Summer AC Hacks: இரவு முழுவதும் அறையில் ஏசி ஓடுகிறதா..? இந்த 5 விஷயங்கள் ஆரோக்கியத்தை காக்கும்! மின்சாரத்தையும் சேமிக்கும்!
AC Usage Tips: கோடை காலத்தில் ஏர் கண்டிஷனர் அதிகப்பயன்பாட்டால் ஏற்படும் ஆரோக்கியப் பிரச்சனைகள் மற்றும் அதிக மின் கட்டணத்தைத் தவிர்ப்பது குறித்து இந்தக் கட்டுரை விளக்குகிறது. சரியான வெப்பநிலை அமைப்பு, டைமர் பயன்பாடு, ஏசியின் நேரடி காற்றில் படுக்காதிருத்தல், வடிகட்டி சுத்தம் மற்றும் அறை மூடல் ஆகியவற்றைச் செய்வதன் மூலம் பணத்தையும் ஆரோக்கியத்தையும் காப்பாற்றலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

ஏசி பயன்பாடு
கோடைக்காலம் (Summer) வந்ததும் வந்தது, நாம் அதிகநேரம் பயன்படுத்துவது ஏர் கண்டிஷனர் என்று அழைக்கப்படும் ஏசியைதான். ஏசி (AC) உங்களுக்கு வெப்பத்தில் இருந்து பாதுகாத்து குளிர்ச்சியை தந்தாலும், அவற்றை அதிக நேரம் பயன்படுத்தும்போது சளி, தொண்டை புண் மற்றும் வறண்ட சருமம் உள்ளிட்ட பிரச்சனைகளை உண்டாக்கும். மேலும், ஏசியை அதிக நேரம் பயன்படுத்துவதால் மின்சார கட்டணமும் (EB Bill) தாறுமாறாக உயரும். இந்தநிலையில், கோடைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய விஷயங்களை இங்கே தெரிந்து கொள்வோம். இதை செய்வதன்மூலம், இரவில் உங்கள் ஏசியை பயன்படுத்தி சிறந்த தூக்கம், குறைந்த கட்டணம் போன்றவற்றை பெறலாம்.
வெப்பநிலை:
கோடைக்காலத்தில் மக்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்று. தங்கள் அறைகளில் ஏர் கண்டிஷனரை 16-18 டிகிரி செல்சியஸில் வைப்பதுதான். இது ஆரம்பத்தில் உங்களுக்கு குளிர்ச்சியை தரலாம். ஆனால், நீங்கள் இதே செல்சியஸில் தூங்கும்போது இது நிச்சயமாக உங்கள் உடலின் வெப்பநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி, நீங்கள் தூங்கும்போது வெப்பநிலையை சுமார் 24-26 டிகிரி செல்சியஸ் வைப்பதே சிறந்தது. இது உங்களுக்கு போதுமான குளிர்ச்சியை தருவதுடன் நல்ல தூக்கத்தையும் தரும்.
டைமர் பயன்படுத்துதல்:
பல நவீன ஏசிக்களில் ஸ்லீப் மோட் மற்றும் டைமர்கள் உள்ளது. இருப்பினும், இதை பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவது கிடையாது. அதிக விலை கொடுத்து ஏசியை வாங்கினால் மட்டும் போதாது, மின்சாரத்தை மிச்சப்படுத்தவும், சாத்தியமான வெப்பநிலையை வைக்கவும் பயன்படுத்த வேண்டும். இந்த சிறப்பு அம்சங்கள் இரவு முழுவதும் தானாகவே வெப்பநிலையை சரிசெய்து கொள்ளும். இதனால், அதிக குளிர்ச்சியை தவிர்ப்பது மட்டுமின்றி மின்சாரத்தையும் சேமிக்கலாம்.
ஏசிக்கு நேராக படுக்காதீர்கள்:
இரவு நேரம் மட்டுமல்லாமல், பகல் நேரத்திலும் ஏசிக்கு நேராக படுத்து உறங்குவதை தவிருங்கள். ஏசியில் இருந்து வெளிப்படும் குளிர்ந்த காற்று உங்கள் உடலில் நேரடியாக தாக்கும்போது, காலை எழுந்தவுடன் கழுத்து விறைப்பு, தலைவலி மற்றும் தொண்டை வலி போன்றவை ஏற்படலாம். எனவே, குறைந்தது, ஏசியில் இருந்து சில அடி தூரங்கள் தள்ளி படுப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
ஏசி வடிகட்டியை சுத்தம் செய்தல்:
ஏசி வடிகட்டிகளில் தேங்கும் அழுக்கு, தூசி, பாக்டீரியா போன்றவை உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இது நாளடைவில் உங்களுக்கு ஆஸ்துமாவை உண்டாக்கலாம். எனவே, அடிக்கடி உங்கள் ஏசி வடிக்கட்டியை சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன்படி, ஒவ்வொரு மாதமும் வடிகட்டிகளை சுத்தம் செய்வது உங்கள் ஆரோக்கியத்தை பராமரிப்பது மட்டுமின்றி, ஏசியையும் நீண்ட ஆண்டுகள் பராமரிக்க உதவும்.
மூடிய அறைக்குள் ஏசி:
ஏசி பயன்படுத்தும்போது உங்கள் அறையின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் மூடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். இது மின்சாரத்தை சேமிக்கவும் உதவும். ஜன்னல் கண்ணாடி வழியாக சூரிய ஒளியை தடுக்க திரைச்சீலைகளையும் பயன்படுத்தவும். இவை அறைக்குள் குளிர்ந்த காற்றை பராமரிக்க உதவுவது மட்டுமின்றி, ஏசியின் மீதான அழுத்தத்தை குறைக்கும்.