Anu Mohan: கடவுள் ரூபத்தில் வந்த தகவல்.. சிறைக்கு சென்ற அனுமோகன்..
நடிகர் அனுமோகன் தனது இளமைக் காலத்தில் நடந்த ஆன்மீக அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் இன்ஜினியரிங் படிக்கும்போது, சாமியார் போன்ற தோற்றம் கொண்ட நபர் அவர் சிறைக்கு செல்வார் என்று எச்சரித்துள்ளார். முதலில் அதனை அனுமோகன் பொருட்படுத்தவில்லை. ஆனால் அவர் கைது செய்யப்பட்ட சமயம் அந்த சாமியார் சொன்ன நேரத்துடன் பொருந்தியது. இந்த நிகழ்வை அனுமோகன் அதிசயமாகவும், கடவுள் அருளாகவும் கருதுகிறார்.

நடிகர் அனு மோகன்
தமிழ் சினிமாவில் (Tamil Cinema) மிகச்சிறந்த குணச்சித்திர நடிகரான அனுமோகன் (Anu Mohan) தன் வாழ்க்கையில் நடைபெற்ற மறக்க முடியாத ஆன்மிக நிகழ்வை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார். அதனைப் பற்றிக் காணலாம். அதில், “நான் அப்போது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (Mechanical Engineering) படித்துக் கொண்டிருந்தேன். அதேசமயம் சினிமாவில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டு அதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தேன். என்னுடைய நண்பரின் ஹோட்டலில் அவன் கல்லாப்பெட்டியில் அமர்ந்திருக்கும் நிலையில் நான் அருகில் என்று பேசிக் கொண்டிருப்பேன். ஒருநாள் அப்படியாக நான் ஹோட்டலில் இருந்தபோது ஒருவர் வந்து எங்களுக்கு எதிரே இருந்த டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார். அந்த நபர் பார்ப்பதற்கு சாமியார், சிவனடியார், பிச்சைக்காரன் மாதிரி கூட தெரியவில்லை. மிகவும் வித்தியாசமாக இருந்தார்.
சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்க கவுண்டருக்கு வந்த நிலையில் அங்கு நின்ற என்னை சொடக்கு போட்டு அழைத்து உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும் என கூறினார். எனக்கு அந்த சமயத்தில் கடவுள் நம்பிக்கை இருந்தது. ஆனால் ஜோசியத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தது. இதனால் நான் அந்த நபரை கோபமாக திட்டி விட்டேன். ஆனால் அவர் சொல்லியே தீருவேன் என்று அடம் பிடித்தார்.
நீ சிறை செல்வாய்..
என்னுடைய நண்பர் இது ஹோட்டல். வாடிக்கையாளர் வந்து போகுமிடம். அதனால் சொல்வதை சீக்கிரம் சொல்லிவிட்டு செல்லுங்கள் என அந்த நபரிடம் கூறினார். அவர் என் முகத்திற்கு நேராக சொடக்கு போட்டுக் கொண்டே தம்பி இன்றிலிருந்து 10வது நாள் 12.06 மணியில் இருந்து 1.06 மணி வரை நீ சிறை கம்பி எண்ணுவாய் கூறிவிட்டார். எனக்கு அதைக் கேட்டு அதிர்ச்சியாகிவிட்டது. இது நடந்த பிறகு நீ இந்த ஊரை விட்டு வெளியேறி நல்ல நிலைமைக்கு வருவாய் என அந்த நபர் கூறி சென்றார்.
10வது நாளில் நடந்தது என்ன?
அந்த நேரம் எம்ஜிஆர் திமுகவிலிருந்து வெளியேறி அதிமுகவை தொடங்குகிறார். அவர் திமுகவுக்கு எதிராக ஒரு பந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறார். எம்ஜிஆர் மிகப்பெரிய நடிகர் என்பதால் பந்த் என்றவுடன் கண்டிப்பாக அவருக்கு ஆதரவு இருக்கும் என நினைத்த கருணாநிதி 144 தடை உத்தரவு பிறப்பித்து விட்டார். நான் இருந்த கோயம்புத்தூரில் சினிமாவை தவிர வேறு எந்த பொழுதுபோக்கு கிடையாது. 10வது நாள் காலையில் 11 மணி இருக்கும் வீட்டுக்கு தெரியாமல் புகை பிடிக்க சென்றால் கடை எதுவுமில்லை.
உடனே நாங்கள் நண்பர்கள் ஐந்து பேர் ஒன்றாக சேர்ந்து காந்திபுரத்தில் இருந்து வடக்கு பக்கம் நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். நான் முன்னாடி செல்ல நான்கு பேர் பின்னாடி வந்து கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் நான் பின்னால் வந்து கொண்டிருந்த அவர்களை நோக்கி திரும்பி, “கடை எங்கேயும் இல்லை, வா வீட்டிற்கு சென்றுவிடலாம்” என சொல்வதற்குள் அந்த நான்கு பேர் அங்கிருந்து பிரித்து ஓடி விட்டார்கள். ஏன் ஓடுகிறார்கள் என யோசிப்பதற்குள் போலீஸ் வாகனம் வந்து என்னை பிடித்து அழைத்துச் சென்று விட்டது.
144 தடை உத்தரவு போட்டால் இரண்டு பேர் மேல் செல்லக்கூடாது. ஆனால் நீங்கள் ஐந்து பேர் வருகிறீர்களா என கேட்டு என்னை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் அழைத்து சென்று விட்டார்கள். என்னை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பெயர் எல்லாம் எழுதிவிட்டு சிறையில் தள்ளும் போது மணி சரியாக 12.06 ஆக இருந்தது.
என்னுடைய நண்பர்களில் ஒருவரின் அப்பா கணபதி பகுதியில் உதவி காவல் ஆய்வாளராக இருந்தார். அவரை வரவழைத்து நான் வெளியே வருவதற்கு மணி சரியாக 1.06 ஆக இருந்தது. அன்று கடவுள் ரூபத்தில் யாரோ ஒருவர் வந்து தகவல் சொன்னார்கள். அது எல்லாருக்கும் அமையாது. நல்ல மனசாட்சி உள்ளவன், நல்ல எண்ணம் உள்ளவன், நல்ல பக்தி உள்ளவனுக்கு மட்டும் தான் இப்படியெல்லாம் நடக்கும்” என அனுமோகன் கூறியிருப்பார்.