வாவ்..பியூட்டிஃபுல்.. சுவாமி நாராயண் அக்ஷர்தம் கோயிலை கண்டு ஆச்சரியப்பட்ட ஜே.டி.வான்ஸ்!
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது குடும்பத்துடன் இந்தியாவுக்கு நான்கு நாள் பயணமாக வந்துள்ளார். டெல்லியில் உள்ள சுவாமிநாராயண் அக்ஷர்தம் கோயிலுக்கு அவர் குடும்பத்துடன் சென்று வழிபாடு செய்தது வைரலாகியுள்ளது. இந்தியா-அமெரிக்க உறவுகளை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கவும், பிரதமர் மோடியைச் சந்திக்கவும் அவர் இந்தியா வந்துள்ளார்.

புதுடெல்லி, ஏப்ரல் 21: அமெரிக்காவின் துணை அதிபரான ஜே.டி.வான்ஸ் டெல்லியில் உள்ள சுவாமி நாராயண் அக்ஷர்தம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபாடு செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று புதிய அதிபராக கடந்த 2025 ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்றார். அவரது தலைமையிலான புதிய அரசில் துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவருக்கு ஆந்திர மாநிலம் சொந்த ஊராகும். இதனிடையே துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் குடும்பத்துடன் இந்தியா வருகை தந்துள்ளார்.
அமெரிக்காவில் புதிய அரசாங்கம் அமைந்திருப்பதால், இந்தியா-அமெரிக்க உறவுகள் முன்னெப்போதையும் விட வலுவடையும் நோக்கி நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றன. இப்படியான நிலையில் தான் அமெரிக்க துணை அதிபரும் ஆந்திரப் பிரதேச மருமகனுமான ஜே.டி. வான்ஸ் நான்கு நாள் பயணமாக குடும்பத்துடன் இந்தியா வந்துள்ளார்
குடும்பத்துடன் இந்தியா வந்த ஜே.டி. வான்ஸை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து அவர் முப்படைகளின் இராணுவ மரியாதையை ஏற்றுக் கொண்டார். அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்ற பிறகு ஜே.டி. வான்ஸ் முதல் முறையாக இந்தியா வருகிறார். அவர் இன்று (2025, ஏப்ரல் 21) மாலையில் பிரதமர் மோடியை சந்திப்பார் என சொல்லப்படுகிறது.
சுவாமி நாராயண் அக்ஷர்தம் கோயிலில் ஜே.டி.வான்ஸ்
The U.S. Vice President JD Vance, Second Lady Usha Vance & their children visited Swaminarayan Akshardham in Delhi—their first stop in India—experiencing its majestic art, architecture & timeless values of faith, family & harmony.#USIndiaRelations#BAPS #Akshardham pic.twitter.com/An5JzPdv6I
— Swaminarayan Akshardham – New Delhi (@DelhiAkshardham) April 21, 2025
இந்த சந்திப்பின் போது இருநாட்டு பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் புவியியல் உறவுகள் குறித்து ஜே.டி.வான்ஸ் விவாதிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் அமெரிக்கா இந்தியாவிற்கு விதித்துள்ள வரிகள் குறித்தும் விவாதிக்க வாய்ப்பு உள்ளது. இன்றிரவு ஜே.டி. வான்ஸ் தம்பதியினருக்கு மோடி இரவு விருந்து அளிக்கிறார். நான்கு நாள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானுக்குச் செல்கிறார்கள்.
ஜே.டி. வான்ஸ் உடன் உஷா வான்ஸ் மற்றும் அவர்களது குழந்தைகள் இவான், விவேக் மற்றும் மிராபெல் ஆகியோர் முதன்முதலில் புது டெல்லியில் உள்ள சுவாமிநாராயண் அக்ஷர்த கோயிலுக்குச் சென்றனர். இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் கலாச்சார மரபுகளின் பிரதிபலிப்பாக அற்புதமாக வடிவமைக்கப்பட்ட அக்ஷர்தம் கோயிலின் அழகைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அக்ஷர்தம் கோயில் வளாகத்தில் பொதிந்துள்ள நல்லிணக்கம், குடும்ப விழுமியங்கள் மற்றும் காலத்தால் அழியாத ஞானம் ஆகியவற்றை அவர்கள் பாராட்டினர்.
இதனிடையே அங்கிருந்த விருந்தினர் புத்தகத்தில் “உங்கள் விருந்தோம்பலுக்கு மிக்க நன்றி.. என்னையும் என் குடும்பத்தினரையும் இந்த அழகான இடத்திற்கு வரவேற்றதில் நெகிழ்கிறேன். நீங்கள் துல்லியமாகவும் அக்கறையுடனும் ஒரு அழகான கோவிலைக் கட்டியிருப்பது இந்தியாவிற்கு ஒரு பெரிய பெருமையாகும். எங்கள் குழந்தைகள் அதை மிகவும் விரும்பினர். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக” என்று எழுதினார்.