எந்த கடவுளையும் தொல்லை செய்வது இல்லை.. வடிவுக்கரசியின் ஆன்மிக அனுபவம்!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான வடிவுக்கரசி தனது வாழ்வில் பல்வேறு ஆன்மீக அனுபவங்கள் மற்றும் நம்பிக்கைகள் குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் திருப்பதி யாத்திரை, சத்யநாராயண பூஜை, பாண்டிச்சேரி அன்னை வழிபாடு, கிறிஸ்துவம் குறித்த அவரது பார்வை உள்ளிட்டவை பற்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பன்முக திறமையாளர்களில் ஒருவர் வடிவுக்கரசி (Vadivukkarasi). ஹீரோயினாக நடிக்க தொடங்கி குணச்சித்திர கேரக்டர் வரை எது கிடைத்தாலும் புகுந்து விளையாடும் அளவுக்கு திறமையானவர். கிட்டதட்ட 40 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் அவர் சின்னத்திரை சீரியல்களிலும் கலக்கியிருப்பார். அவர் ஒரு நேர்காணலில் ஆன்மிக அனுபவங்கள் பற்றி பேசியிருப்பார். அதனைப் பற்றி நாம் காணலாம். அதாவது, “எனக்கு நிறைய ஆன்மீக அனுபவங்கள் உள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு கடவுளை வழிபடுவேன் என என்னைப் பற்றி தெரிந்தவர்கள் சொல்வார்கள். ஒருமுறை திருப்பதிக்கு அனைவரையும் அழைத்து சென்று தங்க வைத்தேன். அப்போது இஸ்லாமியரான என்னுடைய மேக்கப் மேனை பேருந்தில் அதிகாலை 4 மணிக்கு வரவைத்து என்னுடன் திருப்பதிக்கு பாதயாத்திரை அழைத்துச் செல்வேன். அப்படிப்பட்ட அளவுக்கு நான் ஒரு கரடு முரடான ஆள் என்ன சொல்லலாம்.
ஒரு கடவுளை வணங்கத் தொடங்கி விட்டால் அவர் தொடர்பான அனைத்தையும் கேட்டு உலுக்கி எடுத்து விடுவேன். அந்த அளவுக்கு பக்தியுடன் வழிபடுவேன். நீ வந்து எனக்கு இதை செய்து தர வேண்டும் என சொல்வேன். நமது பெற்றோருக்கு எப்படி எதை கொடுத்தால் நல்லது என தெரியுமோ அது போல் கடவுளுக்கும் நமக்கு எது நல்லது என்பது தெரியும்.
அறிமுகமான பாண்டிச்சேரி அன்னை
இப்படி ஒரு ஆன்மீகத்தில் தீவிரமாக இருந்தேன். அதேபோல் சத்யநாராயணா பூஜை என்றால் அன்றைக்கு ஷூட்டிங் செல்ல மாட்டேன் என பல விஷயங்களை நான் பின்பற்றிய நிலையில் என்னை சுற்றி உள்ளவர்கள் நான் கஷ்டப்படுகிறேன் எனக்கூறி பாண்டிச்சேரி அன்னையை அறிமுகம் செய்தார்கள். அவ்வளவுதான். இந்த அம்மாவையும் நான் சும்மா விடவில்லை. ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மதியம் இரண்டு மணிக்கு தான் ஷூட்டிங் வருவேன் என சொல்லிவிட்டு பாண்டிச்சேரி நோக்கி சென்று விடுவேன். ஆட்டோவில் இடம் கிடைப்பது தொடங்கி ட்ரெயினில் படுக்கை வசதி கிடைப்பது வரை அவரை நினைத்து வேண்டிக்கொள்வேன்.
கிறிஸ்துவத்தில் அபிப்ராயம்
இதற்கிடையில் எனது அண்ணனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் ஒரு தீவிர ஐயப்ப பக்தர். கிட்டத்தட்ட 35 தடவை சபரிமலைக்கு சென்றிருப்பார். அந்த மாதிரி ஒரு பக்தனுக்கு சிலுவை அணிந்த கிறிஸ்தவ செவிலியர் சிகிச்சை அளித்தார். அவரிடம் இருந்த அந்த சிலுவையை பார்த்துவிட்டு எனக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் இந்த பிரச்சினையை கடந்து போக விரும்பினால் நான் உன்னில் சரணடைகிறேன் என வேண்டிக் கொண்டார்.
அதே மாதிரி நடந்தவுடன் அவர் கிறிஸ்தவம் பற்றி தெரிந்துக் கொள்ள நானும் கான்வென்டில் படித்ததால் இயேசு கிறிஸ்து மேல் ஒரு அபிப்ராயம் ஏற்பட்டது. இப்படியாக ஆன்மீகத்தில் படிப்படியாக வளர்ந்த நான் இப்போது யாரையும் தொல்லை செய்வது இல்லை. முழுக்க முழுக்க பிரபஞ்சம் தன் நம்பிக்கையாக உள்ளது. காலை 3.30 மணிக்கு எழுந்து விட்டால் நேரடியாக முகம் கை கால் கழுவி விட்டு வந்து பிரபஞ்சத்திடம் அந்த நாளின் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி சொல்லிவிட்டு மறுபடியும் வந்து தூங்கி விடுவேன். இதுதான் என்னுடைய ஆன்மீகம் என சொல்லலாம். பிரபஞ்ச சக்தியிடம் நாம் வெளிப்படையாக பேசும் போது எல்லாம் நடக்கும். நடுவில் இடைத்தரகர் போல எதுவும் தேவையில்லை” என வடிவுக்கரசி தெரிவித்திருப்பார்.