Food Recipes: காரசாரமான காரைக்குடி சிக்கன் மிளகு வறுவல்.. எளிதாக இப்படி செய்து பாருங்க..!
Karaikudi Chicken Pepper Fry: சிக்கன் குழம்பு, சிக்கன் 65, சிக்கன் கிரேவி போன்றவற்றை சாப்பிட்டு சாப்பிட்டு உங்களுக்கு போர் அடித்துவிட்டது என்றால், மிகவும் எளிதாகவும், உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய வகையில் காரைக்குடி ஸ்டைலில் சிக்கன் மிளகு வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்..

காரைக்குடி சிக்கன் மிளகு வறுவல்
பிராய்லர் கோழி என்று அழைக்கப்படும் சிக்கன் (Chicken) எளிய மக்களும் விரும்பி சாப்பிடக்கூடிய கறி வகை. மட்டன் கிலோ ரூ. 1000 ஆயிரத்தை கடந்து விற்கப்பட்டு வரும் நிலையில், மட்டனை வாங்காதவர்கள் எளிதாக சிக்கனை வாங்கி சமைத்து ருசிக்கிறார்கள். சிக்கனில் அதிக அளவு புரதம் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ளும்போது உடலில் சூடு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, அளவாக சாப்பிட்டு ஆனந்தமாக வாழ்க்கை அனுபவிக்க முயற்சி செய்யுங்கள். சிக்கனில் நமக்கு தெரிந்த சிக்கன் குழம்பு, சிக்கன் 65 (Chicken 65), சிக்கன் கிரேவி போன்றவற்றை சாப்பிட்டு சாப்பிட்டு உங்களுக்கு போர் அடித்துவிட்டது என்றால், இன்றைய ரெசிபி உங்களுக்கானது.
அந்தவகையில், மிகவும் எளிதாகவும், உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய வகையில் காரைக்குடி ஸ்டைலில் சிக்கன் மிளகு வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்..
சிக்கன் மிளகு வறுவல்
தேவையான பொருட்கள்:
- சிக்கன் – 1/4 கிலோ
- பூண்டு – 10 பல்
- பச்சை மிளகாய்- 3
- மிளகுதூள் – 2 ஸ்பூன்
- மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
- சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- கொத்தமல்லி – சிறிதளவு
சிக்கன் வறுவல் செய்வது எப்படி..?
- முதலில் கடைகளில் வாங்கி வந்த கால் கிலோ சிக்கனை நன்றாக தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- இப்போது, கழுவி வைத்துள்ள சிக்கன் மீது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சிறிதளவு சேர்த்து நன்றாக பிரட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
- தனியாக எடுத்து வைத்த சிக்கனை சுமார் பத்து நிமிடத்திற்கு பிறகு தண்ணீரில் நன்றாக அலசி எடுக்க வேண்டும்.
- அடுத்ததாக நன்றாக கழுவி எடுத்து வைத்துள்ள சிக்கனில் தேவையான அளவில் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக பிரட்டி கொள்ள வேண்டும்.
- இப்போது கேஸ் அடுப்பை ஆன் செய்து கடாயை வைக்கவும். கடாய் சூடானதும் மேலே குறிப்பிட்டுள்ள அளவிலான தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாகும் வரை காத்திருங்கள்.
- எண்ணெய் சூடானதும் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சைமிளகாய், கறிவேப்பிலை, பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக தாளித்து கொள்ளவும்.
- இவை எல்லாம் தாளித்ததும் மசாலா பொடி போட்டு கலந்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்றாக அடுப்பில் கிளறவும்.
- கடாயின் சூட்டில் சிக்கன் தண்ணீர் விடும் வரை பிரட்டவும். நீங்களாக, சிக்கனில் தண்ணீர் சேர்க்க வேண்டாம்
- மசாலாவுடன் சிக்கனை கிளறிவிட்டு, அடுத்ததாக அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.
- 2 முதல் 3 நிமிடங்களுக்கு ஒருமுறை மூடியை அவ்வபோது திறந்து சிக்கனை கிளறி விடவும். இல்லையென்றால், மசாலாவுடன் சிக்கனும் அடிபிடித்து விடலாம்.
- கடாயில் இருக்கும் தண்ணீர் வற்றி சிக்கன் நன்றாக வெந்ததும், கடைசியாக கொத்தமல்லி தழைகளை கிள்ளி போட்டு கிளறி அடுப்பை ஆப் செய்யுங்கள்.
- அவ்வளவுதான் சூப்பரான ருசியான காரைக்குடி சிக்கன் மிளகு வறுவல் ரெடி.