World Liver Day: சீரான உணவு! குறைந்த எண்ணெய்.. உலக கல்லீரல் தினத்தில் பிரதமர் மோடி அட்வைஸ்!

PM Modi Urges Healthy Diet: உலக கல்லீரல் தினத்தையொட்டி, பிரதமர் மோடி ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும், சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பதையும் வலியுறுத்தியுள்ளார். கல்லீரல் நோய்களின் அதிகரிப்பு குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார். சமச்சீர் உணவு, உடற்பயிற்சி மற்றும் எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பது ஆகியவை கல்லீரல் ஆரோக்கியத்திற்கு அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய அமைச்சர் ஜேபி நட்டாவும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

World Liver Day: சீரான உணவு! குறைந்த எண்ணெய்.. உலக கல்லீரல் தினத்தில் பிரதமர் மோடி அட்வைஸ்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி

Published: 

19 Apr 2025 17:39 PM

டெல்லி, ஏப்ரல் 19: உலக கல்லீரல் தினத்தை (World Liver Day) முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள குடிமக்கள் கவனத்துடன் உணவுப் பழக்கத்தை கடைப்பிடித்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றும், அன்றாட உணவுகளில் எண்ணெய் பயன்பாட்டை குறைப்பது போன்ற விஷயங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்தும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) இதயப்பூர்வமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். மத்திய அமைச்சர் ஜேபி நட்டாவின் எக்ஸ் பற்றிய பதிவிற்கு பதிலளித்த நரேந்திர மோடி இந்த பதிவை குறிப்பிட்டிருந்தார்.

கல்லீரல் ஆரோக்கியம் குறித்து நரேந்திர மோடி எக்ஸ் பதிவு:

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “சமச்சீரான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான அழைப்புடன் உலக கல்லீரல் தினத்தை கொண்டாடும் ஒரு பாராட்டத்தக்க முயற்சி. எண்ணெய் பயன்பாட்டை குறைப்பது போன்ற சிறிய விஷயங்கள் பெரிய மாற்றத்தை உண்டாக்கும். உடல் பருமன் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் நாம் அனைவரும் இணைந்து ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவோம். உடல் பருமன் ஏற்படுவதை தடுப்போம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் மோடியின் பதிவு:

சுகாதார அமைச்சர் ஜேபி நட்டா தனது செய்தி குறிப்பில், “குடிமக்கள் தங்கள் சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைந்தது 10% குறைக்க உறுதியளிக்க வேண்டும். மேலும், உணவை குணப்படுத்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாக அனைவரும் பார்க்க வேண்டும். உணவை மருந்தாக கருதும்போது சிறிய மாற்றங்கள் பெரிய பலன்களுக்கு வழிவகுக்கும். பிரதமர் மோடியின் அழைப்புக்கு பதிலளிக்கும் விதமாக, உடல் பருமன், நமது சமூகத்தில் அதன் வளர்ந்து வரும் தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாம் உறுதிமொழி எடுப்போம். நான் உண்ணும் உணவில் தொடங்கி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழக்கமாக கொண்ட எதிர்காலத்தை நோக்கி ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்றார்.

உலக கல்லீரல் தினம்:

உலகம் முழுவதும் கல்லீரல் நோய்கள் வேகமாக அதிகரித்து வருகிறது. இன்றைய காலத்தில் இளைஞர்கள் கூட கல்லீரல் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். உயிரையும் இழக்கின்றனர். கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கு வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகேடுகளுடன் மது அருந்துவதும் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.

கல்லீரல் நமது உடலின் மிக முக்கியமான ஒரு உறுப்பு ஆகும், இது நச்சு நீக்கம், செரிமானம், வளர்சிதை மாற்றம் மற்றும் ஊட்டச்சத்துக்களை சேமிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். அந்தவகையில், கல்லீரல் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19ம் தேதி உலக கல்லீரல் தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், இந்தாண்டு அதாவது 2025 ஏப்ரல் 19ம் தேதி உலக கல்லீரல் தினத்தின் கருப்பொருள் ‘உணவே மருந்து என்பது ஆகும்.