“இப்படியா பேசுவீங்க.. பொறுப்பற்றது” சாவர்க்கர் வழக்கில் ராகுல் காந்தியை கடிந்த நீதிமன்றம்!
Supreme Court On Rahul Gandhi : சாவர்க்கர் வழக்கு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. சுதந்திர போராட்ட வீரர்கள் வரலாறு தெரியாமல் அவதூறு கருத்துகளை பேசக்கூடாது என்றும் அப்படி பேசினால் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

டெல்லி, ஏப்ரல் 25: சுதந்திரப் போராட்ட வீரர் வி.டி.சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தியின் கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து ராகுல் காந்தி எதிர்மறையான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. சாவர்க்கர் குறித்து நீங்கள் (ராகுல் காந்தி) பேசிய கருத்து பொறுப்பற்றது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
“இப்படியா பேசவீங்க.. பொறுப்பற்றது”
மகாராஷ்டிராவில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது வி.டி சாவர்க்கர் குறித்து எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது புகார் எழுந்தது. அதாவது, சாவர்க்கர் ஆங்கிலேயர்களின் ஊழியர் என்றும், அவர் ஆங்கிலேயர்களிடமிருந்து ஓய்வூதியம் பெற்றதாகவும் கூறியதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக புனே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி முறையீடு செய்திருந்த நிலையில், நீதிமன்றம் வழக்கை எடுத்துக் கொள்ளவில்லை. இதனை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு 2025 ஏப்ரல் 25ஆம் தேதியான இன்று விசாரணைக்கு வந்தபோது, ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. அதே நேரத்தில், ராகுல் காந்தியின் பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தது.
சாவர்க்கர் வழக்கில் ராகுல் காந்தியை கடிந்த நீதிமன்றம்
அதாவது, “சாவர்க்கருக்கு எதிராக ஏன் இப்படி பேசுனீர்கள்? அவர் ஒரு உயர்ந்த அந்தஸ்து கொண்டவர். நீங்கள் (ராகுல் காந்தி) ஒரு அரசியல் கட்சி தலைவர். ஏன் இப்படி பிரச்சனையை தூண்டு வகையில் பேசுறீர்கள்? உங்களது (ராகுல் காந்தி) பாட்டி இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, சுதந்திரப் போராட்ட வீரரான சாவர்க்கரைப் புகழ்ந்து கடிதம் அனுப்பியது தெரியுமா?
நமது சுதந்திரப் போராட்ட வீரர்களை நடத்தும் முறை இதுவல்ல. அவர்கள் நமக்கு சுதந்திரம் அளித்துள்ளனர். நாளை, மகாத்மா காந்தியை ஆங்கிலேயர்களின் சேவகர் என்று யாராவது கூறுவார்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி எதுவும் பேச நாங்கள் யாரையும் அனுமதிக்க மாட்டோம்.
நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான எந்த அறிக்கைகளையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து ராகுல் காந்தி எதிர்மறையான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். அடுத்த முறை அவர் இதுபோன்ற கருத்துக்களை கூறினால், உச்ச நீதிமனறம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும். ” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்தனர்.