ரீல்ஸ் மோகம்… குழந்தை முன்பே கங்கை ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட தாய்…

Woman Swept Away in Ganga: உத்தரகாண்டில், ரீல்ஸ் எடுக்க முயன்ற பெண் கங்கை ஆற்றில் நீரில் அடித்து செல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘அம்மா… அம்மா…’ என கதறிய குழந்தையின் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வெறும் வீடியோவுக்காக உயிரை ஆபத்துக்கு உள்ளாக்கும் செயல்களை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ரீல்ஸ் மோகம்... குழந்தை முன்பே கங்கை ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட தாய்...

குழந்தை முன்பே கங்கை ஆற்றில் அடித்துச்சென்ற தாய்

Updated On: 

17 Apr 2025 14:59 PM

உத்தரகாண்ட் ஏப்ரல் 17: கங்கை ஆற்றில் ரீல்ஸ் எடுக்க முயன்ற பெண் நீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாஷி மாவட்டம் (Uttarkashi District) மணிகர்ணிகா காட் (Manikarnika Ghat) பகுதியில் ரீல்ஸ் எடுக்க கங்கை ஆற்றில் இறங்கிய பெண், நீரின் வேக ஓட்டத்தில் அடித்து செல்லப்பட்டார். அந்த நேரத்தில் நின்றுகொண்டிருந்த அவரது சிறுமி “அம்மா… அம்மா…” என கதறி அழும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து, போலீசாரும் மீட்புப் படையினரும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை அந்தப் பெண்ணின் உடலை மீட்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெறும் வீடியோவுக்காக உயிரை ஆபத்துக்கு உள்ளாக்கும் செயலைக் கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

உயிரைப் பணயம் வைத்து பொழுதுபோக்கு

இன்றைய சமூகத்தில், சமூக வலைதளங்களில் அதிக லைக்குகளை பெற்று பிரபலமாகும்போதுதான் முக்கியம் என எண்ணும் மனப்பான்மை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் புகழ் பெற விரும்பும் இளைஞர்கள், விபத்துகள் வரை போகும் செயலில் ஈடுபடுவதும் வழக்கமாகி விட்டது. இந்நிலையில், உயிரை பணயம் வைத்து ரீல்ஸ் எடுக்க முயன்ற ஒரு பெண் கங்கை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிகர்ணிகா காட் பகுதியில் நிகழ்ந்த துயர சம்பவம்

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாஷி மாவட்டத்தில் உள்ள மணிகர்ணிகா காட் பகுதியில், ஏப்ரல் 15ம் தேதி ஒரு பெண் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். அந்த இடத்தில், கங்கை நதிக்கரை அருகில் சென்ற அவர், ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக நீரில் இறங்கினார். சிறிது நேரத்தில், அவர் தண்ணீரில் ஆழமாக சென்று நிற்கும்போது, திடீரென்று கால் இடறி நீரில் விழுந்தார். அப்போது, ஆற்றின் ஓட்டம் மிகுந்திருந்த நிலையில், அவர் உடனடியாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

‘அம்மா… அம்மா…’ என கதறிய குழந்தை

‘அம்மா… அம்மா…’ என கதறிய குழந்தை – இணையத்தில் வைரலான வீடியோ

இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், அந்த பெண் நீரில் அடித்து செல்லப்படுவதை அருகில் நின்று பார்த்த அவரது மகள், “அம்மா… அம்மா…” என கதறி அழும் காட்சி அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

மீட்புப் பணியில் தீவிரம் – உடல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை

இந்த சம்பவம் குறித்து தகவல் பெற்ற போலீசார் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், தற்போது வரை அந்தப் பெண்ணின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெறும் வீடியோவுக்காக உயிரை விட வேண்டாமே…

இந்த சம்பவம் சமூகத்தில் பலருக்குமே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. வெறும் பொழுதுபோக்குக்காக, மற்றவர்களை ரசிக்க வைக்க சில நிமிட வீடியோக்கள் உருவாக்கப்படும் போது, அந்த செயலின் ஆபத்துகள் குறித்தும் சிந்திக்க வேண்டும் என்பது இந்நிகழ்வின் மூலம் மீண்டும் ஒருமுறை தெளிவாகிறது. சமூக வலைதளங்களில் ‘பிரபலமாக வேண்டுமென்று’ உயிரை ஆபத்துக்கு உள்ளாக்கும் செயலை கட்டுப்படுத்துவது அவசியம் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.