Best AC for Summer: கோடைக்காலத்தில் புது ஏசி வாங்க திட்டமா..? இதையெல்லாம் கவனிப்பது மிக முக்கியம்!
Choosing the Right AC: கோடை வெப்பத்திலிருந்து விடுபட ஏசி வாங்குவது முக்கியம். இன்வெர்ட்டர் மற்றும் இன்வெர்ட்டர் இல்லாத ஏசிகளின் வேறுபாடுகள், நட்சத்திர மதிப்பீடு, குளிர்ச்சித் திறன், இரைச்சல், விலை மற்றும் பராமரிப்பு ஆகியவற்றைப் புரிந்துகொள்வது அவசியம். உங்கள் தேவைகளுக்கு ஏற்ற ஏசியைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. சரியான தேர்வு மூலம் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.

ஏசி வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
கோடைக்காலம் (Summer) முழுவதுமாக தொடங்கவில்லை என்றாலும், வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இன்னும் சில நாட்களில் அடுத்தடுத்து வெப்ப நிலை உயரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கொளுத்தும் வெயில் மற்றும் அதிகரித்து வரும் வெப்பத்திலிருந்து விடுபட, பலர் தங்கள் வீடுகளில் ஏர் கண்டிஷனர்களை நிறுவ தொடங்கியுள்ளனர். ஏசிகளில் பல வகைகள் உண்டு. அதில், இன்வெர்ட்டர் (Inverter) மற்றும் இன்வெர்ட்டர் இல்லாத ஏசி என உள்ளது. அந்தவகையில், புதிய ஏசி வாங்கும்போது, உங்கள் செலவுகளை குறைக்க சரியானதை வாங்குவதை உறுதி செய்வது முக்கியம். அந்தவகையில், புதிய ஏசிகளை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
முதலில் உங்கள் தேவைகளை பொறுத்து சரியான அளவிலான ஏசியை தேர்ந்தெடுக்கவும். அதாவது உங்கள் அறையின் அளவு மற்றும் பயன்பாட்டை பொறுத்து, எவ்வளவு கொள்ளளவு கொண்ட ஏசி தேவைப்படும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். உதாரணமாக, ஒரு சிறிய அறைக்கு, குறைந்த திறன் கொண்ட ஏசி போதுமானதாக இருக்கும். அதேசமயம், பெரிய அறைக்கு, உங்களுக்கு அதிக திறன் கொண்ட ஏசி தேவைப்படும். இது உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும்.
இன்வெர்ட்டர் மற்றும் இன்வெர்ட்டர் இல்லாத ஏசிக்கு என்ன வித்தியாசம்..?
இன்வெர்ட்டர் ஏசிகள் அறை வெப்பநிலைக்கு ஏற்ப கம்ப்ரசர் வேகத்தை தானாகவே சரிசெய்யும் திறனை கொண்டுள்ளது. அறை குளிர்ச்சியடையும் போது, அழுத்தம் வேகத்தை குறைத்து, மின் பயன்பாட்டை குறைக்கும். மறுபுறம், இன்வெர்ட்டர் அல்லாத ஏசியின் கம்ப்ரசர் முழு வேகத்தில் இயங்கும். ஆஃப் செய்தால் முற்றிலுமாக நின்றுவிடும். இதன் காரணமாக, இன்வெர்ட்டர் இல்லாத ஏசி அதிக மின்சாரத்தை, இன்வெர்ட்டர் ஏசி நீண்ட நேரம் இயங்கும்போது மின்சாரத்தை மிச்சப்படுத்தும்.
நட்சத்திர மதிப்பீடு:
எந்த கம்பேனியை சேர்ந்த ஏசியை வாங்கும்போது, அதன் நட்சத்திர மதிப்பீட்டை பார்த்து வாங்குவது மிகவும் முக்கியம். 5 ஸ்டார் மதிப்பீடு கொண்ட ஏசிகள் குறைந்த மின்சாரத்தையே பயன்படுத்தும். இதனால், மின்சார கட்டணம் குறையும். இன்வெர்ட்டர் ஏசிகள் பொதுவாக இன்வெர்ட்டர் அல்லாத ஏசிகளை விட குறைவான மின்சாரத்தையே பயன்படுத்துகின்றன. எனவே, நீங்கள் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் ஏசியை பயன்படுத்துபவர்களாக இருந்தால், 5 ஸ்டார் மதிப்பீடு கொண்ட இன்வெர்ட்டர் ஏசியைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
குளிர்ச்சி மற்றும் இரைச்சல்:
இன்வெர்ட்டர் ஏசிகள் இன்வெர்ட்டர் அல்லாத ஏசிகளை விட வேகமாக அறையை குளிர்வித்து வெப்பநிலையை சீராக வைத்திருக்கும். இதன் கம்ப்ரசர் தேவைக்கேற்ப வேகத்தை மாற்றும். இதன் காரணமாக இந்த ஏசி குறைவான சத்தத்தை எழுப்புகிறது. இன்வெர்ட்டர் அல்லாத ஏசிகளில், கம்ப்ரசரை அடிக்கடி ஆன் மற்றும் ஆஃப் செய்வது அதிக சத்தத்தை ஏற்படுத்தும், இது இரவில் தொந்தரவாக இருக்கலாம். நீங்கள் குளிர்ச்சியான மற்றும் வசதியான சூழலை விரும்பினால், இன்வெர்ட்டர் ஏசி ஒரு சிறந்த தேர்வாகும்.
விலை மற்றும் பராமரிப்பு:
இன்வெர்ட்டர் ஏசிகள் இன்வெர்ட்டர் அல்லாத ஏசிகளை விட அதிக ஆரம்ப விலையைக் கொண்டுள்ளன, ஆனால் அவற்றின் நீண்ட ஆயுள் மற்றும் குறைந்த மின் நுகர்வு உங்களுக்கு நீண்ட முதலீட்டை தரும். இருப்பினும், இன்வெர்ட்டர் ஏசிகளின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் செலவு இன்வெர்ட்டர்கள் அல்லாதவற்றை விட அதிகமாக இருக்கலாம். இன்வெர்ட்டர் அல்லாத ஏசிகள் மலிவானவை. அடிக்கடி பழுதும் ஆகாது, பராமரிப்பதும் எளிது. நீங்கள் குறைந்த தேவை மற்றும் குறைந்த பட்ஜெட்டில் ஏசியை வாங்க நினைத்தால், இன்வெர்ட்டர் அல்லாத ஏசி உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.