மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை.. எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் குவிப்பு!
West Bengal Waqf Act Protests | மேற்கு வங்கத்தில் வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியது. இந்த நிலையில், முர்ஷிதாபாத்தில் ஏற்பட்ட வன்முறையில் பலர் காயமடைந்த நிலையில் சிலர் உயிரிழந்தனர். இதன் காரணமாக அங்கு மிகவும் பதற்றமான சூழல் நிலவிவதால் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

முர்ஷிதாபாத், ஏப்ரல் 14 : மேற்கு வங்கத்தில் (West Bengal) வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு (Waqf Amendment Act) எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டம், கலவரமாக வெடித்ததால் அங்கு மிகவும் பதற்றமான சூழல் நிலவுகிறது. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்த விட மாட்டோம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்த நிலையில், இந்த விவகாரம் அங்கு தீவிரம் எடுத்துள்ளது. இதன் காரணமாக மேற்கு வங்கத்தில் மேலும் 5 கம்பெனி துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் உருவாகியுள்ள கலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட வக்பு வாரிய திருத்த மசோதா
மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த சில ஆண்டுகளாகவே வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை அமலுக்கு கொண்டுவர பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. ஆனால், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், மசோதா நிறைவேற்றப்படாமல் இருந்தது. இந்த நிலையில், மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்த பாஜக அரசு, கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்பு வாரி சட்டதிருத்த மசோதாவை தாக்கல் செய்தது.
இந்த மசோதாவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கடும் விவாதங்களை முன் வைத்தனர். இது தொடர்பாக பல மணி நேரம் விவாதம் நடைபெற்ற நிலையில், அதற்கு பிறகு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மையின் அடிப்படையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த நிலையில் அது அமலுக்கு வந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் வெடித்த போராட்டம்
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இந்தியாவில் அமலுக்கு வந்திருந்தாலும் பல இடங்களில் அதனை எதிர்த்து இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இதன் காரணமாக, வப்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக அந்த மாநிலத்தில் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 150-ற்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதன் காரணமாக அங்கு கூடுதலாக 5 கம்பெனி எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.