Actress Lakshmi: கனவில் வந்த மாரியம்மன்.. நடிகை லட்சுமி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்!
பிரபல தமிழ் நடிகை லட்சுமி அவர்கள் தனது ஆன்மீக அனுபவத்தை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். மீண்டும் மீண்டும் வந்த ஒரு விசித்திரமான கனவில், அவர் ஒரு பிரசாதத்தைப் பெற்று, ஒரு கோவிலுக்குச் செல்லும்படி வழிநடத்தப்படுகிறார். கனவில் வந்த கோவிலைப் பின்னர் அடையாளம் கண்டு சென்று வழிபட்டதாக கூறியுள்ளார்.

நடிகை லட்சுமி
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகைகளில் ஒருவர் லட்சுமி (Actress Lakshami). ஹீரோயினாக அறிமுகமாகி பல்வேறு குணச்சித்திர கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்தவர். இவர் ஒரு நேர்காணலில் தன் வாழ்வில் நடந்த ஆன்மிக அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார். அதில், “அதிர்ஷ்டம் என்ற ஒன்று இருந்தால் தான் பல விஷயங்கள் நம்மை தேடி வரும் என சொல்வார்கள். அதேபோல நாம் சில நல்ல விஷயங்களை வேண்டும் என நினைக்கும்போது அது நம்மை தேடி வரும். எனக்கு மிகப்பெரிய ஆன்மிக அனுபவம் (Spiritual Experience) ஒன்று நடைபெற்றது. யார் இதைக் கேட்டாலும் பொய் என சொல்லவே மாட்டார்கள். பல வருடங்களுக்கு முன்னால் ஒருநாள் இரவில் நான் 1 மணிக்கு அழுதுக் கொண்டே எழுந்திருக்கிறேன். நெற்றியில் நாமம் திலகமிட்ட ஒரு பெரியவர் எனக்கு பிரசாதம் ஒன்றை கொடுக்கிறார். அந்த பகுதி சமஸ்கிருத கல்லூரி அருகே உள்ளதுபோல உள்ளது.எப்படி சொல்கிறேன் என்றால் சிறுவயதில் காஞ்சி மகா பெரியவரை காண அங்கு சென்றிருக்கிறேன்.
என்னுடைய பக்கத்தில் சுமங்கலி அம்மா ஒருவர் அமர்ந்திருக்கிறார். என்னைப் பார்த்து, ‘பிரசாதம் வாங்கிக்க’ என சொல்கிறார். அதை வாங்கியதும், ‘எழுந்து போ’ என அந்த அம்மா சொல்கிறார். நான் எங்கே போவது என அழுதுக்கொண்டே தூக்கத்தில் இருந்து எழுந்து விட்டேன். அத்துடன் கனவு முடிந்து விட்டது.
தொடர்ந்து வந்த ஒரே கனவு
அதிலிருந்து ஒரு வாரம் சென்றிருக்கும். அதே இரவு தூக்கத்தில் அதிகாலை 3 மணி இருக்கும். இதேபோல் பிரசாதம் கொடுப்பது போல கனவு வந்தது. அப்போது, “இங்கேயே உட்கார்ந்தால் எப்படி?.. செய்ய வேண்டிய விஷயம் இருக்குல.. எழுந்து போ” என குரல் கேட்கிறது. நான் எங்கே போவது எனக் கேட்க அதே சுமங்கலி அம்மா, “இடத்தை தேடிக்கொண்டு போ” என சொல்கிறார். இந்த கனவு 1992 ஆம் ஆண்டில் வந்தது. அப்போது என்னுடைய கணவரிடம் விஷயத்தை சொல்கிறேன்.
அவர் என்னிடம் சாய்பாபாவை நினைத்துக் கொண்டு தூங்கு. இதற்கு பதில் கிடைக்கும்’ என சமாதானம் செய்தார். அதிலிருந்து மீண்டும் ஒருவாரம் சென்றதும் அதே கனவு திரும்பவும் வந்தது. இம்முறை பிரசாதத்தைப் பார்த்தால் துளசியும் குங்குமமும் உள்ளது. அந்த பெரியவர் என்னைப் பார்த்து, ‘என்ன இங்கே உட்கார்ந்து அழுதுகிட்டு இருக்கிறாய்..கிளம்பு’ என சொல்கிறார். அப்போது பக்கத்தில் இருக்கும் அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு எங்கே போவது எனக் கேட்கிறேன்.
கனவில் வந்தது நிஜமான தருணம்
நீ காரை எடுத்துக் கொண்டு போ.. வழி தெரியும் என அந்த அம்மா சொல்கிறார். அதே மாதிரி செல்கிறேன். காரில் நான், என் கணவர், கார் ஓட்டுநர் ஆகியோர் தவித்து ஒரு கருப்பான உருவம் கொண்ட நபர், போலீஸ்காரர் ஒருவர் அமர்ந்திருக்கிறார். எனக்கு சற்று எதிர்மறை எண்ணமாக தோன்றுகிறது. இருந்தாலும் போங்க போங்க என சொல்ல கார் சென்று கொண்டிருக்கிறது. ஓரிடத்தில் கோயில் சுவர் தெரிந்தவுடன் இங்கே செல்லுங்கள் என கூற, இது ‘அத்தனூர் மாரியம்மன் கோயில்’ என காரில் இருப்பவர் சொல்கிறார்.
எனக்கு தூக்கிவாரிப்போட்டது. அந்த கோயிலைப் பற்றி நான் கேள்விக்கூட பட்டதில்லை. ஒரு குறிப்பிட்ட காலம் சென்ற பிறகு என் கணவரிடம் அந்த கோயில் பற்றி சொல்கிறேன். நாங்கள் சேலம் சென்றவுடன் நடிகர் சரவணனின் அப்பா தான் கார் கொண்டு வந்தார். அவர் போலீஸ் என்பதால் வரும்போது யூனிஃபார்ம் உடன் வந்தார். டிரைவர் கனவில் வந்தது போல கட்டம் கட்டமாக டிசைன் போட்ட சட்டைப் போட்டிருந்தார். கொஞ்சம் தூரம் சென்றவுடன் கனவில் வந்தது போல சரவணனின் அப்பா நீல நிற சட்டை மாற்றிக் கொண்டார்.
இதெல்லாம் நான் எதுவும் சொல்லவில்லை. ஆனால் உள்ளே சென்று மாரியம்மனை வணங்கி ஏதோ பழைய கடனை நீ தீர்த்துக் கொண்டாய் தாயே என நினைத்துக் கொண்டேன்” என நடிகை லட்சுமி கூறியிருப்பார்.