Pahalgam Attack : பதற்றமான சூழலில் ஜம்மு & காஷ்மீர் செல்லும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி!

Rahul Gandhi Visits Jammu and Kashmir | பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பயங்கரவாத அமைப்பு ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தியது. இதில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், ராகுல் காந்தி நாளை (ஏப்ரல் 25, 2025) ஜம்மு & காஷ்மீர் செல்கிறார்.

Pahalgam Attack : பதற்றமான சூழலில் ஜம்மு & காஷ்மீர் செல்லும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி!

ராகுல் காந்தி

Published: 

24 Apr 2025 23:45 PM

சென்னை, ஏப்ரல் 24 : நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் (Opposite Party Leader) ராகுல் காந்தி நாளை (ஏப்ரல் 25, 2025) ஜம்மு & காஷ்மீர் (Jammu and Kashmir) செல்கிறார். அவர் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்துள்ளவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாக கூறப்படுகிறது. சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், ராகுல் காந்தி ஜம்மு & காஷ்மீர் செல்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில், ராகுல் காந்தியின் ஜம்மு & காஷ்மீர் பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கொடூரமாக சுட்டுக்கொலை செய்யப்பட்ட சுற்றுலா பயணிகள்

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் (Pahalgam) பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று சுற்றுலா பயணிகள் 26 பேர் பயங்கரவாத தாக்குதலில் பலியாகினர். பாகிஸ்தானை சேர்ந்த தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front) பயங்கரவாத அமைப்பு அவர்கள் மீது கொடூர தாக்குதலை நிகழ்த்திய நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொடூர தாக்குதல் உலகையே உலுக்கிய நிலையில், பாகிஸ்தான் மீது கடும் கோபம் கொண்ட இந்தியா அதன் மீது தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அட்டாரி – வாகா எல்லையை மூடிய இந்தியா

அட்டாரி – வாகா எல்லை மூடல், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ், பாகிஸ்தானியர்களின் விசா ரத்து என பல அதிரடி நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு துணை நிற்பதாக அறிவித்துள்ளன. இதன் மூலம் ஒருங்கிணைந்து இந்திய இந்த சிக்கலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

ஜம்மு & காஷ்மீர் செல்லும் ராகும் காந்தி

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் உடனான உறவில் நாளுக்கு நாள் விரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், இத்தகைய பதற்றமான சூழலில் தாக்குதல் நடத்தப்பட்ட காஷ்மீருக்கு ராகுல் காந்தி நாளை (ஏப்ரல் 24, 2025) பயணம் மேற்கொள்கிறார். அவர் அங்கு தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களை சந்தித்த நலம் விசாரிக்க உள்ளார். முன்னதாக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் இந்திய அரசுக்கு முழு ஒத்துழப்பை தருவோம் என உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.