Cockroach Control: சமையலறையில் கரப்பான் பூச்சி தொல்லையா..? இந்த பொருட்களை கொண்டு எளிதாக விரட்டலாம்!

Kitchen Cockroach Removal: சமையலறையில் கரப்பான் பூச்சிகளால் அவஸ்தைப்படுகிறீர்களா? கவலை வேண்டாம்! கிராம்பு, மண்ணெண்ணெய், முட்டை ஓடுகள், பிரியாணி இலைகள், சமையல் சோடா, போரிக் பவுடர் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி இயற்கை முறையில் அவற்றை எளிதில் விரட்டலாம். இந்த எளிய வழிமுறைகள் உங்கள் சமையலறையை கரப்பான் பூச்சி இல்லாத இடமாக மாற்ற உதவும்.

Cockroach Control: சமையலறையில் கரப்பான் பூச்சி தொல்லையா..? இந்த பொருட்களை கொண்டு எளிதாக விரட்டலாம்!

கரப்பான் பூச்சி தொல்லை

Published: 

18 Apr 2025 21:58 PM

கரப்பான் பூச்சிகள்தான் (Cockroaches) சமையலறையின் எதிரி என்றே சொல்லலாம். இவை எப்போது விளக்குகள் அணையும், எப்போது தாக்குதல் நடத்தும் என்று காத்திருக்கும். கரப்பான் பூச்சிகள் சமையலறை சிங்க்கள், அலமாரிகள், பாத்ரூம்கள் என அனைத்து இடங்களில் உலா வரும். இதனை பார்க்கும் சிலருக்கு அருவெறுப்பாக இருக்கும். மேலும், இந்த கரப்பான் பூச்சிகள் உணவு பொருட்கள், பாத்திரங்கள் என அனைத்திலும் நுழைந்து தொல்லை தரும். இது நமது உடல் நலம் (Health) மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இவற்றை உடனடியாக அழிக்காவிட்டால் பெரிய படையாக உருவெடுத்து எல்லா இடங்களிலும் வலம் வரும். அந்தவகையில், வீட்டில் இருக்கும் சில பொருட்களை கொண்டு எப்படி அவற்றை விரட்டலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

கிராம்பு:

கிராம்புகளுக்கும் கரப்பான் பூச்சிகளுக்கும் பகை என்றே சொல்லலாம். அதன்படி, கரப்பான் பூச்சி அதிகமாக வலம் வரும் இடங்களில் அதாவது சமையலறை அலமாரிகள், டிராயரில் 4 முதல் 5 கிராம்புகளை வையுங்கள். கிராம்பில் இருந்து வெளிவரும் வாசனை கரப்பான் பூச்சிகளை எளிதாக விரட்டும்.

மண்ணெண்ணெய், முட்டை ஓடுகள்:

கரப்பான் பூச்சிகளை விரட்ட சமையலறைகளின் ஒவ்வொரு மூலைகளிலும் மண்ணெண்ணெயை தெளிக்கலாம். அப்படி மண்ணெண்ணெய் கிடைக்காவிட்டால் முட்டை ஓடுகளை கரப்பான் பூச்சிகள் அதிகம் வரும் இடங்களில் வைக்கலாம். மண்ணெண்ணெயில் இருந்து வெளிவரும் வாசனைக்கு கரப்பான் பூச்சிகள் நெடிகள் தாங்காமல் ஓடிவிடும். அதன்படி, ஒவ்வொரு மூலைகளிலும் ஒரு சில துளிகள் தெளிப்பதன்மூலம், கரப்பான் பூச்சி காணாமல் போகும்.

பிரியாணி இலைகள்:

சமையலறை அலமாரிகளை திறந்தாலே கரப்பான் பூச்சிகளின் அடாவடிகள் அதிகமாக இருக்கிறதா..? இதனால் அலமாரிகளை திறக்கவே பயமாக இருக்கிறது என்றால் இந்த டிப்ஸை பயன்படுத்துங்கள். அதன்படி, இதற்கு 4 முதல் 5 பிரியாணி இலைகளை எடுத்து, அவற்றை கைகளால் நன்றாக நசுக்கி கொள்ளுங்கள். இந்த துகள்களை கரப்பான் பூச்சிகள் அதிகமாக வந்து செல்லும் அலமாரிகளில் வையுங்கள். கரப்பான் பூச்சிகளுக்கு பிரியாணி இலைகளின் வாசனை அறவே பிடிக்காது. இந்த வாசனைக்கு கரப்பான் பூச்சிகள் தலை தெறிக்க ஓடும்.

சமையல் சோடா:

அனைவரது வீடுகளில் சமையல் சோடா கண்டிப்பாக இருக்கும். சமையல் சோடா இல்லை என்றால், கரப்பான் பூச்சிகளை விரட்ட கடைகளில் கொஞ்சம் வாங்கி கொள்ளுங்கள். அதன்படி, ஒரு கப் தண்ணீரை எடுத்து கொள்ளுங்கள், அதில் ஒன்று அல்லது 2 ஸ்பூன் சமையல் சோடாவை கலந்து கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கொள்ளலாம். சமையல் சோடாவின் பவருக்கு கரப்பான் பூச்சிகள் எளிதாக இறந்துவிடும். இந்த திரவத்தை ஊற்றியவுடன், மறைந்திருக்கும் கரப்பான் பூச்சிகள் வெளியே வரத் தொடங்கி இறந்துவிடும்.

போரிக் பவுடர்:

வீட்டில் போரிக் பவுடர் இருந்தாலும், அதை கொண்டும் கரப்பான் பூச்சிகளை விரட்டலாம். சிறிது கோதுமை அல்லது மைதா மாவுடன் கலந்து சிறிய உருண்டைகளாகச் செய்து, சமையலறையிலும் அறையிலும் ஒவ்வொரு மூலையிலும் வைக்கவும். அதன்படி, ஒரு கரப்பான் பூச்சி கூட கண்களில் தெரியாது.