Chennai Temples: சென்னையில் மிஸ் பண்ணக்கூடாத கடற்கரை பகுதி கோயில்கள்!

பல்வேறு இடங்களுக்கு பெயர் பெற்ற சென்னை மாவட்டம், ஆன்மிக தலங்கள் நிறைந்ததாகும். திரும்பும் திசையெங்கும் வாழ்வியலோடு கலந்து விட்ட கோயில்கள் தான் அதிகம் உள்ளது. அப்படியான சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையை ஒட்டியுள்ள கோயில்கள் பற்றி காணலாம்.

Chennai Temples: சென்னையில் மிஸ் பண்ணக்கூடாத கடற்கரை பகுதி கோயில்கள்!

சென்னையில் உள்ள கோயில்கள்

Updated On: 

24 Mar 2025 06:58 AM

கோயில்கள் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என முன்னோர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஆன்மிகம்  (Spiritual) நம் வாழ்க்கையில் இரண்டற கலந்த ஒன்றாகும். இந்தியா (India) என்பது ஆன்மீக பூமி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். இப்படியான நிலையில் இங்கு திரும்பும் திசையெல்லாம் பல்வேறு விதமான வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ளது. வரலாறை விளக்கும் வழிபாட்டுத்தலங்கள் தொடங்கி, கட்டிடக்கலை, மக்களின் நிலை என ஒவ்வொன்றையும் கோயில்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். அந்த வகையில் தமிழ்நாட்டில் தலைநகராக திகழும் சென்னையில் கடற்கரை ஓரங்களில் அமைந்துள்ள இந்த மிக முக்கிய ஆறு கோயில்களை (Chennai Temples) பற்றி நாம் காணலாம். சென்னையில் வசிப்போர், சென்னைக்கு வருகை தரும் வெளியிடங்களைச் சேர்ந்த நபர்கள் இந்த கோயில்களை கண்டிப்பாக சென்று பார்வையிடுவார்கள். அதனைப் பற்றி காணலாம்.

பார்த்தசாரதி கோயில்

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள இந்த பார்த்தசாரதி கோயில் பெருமாள் கோயிலாகும். எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக சொல்லப்படும் இந்த கோயில் வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரை மற்றும் மாலையில் 4 மணி முதல் இரவு 9 மணி வரை பக்கர்களின் தரிசனத்திற்காக திறந்திருக்கும். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் இந்த கோயில் மிகவும் பழமையான கோயில்களில் ஒன்றாகும். இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து, பறக்கும் ரயில் என அனைத்து வசதிகளும் உள்ளது. பெருமாளின் ஐந்து அவதாரங்களின் சிற்பங்களை நாம் காணலாம்.

கபாலீஸ்வரர் கோயில் 

7 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்ட மயிலாப்பூரில் கோயில் கொண்டிருக்கும் கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருக்கோயில் சென்னையின் மிகவும் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாகும். மயிலாப்பூர் ரயில் நிலையத்திற்கு மிக அருகில் அமைந்திருக்கும் இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் அனைத்து பகுதிகளில் இருந்தும் இருக்கிறது. அருகிலேயே மிகப்பெரிய தெப்பக்குளம், அக்ரஹார வீடுகள் என பார்ப்பதற்கே இந்த இடம் மிகவும் ரம்மியமாக இருக்கும். இந்த கோயில் காலை 5 மணி முதல் 12 மணி வரை மற்றும் மாலையில் 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

ஐயப்பன் கோயில்

சென்னையின் சபரிமலை என அழைக்கப்படும் இந்த ஐயப்பன் கோயில் சென்னை அடையாறு ராஜா அண்ணாமலை புரம் பகுதியில் அமைந்துள்ளது. தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும் இந்த கோயிலுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகை தருகிறார்கள். கேரளாவின் சபரிமலையில் பின்பற்றப்படும் அத்தனை வழிபாடுகளும் இங்கும் பின்பற்றப்படுகிறது.

அஷ்டலட்சுமி கோயில்

சென்னையின் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையின் எல்லையில் அமைந்திருக்கிறது அஷ்டலட்சுமி திருக்கோயில். நான்கு நிலைகள் கொண்ட கோபுரங்களுடன் கூடிய இக்கோயில் லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆதிலட்சுமி, தைரியலட்சுமி, தான்ய லட்சுமி,மகாலட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி மற்றும் கஜலட்சுமி ஆகிய 8 லட்சுமிகள் அமைந்துள்ளனர். இந்த கோயில் கடற்கரையில் அமைந்திருப்பது சிறப்பானதாகும். இந்த சிறப்பான கோயில் நடையானது தினமும் காலை 6:30 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

அறுபடை முருகன் கோயில்

அஷ்ட லட்சுமி கோயிலுக்கு சற்று தொலைவில் அமைந்திருக்கும் இந்த கோயில் முருகனின் அறுபடை வீடுகளின் சன்னதிகள் அமைந்திருப்பது சிறப்பானதாகும். கோயிலை நாம் இரண்டாம் படை வீட்டில் இருந்து தான் வழிபட முடியும். ஓ என்ற எழுத்தின் அடிப்படையில் வழிபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடற்கரை வாயிலில் அமைந்திருக்கும் இந்த கோயில் மிகவும் ரம்மியமானது. இக்கோயில் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

மருந்தீஸ்வரர் கோயில்

திருவான்மியூர் பேருந்து நிலையத்தின் பக்கவாட்டில் கிழக்கு கடற்கரை சாலையில் தொடக்கத்தில் அமைந்திருக்கும் இந்த கோயிலானது பிணி தீர்க்கும் தலம் என அழைக்கப்படுகிறது. கோயில் வாசல் கிழக்கு பக்கமாக இருக்கும் நிலையில் பெரும்பாலான பக்தர்கள் மேற்கு வாயில் வழியாக உள்ளே சென்று கிழக்கு நோக்கி சுற்றி வந்து வழிபாடு செய்கிறார்கள். காலை 5.30 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலையில் 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் இக்கோயில் திறந்திருக்கும்.