Ramar Temple: ராமருக்கே உரித்தான கோதண்டராமசாமி கோயில்.. எங்கு இருக்கு தெரியுமா?
ராமர் மிக முக்கிய தெய்வமாக எண்ணற்ற மக்களால் வணங்கப்படுகிறார். தமிழ்நாட்டில் பல இடங்களில் ராமருக்கு கோயில் இருந்தாலும் 10 இடங்களில் இருக்கும் கோயிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வெளியிடங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர். அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றைப் பற்றி நாம் இக்கட்டுரையில் காணலாம்.

இந்து புராணத்தில் ராமர் (Lord Rama) மிக முக்கிய தெய்வமாக எண்ணற்ற மக்களால் வணங்கப்படுகிறார். அப்படிப்பட்ட ராமருக்கு வட மாநிலங்களில் அதிகளவிலான கோயில்கள் உள்ளது. அதேசமயம் தமிழ்நாட்டில் 10 இடங்களில் உள்ள ராமர் கோயில்கள் பல்வேறு தரப்பட்ட மக்கள் வருகை தரும் இடமாக உள்ளது. அதில் ஒரு கோயிலைப் பற்றி காணலாம். முதலாவதாக தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான ராமர் கோயில்களில் கோதண்டராமசாமி (Sri Kothandaramaswamy Temple) கோயில் பற்றிப் பார்க்கலாம். தஞ்சாவூர் மாவட்டம் வடுவூரில் அமைந்துள்ள இந்த கோயில் அதன் கம்பீரமான கோபுரம் மற்றும் ராமாயணக் காட்சிகளை விளக்கும் பிரமாண்டமான சிற்பங்களுக்காக சிறப்பு வாய்ந்தது. இந்த இடத்தைச் சுற்றிதான் சீதா மற்றும் லட்சுமணனுடன் சேர்ந்து ராமர் தங்கள் வனவாச காலத்தில் ஓய்வெடுத்ததாக நம்பப்படுகிறது.
இக்கோயிலின் கருவறையில் ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் ஹனுமான் ஆகியோரின் அழகிய சிலைகள் உள்ளது. வழிபட வரும் பக்தர்கள் அவற்றால் ஈர்க்கப்படுகின்றனர். ராமரின் அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்து அவரது தெய்வீக பயணத்தை மீண்டும் அனுபவிப்பதற்கான ஒரு முக்கியமான இடமாக கோதண்ட ராமர் கோயில் செயல்படுகிறது.
கோயில் உருவான வரலாறு
ராமர் வனவாசம் முடிந்த பிறகு அயோத்திக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த மகரிஷிகள் அவரை தங்களுடன் தங்கும்படி வேண்டிக் கொண்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற ராமர் மறுநாள் உங்களை சந்திக்கிறேன் என கூறிவிட்டார். தொடர்ந்து தனது உருவத்தை சிலையாக வடிவமைத்து தான் தங்கி இருந்த இடத்தின் வாசலில் வைத்தார். மறுநாள் ராமரை காண வந்த மகரிஷிகள் அந்த சிலையை பார்த்து இது உயிரோட்டம் உள்ளதாக இருப்பதாகவும் இச்சிலையை பூஜிக்க தங்களுக்கு தரும்படியும் கேட்டனர். அதன்படி ராமர் அந்த சிலையை கொடுத்துவிட்டு அயோத்திக்கு திரும்பி வந்தார்.
பிற்காலத்தில் சீதை, வரதன், ஆஞ்சநேயர், லட்சுமணர் ஆகியோருக்கு சிலை வடிவமைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வந்தது. இதற்கிடையில் அந்நியர் படையெடுப்பின்போது இந்த சிலையை பாதுகாப்புக்காக தலை ஞாயிறு என்ற இடத்தில் மறைத்து வைத்தனர். அந்த நேரத்தில் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் கனவில் வந்த ராமர் தான் இருக்கும் இடத்தை குறிப்பிட்டு தனக்கு அங்கு கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்படி தலைஞாயிறு சென்று சிலையை மீட்ட மன்னர் வரும் வழியில் தஞ்சாவூர் மாவட்டம் வடு ஊரில் தங்கினார். அப்போது அவரை சந்தித்த பக்தர்கள் தங்கள் ஊரிலேயே இந்த சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்க அதன் பின் அங்கு கோயிலில் எழுப்பப்பட்டு ராமாபிரான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பக்தர்களின் தீராத நம்பிக்கை
இந்த கோயிலில் அருள் பாலிக்கும் ராமரிடம் வேண்டிக் கொண்டால் பெற்றோர் சொல் கேட்கும் குழந்தைகள் பிறப்பார்கள் என்பது நம்பிக்கையாகும். மேலும் தகராறான எந்த விஷயத்திலும் நியாயமான சிந்தனை சம்பந்தப்பட்டவர்களுக்கு உதிக்கும் என்பதும் ஐதீகமாக பார்க்கப்படுகிறது. இக்கோயிலின் முன் மண்டபத்தில் கோபாலன் ருக்மணி மற்றும் சத்தியபாமாவுடன் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். பிரகாரத்தை சுற்றிலும் ஹயக்ரீவர், விஷ்வகேஷனர், ஆழ்வார்கள், ஆண்டாள் ஆகியோருக்கு சன்னதி உள்ளது.
கோயிலுக்கு வெளியே சரயு தீர்த்தமும் இடம்பெற்றுள்ளது. இந்த கோயிலில் காலை 7.30 முதல் 12.30 வரையும், மாலையில் 4:30 முதல் இரவு 8:30 வரையும் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ளலாம். இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறினால் பக்தர்கள் சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்கள். இந்த கோயிலில் ராமநவமியை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்சவம் வெகு விமரிசியாக நடைபெறும். வாய்ப்பு கிடைக்கும்போது இந்த கோயிலுக்கு சென்று வாருங்கள்.