மது பிரியர்களுக்கு அதிர்ச்சி.. புதுச்சேரியில் உயரப்போகும் மதுபான விலை!
Puducherry Liquor Price : புதுச்சேரியில் மதுபான விலை உயரலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 2025 ஏப்ரல் 24ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மதுபான விலையை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. எனவே, வரும் நாட்களில் கலால் வரி மற்றும் உரிம கட்டணம் உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது.

புதுச்சேரி, ஏப்ரல் 25: புதுச்சேரியில் மதுபான விலை (Puducherry Liquor Price) உயரக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. செலவினங்களை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு மதுபான விலை உயர்த்தலாம் என்று கூறப்படுகிறது. 2025 ஏப்ரல் 24ஆம் தேதியான நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மதுபான விலையை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் புதுச்சேரியில் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்.
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி
மகளிருக்கு மாதம் ரூ.2,500, மாணவர்களுக்கு ரூ.1,000 என அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டார். இதனை தொர்ந்து, 2025 ஏப்ரல் 24ஆம் தேதியான நேற்று முதல்வர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, புதுச்சேரி அரசின் செலவினங்களை கட்டுப்படுத்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில் குறிப்பாக, புதுச்சேரியில் மதுபான விலையை உயர்த்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
எனவே, வரும் நாட்களில் மதுபான விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரி அரசு ரூ.350 கோடி வரை வருவாயை திரட்ட நில பதிவேடு கட்டணத்தை 34 சதவீதமாக உயர்த்தவும், வாகன பதிவு கட்டணத்தை உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உயரப்போகும் மதுபான விலை
அதோடு, மதுபான கட்டணத்தை உயர்த்த முடிவு எடுத்துள்ளது. மதுபான உரிம கட்டணம், கலால் வரியை உயர்த்துவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. வருவாய் அதிகரிக்கும் வகையில், கலால் வரி மற்றும் உரிம கட்டணம் வரும் நாட்களில் உயரத்தப்படலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து அ மைச்சர் கூறுகையில், “9 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் மதுபான விலையை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. கலால் வரி மற்றும் உரிமக் கட்டணத்தை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டது. மதுபான . இது கிட்டத்தட்ட 100% அதிகரிப்பாக இருக்கும். கலால் வரி, பதிவு கட்டணம் உயர்வு போன்றவை அரசின் வருவாயை அதிகரிக்க உதவும்” என்று கூறினார்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “கலால் வரி அதிகரிப்பதன் மூலம் மதுபானங்களின் விலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். கலால் வரி உயர்த்தப்பட்டாலும், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, யூனியன் பிரதேசங்களில் மதுபான விலை குறைவாகவே இருக்கும்” என்று கூறினார்.
அதேபோல, நில பதிவு கட்டணம் 34 சதவீதம் வரை உயர்த்தப்படலாம். 2013-14 ஆம் ஆண்டில் 5 சதவீதம் உயர்த்தப்பட்டதாகவும், பின்னர், 2016-17 ஆம் ஆண்டில், அது 25 சதவீதம் குறைக்கப்பட்டதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். மேலும், அரசு பணியிடங்களை நிரப்பவும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.