‘அமைச்சர் பதவி வேண்டுமா.. ஜாமீன் வேண்டுமா’ – செந்தில்பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி.. சிக்கலில் அமைச்சர்!
Supreme Court On Senthil Balaji : அமைச்சர் பதவி வேண்டுமா ஜாமீன் வேண்டுமா என முடிவு செய்து 2025 ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கி உள்ளது.

டெல்லி, ஏப்ரல் 24: அமைச்சர் பதவி வேண்டுமா.. ஜாமீன் வேண்டுமா என்பதை செந்தில் பாலாஜி முடிவு எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2025 ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் முடிவு எடுத்து சொல்ல வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில் அவகாசம் வழங்கி வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஜாமீனில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நிலையில், தற்போது அந்த பதவியில் இருந்து அவர் விலகுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அமைச்சர் பதவிக்கு ஆப்பு?
2011 முதல் 2016ஆம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது, வேலை வாங்கி தருவதாக கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை அவரை 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது ஜாமீன் மனு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதால், அவரது அமைச்சர் பதவி பறிபோனது. அதன்பிறகு, தொடர் விசாரணைக்கு பிறகு, நீதிமன்றம் அவருக்கு செப்டம்பர் 2024ல் ஜாமீன் வழங்கியது.
அந்த நேரத்தில் நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளை விதித்தது. இதனை அடுத்து, செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. இதற்கிடையில், செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரியும் அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததது.
இந்த மனுவை நீதிபதிகள் அபய் ஓகா மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. அந்த வகையில், 2025 ஏப்ரல் 24ஆம் தேதி விசாரணை வந்தது.
செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் கெடு
அப்போது, நீதிபதிகள் கூறுகையில், “செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளிவந்த இரண்டு நாட்களுக்கு பிறகு அவர் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். இது நேர்மையற்றது. அத்தகையை நடத்தையை பொறுத்துக் கொள்ள முடியாது.
அவர் அமைச்சராக தொடரும் போது சாட்சிகளை கலைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. செந்தில் பாலாஜிக்கு மெரிட் அடிப்படையில் ஜாமீன் வழங்கவில்லை. அரசியல் சாசன பிரிவு 21ஐ மீறியதன் காரணமாகவே உங்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
சாட்சிகளை செல்வாக்கு செலத்தக்கூடிய அதிகாரத்தை எடுத்துக் கொள்ள உரிமை வழங்கவில்லை. எனவே, நீங்கள் ( செந்தில் பாலாஜி) அமைச்சர் பதவி அல்லது ஜாமீனை தேர்வு செய்ய வேண்டும். 2025 ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும்.
தமிழக அரசின் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் உங்களது ஜாமீன் ரத்து செய்யப்படும்” என்று கூறியுள்ளது. மேலும், வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் முறையிடப்பட்ட நிலையில், அதனை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. செந்தில் பாலாஜிக்கு 2025 ஏப்ரல் 28ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.