600 பேரை பணி நீக்கம் செய்ய ஜொமேட்டோ முடிவு? – ஏஐ காரணமா?
Layoff Shock from Zomato: உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் விநியோக சேவையில் முன்னிலை வகிக்கும் ஜொமேட்டோ நிறுவனம், சமீபத்தில் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இவர்கள் பெரும்பாலும் கடந்த ஒரு ஆண்டுக்குள் தான் பணியில் சேர்த்துள்ளனர்.

உணவு மற்றும் மளிகை பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனமான ஜொமேட்டோ (Zomato) 600 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் ஒரு வருடத்திற்கு முன் தான் பணியில் சேர்ந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தையில் நிலவும் போட்டியின் காரணமாக இதன் பயன்பாடு வெகுவாக குறைந்ததாக கூறப்படுகிறது. மேலும் வணிக ரீதியாக நிறைய இழப்புகளை அந்நிறுவனம் சந்தித்து வருகிறதாம் . இந்நிறுவனத்தின் மளிகை பொருட்கைளை டெலிவரி செய்யும் பிளிங்கிட் (Blinkit) பிரவிலும் எதிர்பாரத்த வளர்ச்சி இல்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக நிறுவனத்தின் செலவினங்களை குறைக்கும் நோக்கில் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் அந்நிறுவனம் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் கடந்த ஒரு வருடத்துக்கு முன் விற்பனை பிரிவு, விநியோக பிரிவு, நிர்வாகம் மற்றும் இன்னும் சில துறைகளில் பணியாற்றுவதற்காக ஜொமோட்டோ நிறுவனம் 1500 ஊழியர்களை பணியமர்த்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பல ஊழியர்களின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமலேயே இருந்திருக்கிறது. இந்த நிலையில் தான் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாடிக்கையாளர் சேவை பிரிவில் ஏஐ
அவர்களுக்கு பணி நீக்கம் குறித்து எந்த வித முன்னறிவிப்பும் செய்யப்படாமல் இருந்திருக்கிறது. மேலும் பணி நீக்கம் செய்யும்போது அவர்களுக்கு ஒரு மாத ஊதியம் இழப்பீடாக வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஜொமேட்டோ நிறுவனம் சமீபத்தில் Nugget என்ற ஏஐ டூலை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. வாடிக்கையாளர் சேவைக்காக இந்த ஏஐ கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்த ஏஐ ஜொமேட்டோ, பிளிங்கிட், ஹைப்பர் பியூர் ஆகியவற்றிற்கு ஒவ்வொரு மாதமும் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர் சேவை தொடர்பான வேலைகளை செய்கிறதாம். ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளதற்கு இதுவும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.
நிறுவனத்தின் செயல் திறனை மேம்படுத்த ஏஐ போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் உணவு விநியோகத்தில் சுணக்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் பிளிங்கிட் பிரிவில் பொருளாதர இழப்பின் காரணமாக அந்நிறுவனம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் அந்நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து பலர் விலகியிருக்கின்றனர். கடந்த ஆண்டு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அக்ரிதி சோப்ரா உள்ளிட்ட பலர் முக்கிய பொறுப்பில் இருந்து வெளியேறியிருக்கின்றனர். இதுவும் அந்நிறுனத்தின் பின்னடைவுக்கு காரணமாக கருதப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவால் பறிபோகும் வேலைவாய்ப்புகள்
இந்த நிறுவனத்தில் இருந்து 600 பேர் வரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பது அந்த நிறுவனத்தில் தற்போது பணியாற்றும் ஊழியர்களுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் செயற்கை நுண்ணறிவு திறன் அதிகரிக்க அதிகரிக்க மேலும் பல துறைகளில் வேலை இழப்புகள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பல நிறுவனங்கள் செயல் திறனை மேம்படுத்த ஏஐ பயன்படுத்தத் தொடங்கினால் மனிதர்கள் செய்யும் வேலைகள் குறைந்து, ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யும் சூழல் எதிர்காலத்தில் உருவாகக் கூடும். ஏஐ வளர்ச்சியால், புதிய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. வாடிக்கையாளர் சேவைகளில் ஏஐ பயன்படுத்தப்பட்டு, சில நிறுவனங்கள் மனித உழைப்பை குறைக்கும் முயற்சியில் இருக்கின்றன.