காஷ்மீர் தாக்குதல்.. பின்னணியில் பாகிஸ்தான் ரெசிஸ்டன்ஸ்.. யார் இவர்கள்?
The Resistance Front : ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு பாகிஸ்தானைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட லஷ்கர் ஏ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு ஜம்மு காஷ்மீல் பல்வேறு தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளது.

காஷ்மீர், ஏப்ரல் 23: ஜம்மு காஷ்மீல் பயங்கரவாத (Pahalgam Terror Attack) தாக்குதலில் அப்பாவி மக்கள் 27 பேர் கொல்லப்பட்டது நாட்டையே உலுக்கியுள்ளது. இதில் 2 வெளிநாட்டினர் உட்பட 27 பேர் கொல்லப்பட்டு, பலர் படுகாயம் அடைந்தனர். இது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்கு பின்னணியில் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது. அதாவது, இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட லஷ்கர் ஏ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசியஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front) பொறுப்பேற்றுள்ளது.
காஷ்மீர் தாக்குதல்
ஜம்மு-காஷ்மீரின் 370வது பிரிவு ஆகஸ்ட் 2019ல் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உருவான ஒரு புதிய பயங்கரவாத அமைப்பே ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) ஆகும். இந்த அமைப்பின் தலைவராக ஷேக் சஜ்ஜாத் குல் ஆவார்.
1974ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி ஸ்ரீநகரில் பிறந்த பயங்கரவாதி குல், 2022ஆம் ஆண்டு மத்திய அரசு இவரை பயங்கரவாதியாக அறிவித்தது. இந்த அமைப்பையும் 2023ஆம் ஆண்டு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.
தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பு ஏராளமான பயங்கரவாத தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த அமைப்பு காஷ்மீரில் மிகவும் தீவிரமாக ஈடுபடும் பயங்கரவாத குழுக்களில் ஒன்றாகப் பெயர் பெற்றுள்ளது.
2022ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் கொல்லப்பட்ட 172 பயங்கரவாதிகளில் 108 பேர் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பை சேர்ந்தவர்கள். கடந்த பல ஆண்டுகளாக காஷ்மீரில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்புக்கு முக்கிய பங்கு உள்ளது.
பின்னணியில் பாகிஸ்தான் ரெசியஸ்டன்ஸ்
இந்த நிலையில் தான், 2025 ஏப்ரல் 22ஆம் தேதி இந்தியாவிக்கு கொடுமையான நாளாக அமைந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பிரபல சுற்றுலா தளமான பகல்காம் விளங்குகிறது. இங்கு தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பின் தீவிரவாதிகள் திடீரென நுழைந்து, அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் உத்தர பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, மகாராஷ்டிராவ பகுதியைச் சேர்ந்தவர்கள். இதனை அடுத்து, பயங்கரவாதிகளை கண்டறிய தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு புல்வாமாவில் 47 வீரர்கள் உயிரிழந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு பிறகு காஷ்மீல் நடந்த மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் இதுவே ஆகும். இந்த தாக்குதல் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால், ஜம்மு காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.