பிரம்ம முகூர்த்த கடவுள் வழிபாடு.. நடிகை ப்ரீத்தியின் ஆன்மிக அனுபவங்கள்!
பிரபல சின்னத்திரை நடிகை பிரீத்தி சஞ்சீவ் தன்னுடைய ஆன்மீக அனுபவங்கள் மற்றும் வீட்டு வழிபாட்டு முறைகள் குறித்த நேர்காணலில் கருத்துகளை பகிர்ந்துள்ளார். வாஸ்து, பிரம்ம முகூர்த்த வழிபாடு, விளக்கு ஏற்றுதல் போன்றவற்றின் முக்கியத்துவம், நம்பிக்கை மற்றும் பாசிட்டிவ் எண்ணங்களின் பங்கு ஆகியவற்றை அவர் பேசியுள்ளார்.

சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வந்து தனக்கென தனியிடம் பிடித்தவர் ப்ரீத்தி (Preethi Sanjiv). இவர் பிரபல சின்னத்திரை நடிகர் சஞ்சீவை காதல் திருமணம் செய்துக் கொண்டார். இவர் நேர்காணல் ஒன்றில் தன்னுடைய ஆன்மிக அனுபவங்களை (Spiritual Experience) சில ஆண்டுகளுக்கு முன் பகிர்ந்திருந்தார். அதனைப் பற்றி நாம் காணலாம். அதில், “எனக்கு அடிப்படையிலேயே பக்தி நிறைய அதிகம் என்னை பற்றி தெரிந்து கொள்வதற்கு தெரியும். வாழ்க்கையில் கடவுள் பக்தி மிகவும் முக்கியம். ஒரு விஷயத்தை அணுகுவதற்கு பாசிட்டிவான உணர்வுடன் கூடிய கவனம் தேவை. அந்த விஷயத்தில் நம்பிக்கை, பிடிப்பு இருக்க வேண்டும். அப்படி நாம் மேலே செல்லும்போது ஒரு பவர் இருந்தால்தான், அதாவது பிடிப்பு இருந்தால்தான் செல்ல முடியும். அதுதான் என்னைப் பொறுத்தவரை கடவுள் என நினைக்கிறேன். கடவுள் எந்த ரூபத்தில் இருந்தாலும் அதன் மேல் நான் நம்பிக்கை வைக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், “பூஜை அறை வழிபாடு பற்றி சொல்ல வேண்டுமென்றால் அதில் வாஸ்து கண்டிப்பாக பின்பற்றி ஆக வேண்டும். கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்க வேண்டும். என்னுடைய பூஜை அறை முகப்பு வடக்கு நோக்கி இருந்தாலும் உள்ளே செய்யப்படும் வழிபாடு என்பது கிழக்கு நோக்கி தான் இருக்கும். கட்டைவிரல் அளவுக்குத்தான் கிரகங்கள் வீட்டில் வைக்க வேண்டும் என சொல்வார்கள். பிள்ளையார் மற்றும் குபேரர் சிலைகளை வடக்கு திசை நோக்கி வைப்பது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது.
பிரம்ம முகூர்த்த வழிபாடு
பிள்ளையார், சரஸ்வதி, நம்மாழ்வார், லஷ்மி, ராதை கண்ணன் பல சிலைகள் வீட்டில் பல பகுதிகளிலும் உள்ளது. பிரம்ம முகூர்த்தத்தில் வழிபாடு என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என நான் நினைக்கிறேன். அந்த நேரத்தில் நாம் விளக்கேற்றினால் தேவதைகள் உலா போவார்கள். அப்போது நாம் என்ன நினைக்கிறோமோ அது கண்டிப்பாக நடக்கும் என சொல்வார்கள்.
என்னை பொருத்தவரை அந்த நேரத்தில் செய்யப்படும் வழிபாடு நாள் முழுவதும் ஒரு பாசிட்டிவான உணர்வுடன் இயங்க வைக்கும். அதேபோல் பொதுவாக நடராஜர் சிலையை வீட்டில் வைக்கக் கூடாது என சொல்வார்கள். ஆனால் வடக்கு திசையை பார்த்தபடி வைத்தால் தவறு ஏதும் இல்லை என நான் நினைக்கிறேன். மேலும் ஒற்றைப்படையில் தான் விளக்கேற்ற வேண்டும் என சொல்வார்கள். அதனால் நான் ஐந்து விளக்குகள் பயன்படுத்துகிறேன். அதில் தீபம் என்பது காற்றில் அலைபாயவிடாமல் சிறிதாக ஏற்ற வேண்டும்.
அது மட்டுமல்லாமல் வீட்டில் நீரும் எண்ணெயும் கலந்த அணையா விளக்கு என்பது உள்ளது. அதனை வீட்டில் ஏற்றி வைத்தால் மிகவும் நல்லது என சொல்வார்கள். நீங்கள் புது வீட்டிற்கு செல்வதாக இருந்தால் அந்த வீட்டின் நடுப்பகுதியில் மேற்கு பக்கத்திலிருந்து கிழக்கு திசை நோக்கி அந்த விளக்கு இருந்தால் மிகவும் நல்லது என ப்ரீத்தி தெரிவித்திருப்பார்.