலாஷ் மானசரோவர் யாத்திரையை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், 2024ஆம் ஆண்டு அக்டோபரில் கசானில் பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீன் அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையே நடந்த சந்திப்புக்குப் பிறகு இருநாட்டு உறவுகளும் மேம்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு நவம்பரில் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டின் போது மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியிடம் இது குறித்து எடுத்துரைத்தார். அதுமட்டுமல்லாமல் 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த சிறப்பு பிரதிநிதிகள் கூட்டம், 2025ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்த சீனாவின் துணை வெளியுறவு அமைச்சருடனான வெளியுறவுச் செயலாளரின் சந்திப்பின் போதும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தான் 2025 கோடை காலத்தில் யாத்திரையை மீண்டும் தொடங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆன்மிக பயணத்திற்கு விதிமுறைகள்
- விண்ணப்பங்கள் http://kmy.gov.in என்ற வலைத்தளத்தில் பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை நிரப்ப வேண்டும்.
- பாலின சமநிலை தேர்வு மூலம் விண்ணப்பத்தாரர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் பாதை மாற்றப்படாது.
- இரண்டு வழிகளில் நடைபெறும் இந்த யாத்திரைக்கு ஒரே விண்ணப்பத்தில் இரண்டு பக்தர்கள் விண்ணப்பிக்கலாம்.
- தேர்வு செய்யப்பட்டவர்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் விண்ணப்பத்தாரர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.5 ஆயிரம் செலுத்தி பயணத்தை உறுதி செய்ய வேண்டும். இந்த தொகை திரும்ப பெற முடியாது.
- ITBP அடிப்படை மருத்துவமனையில் குறிப்பிட்ட நாளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு என மருத்துவ பரிசோதனை நடைபெறும். இதில் தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே யாத்திரை செல்ல அனுமதியுண்டு. இதற்காக 3 நாட்களுக்கு முன்னதாகவே டெல்லி வர வேண்டும்.
- காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அழைக்கப்படும் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் பக்தர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் வரவில்லை என்றாலும் யாத்திரை சரியான திட்டமிடலுடன் நடைபெறும்.