Food Recipes: காரசாரமான கறிவேப்பிலை இட்லி ஃபிங்கர்ஸ்.. 5 நிமிடத்தில் செய்வது எப்படி..?
Curry Leaves Idli Fingers: கருவேப்பிலை இட்லி ஃபிங்கர்ஸை ஒரு முறை செய்து சாப்பிட்டால், உங்கள் குடும்பத்தினர் மீண்டும் மீண்டும் கேட்டு உங்களுக்கு அன்பு தொல்லை தருவார்கள். அந்தவகையில், சூப்பரான கறிவேப்பிலை இட்லி ஃபிங்கர்ஸ் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

கறிவேப்பிலை இட்லி Image Source: Freepik
தமிழ்நாட்டில் காலை, இரவு என இரண்டு வேளைகளிலும் தோசை மற்றும் இட்லி (Idli) என சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா..? வீட்டிலேயே ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சாப்பிட ஆசை என்றால், உங்களுக்கான செய்தி இதுதான். இன்று வித்தியாசமான முறையில் கறிவேப்பிலை இட்லி ஃபிங்கர்ஸ் (Curry Leaves Idli Fingers) எப்படி செய்வது என்று இங்கே தெரிந்துகொள்வோம். மிகவும் எளிதான முறையில் 5 நிமிடத்தில் செய்து ருசிக்கலாம். இந்த கருவேப்பிலை இட்லி ஃபிங்கர்ஸை ஒரு முறை செய்து சாப்பிட்டால், உங்கள் குடும்பத்தினர் மீண்டும் மீண்டும் கேட்டு உங்களுக்கு அன்பு தொல்லை தருவார்கள். அந்தவகையில், சூப்பரான கறிவேப்பிலை இட்லி ஃபிங்கர்ஸ் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
கறிவேப்பிலை இட்லி ஃபிங்கர்ஸ்:
தேவையான பொருட்கள்:
- இட்லி – 10
- வர மிளகாய் – 5
- சீரகம் – 1 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- கடுகு – 1 ஸ்பூன்
- கல் உப்பு – 1/2 ஸ்பூன்
- பெருங்காயம் – சிறிதளவு
கறிவேப்பிலை இட்லி ஃபிங்கர்ஸ் செய்வது எப்படி..?
- வீட்டில் மீதமுள்ள அல்லது எடுத்து வைத்துள்ள இட்லியை நீளவாக்கில் அல்லது 4 துண்டுகளாக உங்களுக்கு தேவையான அளவில் வெட்டி கொள்ளவும்.
- மேலும், ஒரு தட்டில் மேலே குறிப்பிட்டுள்ள அளவிலான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
- கேஸ் அடுப்பை ஆண் செய்து ஒரு கடாயை வைத்து கொள்ளவும். இப்போது கடாய் சூடானதும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிறிதளவு பெருங்காயத்தை போடவும்.
- தொடர்ந்து, பெருங்காயம் நன்றாக பொரிந்ததும் தேவையான அளவு வர மிளகாய் போட்டு எண்ணெயில் கருக விடாமல் ஒரு நிமிடம் முதல் 2 நிமிடங்கள் வறுத்து எடுக்கவும்.
- அடுத்ததாக அதே கடாயில் தேவையான அளவு ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பை போட்டு வறுத்து எடுக்கவும்.
- இப்போது, ஒரு கொத்து கறிவேப்பிலையை போட்டு 2 நிமிடம் வரை நன்றாகவும், கருகாமலும் வதக்கி எடுக்கவும்.
- இப்போது அதே கடாயில் ஒரு ஸ்பூன் சீரகத்தை போட்டு வறுத்தவுடன் மீண்டும் எடுத்து விடவும். இப்போது வறுத்த அனைத்து பொருட்களையும் ஒன்றாக ஒரு தட்டில் போட்டு ஆற வைக்கவும். பேனில் வைத்து நன்றாக ஆறியதும் எடுத்து எல்லாவற்றையும் தண்ணீர் ஊற்றாமல் மிக்ஸியில் போட்டு பொடி போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.
- கேஸை ஆன் செய்து சட்டி சூடானதும் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு தாளித்ததும், வெட்டி வைத்துள்ள இட்லி துண்டுகளை கொட்டி ஒரு முறை நன்றாக பிரட்டி விடவும்.
- அரைத்து பொடியாக எடுத்து வைத்துள்ள கறிவேப்பிலை பொடியை இட்லியில் நன்கு கலக்கும்படி ஒன்றாக பிரட்டி எடுக்கவும்.
- தொடர்ந்து, 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மேலும் 2 நிமிடம் பிரட்டி விட்டு இறக்கி வைக்கவும்.
- அவ்வளவுதான் ஆரோக்கியமான மற்றும் சுவையான கறிவேப்பிலை இட்லி ஃபிங்கர்ஸ் தயார்.