ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: அமித் ஷாவுடன் பேசிய பிரதமர் மோடி – ஸ்ரீநகருக்கு செல்ல உத்தரவு
Shocking terror attack: ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு சுற்றுலாப் பயணி உயிரிழந்ததையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, நிலைமையை நேரில் பார்வையிட ஸ்ரீநகருக்கு செல்ல உத்தரவிட்டார்.

அமித் ஷா - நரேந்திர மோடி
இந்தியாவின் (India) பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றான ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22, 2025 அன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைஸ்ரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், 12 சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 இந்திய மற்றும் 3 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் காயமடைந்துள்ளனர். இதில், குதிரைகளும் தாக்குதலுக்கு உட்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் தலைவர்கள் பலரும் இந்த சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் – உள்துறை அமைச்சர் நடவடிக்கை
Anguished by the terror attack on tourists in Pahalgam, Jammu and Kashmir. My thoughts are with the family members of the deceased. Those involved in this dastardly act of terror will not be spared, and we will come down heavily on the perpetrators with the harshest consequences.…
— Amit Shah (@AmitShah) April 22, 2025
சவுதி அரேபியாவில் சுற்று பயணத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஒரு சுற்றுலா பயணி உயிரிழந்ததை அறிந்து, உடனடியாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தொலைபேசியில் அழைத்து பேசியிருக்கிறார். தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த தாக்குதல் தொடர்பாக நிலைமையை நேரில் மதிப்பீடு செய்ய பிரதமர் மோடி, அமித் ஷாவை சம்பவ இடத்திற்குச் செல்லச் சொன்னதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ”ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டவர்கள் யாரும் தப்பிக்கமுடியாது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கமளித்தேன். பின்னர் தொடர்புடைய அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினேன். இன்னும் சில மணி நேரங்களில் நான் நேரில் சென்று, ஸ்ரீநகரில் அனைத்து பாதுகாப்பு அமைப்புகளுடனும் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகளை கவலையடைய செய்துள்ளது. சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்தச் செயல், பயங்கரவாதத்தின் கொடூரத்தை வெளிப்படுத்துகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.