Caste-Based Census India: மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி கணக்கெடுப்பு.. மத்திய அமைச்சரவையில் முக்கிய முடிவு!
India's 2025 Population Count: 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி அடிப்படையிலான தகவல்கள் சேர்க்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக 2021-ல் தள்ளி வைக்கப்பட்ட கணக்கெடுப்பு, தற்போது 2025-ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. எதிர் கட்சிகளின் நீண்டகால கோரிக்கைக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு தேவையான தரவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி, ஏப்ரல் 30: வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு சேர்க்கப்படும் என்று இந்திய அரசு அரசியல் விவகார அமைச்சரவையில் முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் (Ashwini Vaishnaw) தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) தலைமையில் இன்று அதாவது 2025 ஏப்ரல் 30ம் தேதி நடைபெற்ற மத்திய அரசியல் விவகாரக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் பீகார் உட்பட பல மாநிலங்கள் ஏற்கனவே சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு (Caste Census in India) தரப்புகளை வெளியிட்டுள்ளன. கடந்த 2022ம் ஆண்டில் அப்போதைய பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அரசாங்கத்தின் கீழ், பீகார் சுதந்திர இந்தியாவின் அனைத்து சாதிகளையும் வெற்றிகரமாக கணக்கெடுத்த முதல் மாநிலம் என்ற பெருமையை பெற்றது.
சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு:
சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய வைஷ்ணவ், “அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி விவரங்கள் சேர்க்கப்படும் என்று முடிவு செய்துள்ளது. காங்கிரஸூம் அதன் இந்திய கூட்டணியும் சாதி கணக்கெடுப்பை ஒரு அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்துகின்றன என்பது அனைவரும் அறிந்ததே.
சில மாநிலங்கள் சாதிகளை கணக்கிட கணக்கெடுப்புகளை நடத்தியுள்ளன. சில மாநிலங்கள் அதை சரியாக செய்தாலும், சில மாநிலங்கள் அரசியல் ஆதாயத்திற்காகவும், தெளிவற்ற முறையிலும் மட்டுமே செய்தன. இதுபோன்ற ஆய்வுகள் சமூகத்தில் சந்தேக நிலையை உருவாக்கியுள்ள்ன. நமது சமூகக் கட்டமைப்பு அரசியலால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, சாதி எண்ணிக்கை மக்கள் தொகை கணக்கெடுப்பில் கணக்கெடுப்பு வெளிப்படைத்தன்மையுடன் சேர்க்கப்பட வேண்டும்” என்றார்.
கொரோனா தொற்றால் தள்ளிப்போன மக்கள் தொகை கணக்கெடுப்பு:
மத்திய அரசின் கூற்றுப்படி, 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா பரவல் தொற்று காரணமாக ஒத்துவைக்கப்பட்டது. இப்போது மத்திய அரசு 2025ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பை மீண்டும் தொடங்க தயாராகி வருகிறது. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நீண்ட காலமாக மக்கள்தொகையை மதிப்பிடுவதற்கு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரி வருகின்றன.
இந்தியாவில் கடைசியாக மக்கள் தொகை கணக்கெடுப்பானது 2011ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் நடத்தப்பட்டது. அப்போது, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையானது 1.21 பில்லியனாக பதிவானது. கிராமப்புற மக்கள் தொகை 84% ஆகவும், நகர்ப்புற மக்கள் தொகை 31.16% ஆகவும் இருந்தது. அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசமும், குறைந்த மக்கள் தொகை கொண்ட யூனியன் பிரதேசமாக லட்சத்தீவும் இருந்தன.