டெல்லி விரைந்த ஆளுநர் ரவி.. குடியரசுத் துணைத் தலைவருடன் சந்திப்பு.. பின்னணி என்ன?
Governor Ravi Meets Vice President Jagdeep Dhankhar: டெல்லியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து பேசியுள்ளார். மசோதா விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்து இருந்த நிலையில், ஆளுநர் ரவி ஜெகதீப் தன்கர் சந்திப்பு நடந்துள்ளது.

டெல்லி, ஏப்ரல் 19: டெல்லியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, (Governor Ravi) குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை (Jagdeep Dhankhar) சந்தித்து பேசியுள்ளார். தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போட்டு இருந்த ஆளுநருக்கு உச்ச நீதிமன்ற கண்டனம் தெரிவித்து, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியது. மேலும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசு தலைவருக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டு இருந்தது. இது குறித்து குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
குடியரசுத் துணைத் தலைவருடன் ஆளுநர் ரவி சந்திப்பு
அதாவது, மசோதா விவகாரங்களில் நீதிமன்றம் குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட முடியாது என ஜெகதீப் தன்கர் கூறியிருந்தார். இவரது கருத்துகளும் கடும் எதிர்ப்புகளை கிளம்பியது. இந்த சூழலில் தான், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜெகதீப் தன்கரை சந்தித்து பேசியுள்ளார்.
தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, மசோதா விவாகரத்தில் திமுக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் தொடர் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் தான் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, திமுக அரசுக்கு ஆதரவாக அமைந்தது. அதே நேரத்தில், ஆளுநர் ரவிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதாவது, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ரவி கிடப்பில் போடப்பட்டு இருந்தார். இது தொடர்பாக, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை அண்மையில் உச்ச நீதிமன்றம் வழங்கியது.
பின்னணி என்ன?
Hon’ble Governor of TamilNadu Thiru R.N Ravi met Vice President Shri Jagdeep Dhankhar today at New Delhi.@bbctamil @DDTamilNews @rajbhavan_tn @timesofindia @htTweets @IndiaToday @news7tamil @NewsTamilTV24x7 @sunnewstamil @polimernews pic.twitter.com/8OqLgbvdc7
— Thirugnana Sambandam (@Sambandam) April 19, 2025
அதில், தமிழக ஆளுநர் ரவியின் செயல்பாடு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என குறிப்பிட்ட நீதிமன்றம், ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்த 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது. மேலும், மசோதா விவகாரத்தில் ஆளுநருக்கு கெடு விதித்துள்ள உச்ச நீதிமன்றம், குடியரசுத் தலைவருக்கும காலவரம்பு நிர்ணயம் செய்து அறிவுறுத்தல் வழங்கியது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை குடியரசுத் துணைத் தலைவர் கடுமையாக விமர்சித்தார். அதாவது, “நீதிமன்றங்கள் குடியரசுத் தலைவரை வழிநடத்த முடியாது. உச்ச நீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் அரசியலமைப்பின் 142வது பிரிவு, ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையாக மாறியுள்ளது” என்று கூறினார். இவரது கருத்துக்கு பல எதிர்ப்புகள் கிளம்பின. இந்த சூழலில் தான் ஆளுநர் ரவி, ஜெகதீன் தன்கரை சந்திருக்கிறார்.